(Reading time: 11 - 21 minutes)

ம்ஹீம்... கொடுத்து வைத்தவன் என்று ரூபன் மனதில் ஒரு சின்ன பொறாமையுணர்வும், ஏக்கமும் வந்துச் சென்றது.மகளின் தலையை மெதுவாக வருடி விட்டுக் கொண்டிருந்தார் தாமஸ். ரூபனைக் கண்டதும் மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்றார் அவர். 

ஹாஸ்டல் விஷயத்தில் அவன் மேல் , அதுவும் குறிப்பாக அவனை மன்னிப்புக் கேட்க விடாத இந்திரா மீது கோபம் இருந்தது உண்மைதான். ஏனென்றால் அவனை மன்னிப்பு கேட்க வைக்கிறேன் என்று அங்கு வாக்கு கொடுத்து விட்டு வந்து விட்டு பின்னர் அதைச் செய்ய இயலாமல் போனது ஒரு வகையில் அவருக்கு அப்போது ஒரு கௌரவப் பிரச்சினையாகவே ஆகி விட்டிருந்தது.

அதனாலேயே அதன் பின் அவர்களோடு முன் போல் நெருக்கமாக பழகுவதை அவர் தவிர்த்து வந்தார். ஆனால், கடந்த சில நாட்களாக ராஜ் அவரிடம் ரூபனின் திட்டங்களைக் குறித்து பகிர்ந்துக் கொண்ட விதத்தில் அவன் மீது நல்லதொரு அபிமானம் வந்துவிட்டிருந்தது. எனவே அவனை உட்காரச் சொல்லி பேசிக் கொண்டிருந்தார். பேச்சினூடே அனியின் உடல் விசாரித்தான் ரூபன், அவளும் அமைதியாகவே பதில் கூறினாள். 

ரூபனின் பார்வையோ சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறர் பார்க்கா வண்ணம் அனியையே சுற்றி சுற்றி வந்தது. அவளது சோர்ந்த தோற்றம் அவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அருகேச் சென்று அவளை தன் தோளில் சாய்த்துக் கொள்ளலாமாவென உள்ளம் பரபரத்தது. 

ஜீவன் எல்லாவற்றையும் கவனித்தும் , கவனிக்காதபடி அமர்ந்திருந்தான். அனிக்கா அவனிடம் முன் தினமே ஷைனி தன்னையும் ஜீவனையும் குறித்துச் சொன்னதைப் பற்றி (மட்டுமே) பகிர்ந்துக் கொண்டிருந்தாள். ஏனோ அவள் அறிந்துக் கொண்டிருந்த ரூபனுடனான ஜீவனின் உரையாடல் குறித்து அவனிடம் அவளுக்குச் சொல்லத் தோன்றவில்லை. 

அனிக்கா ஷைனிப் பற்றி கூறிய நேரம் முதலாய் ஜீவன் இந்திராவிடம் புலம்பித் தள்ளி விட்டான். ஷைனியை வீட்டுக்கு வர விடக் கூடாது என்று தன் அன்னையிடம் பிடிவாதமாகச் சொல்லிக் கொண்டு இருந்தான்.

மருமகளின் தங்கையை வீட்டுக்கு வராதே என்று எப்படிச் சொல்ல முடியும் என்று இந்திரா எண்ணினாலும், அதை அப்படியேக் கூறினால் மகனை சமாதானப் படுத்த இயலாது என்பதால் தான் அந்த விஷயத்தைப் பார்த்துக் கொள்ளுவதாகக் கூறி ஜீவனை அமைதிப் படுத்தினார். கணவரிடமும் இதைக் குறித்து பகிர்ந்துக் கொண்டார். அவர்கள் இருவரும் குடும்பத்தில் அமைதி நிலவும் பொருட்டு இந்த விஷயத்தை பெரிது படுத்தாமல் புறக்கணிக்கவே முடிவெடுத்தார்கள்.

தாமஸுடன் பேசி விட்டு ரூபன் விடைப் பெறும் தருணம் அறைக்குள் கிறிஸ் வந்தான். இருவரும் நின்றபடி உற்சாகமாக உரையாடிக் கொண்டு இருந்தார்கள். ஜீவன் சற்று முன் தான் விடைப் பெற்றுச் சென்றிருந்தான். தாமஸ் அவ்விருவரின் உரையாடலில் கவனம் பதித்து இருந்தார். 

அனிக்கா தான் அமர்ந்து இருந்த வாக்கிலேயே முதன் முறையாக ரூபனைப் பார்த்தாள். ஆம் அவன் தன்னைக் காதலிப்பதாக அறிந்துக் கொண்டப் பின்னர் அவள் அவனைப் பார்க்கும் முதல் பார்வையல்லவா?

பெண்ணுக்கே உரித்தான ஆராய்ச்சிப் பார்வை அது.

" என்னைக் காதலிக்கிறானாமா?"

இன்னொரு முறை தன்னையேக் கேட்டுக் கொண்டாள் அவள். அவனுடைய தலை முதல் கால் வரை அவள் பார்வை படிந்தது. 

"அழகன்"தான் மனதிற்குள் சொல்லிக் கொண்டாள் அவள்.

யாரோச் சொன்னார்கள்.

பிரிவு அன்பை வளர்க்குமாம்

 

அவள் அன்பு

என்பால் வளர்ந்தால்

அவளைப் பிரிவது

உயிர் வலி என்றாலும்

நான் சகிப்பேனே ...

 

என்றவன் உள்ளத்தில்

கேள்வி எழுந்தது

புது

துன்பம் கொணர்ந்தது

 

அன்பை வளர்க்க 

மறந்தாலும் சகித்திடுவேன்

 

ஆனால், ஒருவேளை

பிரிவால்

அவள்

என் முகம் 

மறந்து விட்டால்

நான் சகியேனே.......

 

கண்ணே என்னை நினைப்பாயா?

பிரிந்தாலும் என்னை மறவாயா?

தொடரும்

Episode # 09

Episode # 11

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.