(Reading time: 18 - 36 minutes)

டேய், ஏன்டா இப்படி அவக்கிட்ட வாய்க்கொடுக்குற?” என்று கேட்ட வெற்றியை கேள்வியுடன் பார்த்தாள் கண்மணி.

“உனக்கு, இவரைத் தெரியுமா?”

“யெஸ் கண்ணு. இவன் என்னுடைய ப்ரண்ட் . உங்க ரெண்டு பேரையும் சந்திக்க வைக்கணும்னு ரொம்ப ட்ரை பண்ணேன். பட் சார் தான் ரொம்ப பிசி”

“டேய், பிசியா? டெய்லி என்கூட ஃபோன்ல கடலை போடுற நீ! என்னமோ வாரத்துக்கு ஒருதடவை பேசுற மாதிரி சொல்லுற?” என்று ராகவன் கேட்கவும்,

“மச்சி கடலை கிடலைன்னு அசிங்கப்படுத்தாதே.. ஏற்கனவே விஹா வீட்டுல எங்க காதலுக்கு நிறைய எதிர்ப்பு.. இதுல இந்த மாதிரி நடக்குதுன்னு கண்ணு போட்டு கொடுத்திட போறா.. அப்பறம் நானும் உன்னை மாதிரி கட்டபிரம்மச்சாரித்தான்டா!” என்று வெற்றி பயப்பட கண்மணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ இங்க என்ன நடக்குதுன்னு ரெண்டு பேரும் சொல்லுறிங்களா?” என்று அவள் கேட்கவும்,

“சரி சரி.. போதும்டா வெற்றி. “ என்று நண்பனைப் பார்த்து கண்ணடித்த ராகவன், “ ஹாய் மிஸ் கண்மணி.. நான் ராகவேந்திரன்” என்று கூறி கை நீட்டினான் அவன். அவனுக்கு கைக்கொடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பது போல நடித்தாள் கண்மணி. அவள் கைக் கொடுப்பதற்குள் கண்களைப் பறிப்பதுபோல காரின் ஒலி அவர்களது முகத்தில் அடித்தது. கண்மணி தாமதப்படுத்தியதால், நீட்டியிருந்த கையை பின்னிழுத்த ராகவன் சாலையை வெறிக்க, கண்மணியும் “யாரது?” என்பது போல நிமிர்ந்தாள்.

கேமராக்களின் “க்ளிக்” என்ற சத்தமே கூறியது வருவது சத்யன்தான் என! தனது ஆறடி உயரத்தை காரிலிருந்து இறங்கி அவன் காட்டிட பெண்களின் கண்களில் ஆசையும் ஈர்ப்பும் தெரிந்தது. வழக்கத்திற்கு மாறாக பெரிதாக புன்னகைத்தவன், தனது அன்னைக்கு கார் கதவை திறந்து விட்டான். எதற்கும் அஞ்சாதவள் நிரூபணா! ஆனால் பூவின்மீது மொய்க்கும் வண்டைப்போல சத்யனை தொடரும் பார்வைகளின் மத்தியில் அவளுக்கு நிற்க சங்கோஜமாய் இருந்தது. ஒரே பார்வையில் அவளது மனதை புரிந்து கொண்ட சத்யன் தனது அன்னையிடம் சமிக்ஞை காட்டிட, நிரூவின் கரங்களைப் பிடித்துக் கொண்டார் சுலோட்சனா. ஆர்வமாக அவளைப் பார்த்தவர்களுக்கு பதிலளிப்பது போல, “தங்கச்சி வாம்மா” என்று சத்தமாகவே கூறியிருந்தான் அவன்.

அந்த ஒரே நொடியில், நிரூபணாவின் மனதில் உயர்ந்துவிட்டிருந்தான் சத்யன். இதுவரை “ சிடுமூஞ்சி, திமிர் பிடித்தவன், தலைகணம் உள்ளவன்” என்று பிறரால் சித்தரிக்கப்பட்டவனை மிக அருகில் நின்று கண்டுக்கொண்டாள் அவள்.

காதால் கேட்பதும் பொய்தான் ! ஆம், நம்மை சுற்றி உள்ள அனைவருமே நமது வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் துணை நிற்பவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறதா என்ன? இருளில் நமது நிழலே துணையாய் வருவதில்லை. அப்படியிருக்கும்போது மற்றவர்களை கண்மூடித்தனமாய் நம்பிவிட முடியுமா? அது எத்தனை அறிவீனம்? என்று உணர்ந்தாள் நிரூபணா.

சத்யன் நுழைந்ததுமே அங்கு ஏற்பட்ட பரபரப்பையும் ஆர்ப்பரிப்பையும் கண்மணி, ராகவன், வெற்றியும் கவனித்துக் கொண்டிருந்தனர். எதிர்ச்சையாய் வெற்றியை கண்ட சத்யன், உடனே அவன் பக்கமாய் வந்து நட்பு ரீதியாக அவனை அணைத்துக் கொண்டான். சுலோட்சனா  ஸ்னேகமாய் புன்னகைக்க, கண்மணி அவரிடம் இரண்டு வார்த்தைகள் பேசினாள்.

ண்ண விளக்குகளாய் பிரம்மாண்டமாய் அலங்கறிக்கப்பட்ட மேடை! தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய ஜாம்பவான்களைத் தொடங்கி, கடைநிலை தொழில்நுட்ப கலைஞர்கள்வரை அனைவரும் குழுமியிருந்தனர். அவர்களுக்கு பின்னே, அவர்களை தூக்கி நிறுத்திய ரசிகர் கூட்டம்! அந்த அரங்கில் சத்யன் நுழையவும் விசில் சத்தத்திலும், கூச்சலிலும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திட அவனுடன் இணைந்து வந்த நிரூபணா, வெற்றி, கண்மணி மூவருக்கும் அது ஒரு புது அனுபவமாக இருந்தது. நிரூவின் கைகளை சுலோட்சனா ஆறுதலாய் பற்றியிருக்க, வெற்றியின்  கைகளை ஆதரவுக்காக பிடித்துக் கொள்ள நினைத்தாலும் அந்த எண்ணத்தை அடக்கி கொண்டாள் கண்மணி. “சந்தேகப்பட கூடாது” என்று எப்படி விஹாஷினிக்கு வகுப்பு எடுத்தாளோ, அதே போல சந்தேகிக்கும்படி நடந்துகொள்ள கூடாது என்பதில் அவளும் தெளிவாகவே இருந்தாள்.

தோழியின் எதிர்காலத்திற்காக அவளுடன் ஒரே வீட்டில் தங்குவதாய் இல்லை என்று வெற்றி முடிவெடுத்தது போலவே, விஹாஷினியின் பெற்றோர் அவர்களின் நட்பை பார்த்து புருவம் உயர்த்தும்படி நடக்க கூடாது என்பதில் கண்மணியும் தெளிவாக இருந்தாள்.

தங்களது பசிக்கு நல்ல விருந்து கிடைத்த சந்தோஷத்தில் அனைவரின் முகங்களையும் விழுங்கிக் கொண்டிருந்தன கேமராக்கள். தொலைக்காட்சியில், வெற்றியின் முகத்தைக் கண்டதுமே பெரிதாய் புன்னகைத்தாள் விஹாஷினி. தனது குட்டித் தங்கையிடம் சொல்வதைப் போல வெற்றியை அனைவருக்குமே அடையாளம் காட்டினாள் அவள்.

புன்னகைப்பதை நிறுத்தாமலேயே இருந்தான் சத்யன். அவன் கண்கள் அரங்கையே ஆவலுடன் நோக்கின. அவனுடைய சிரித்த முகம் க்லிக் செய்யப்பட்டது மட்டுமின்றி அடுத்த சில நொடிகளிலேயே ரசிகர்களால் ஃபேஸ்பூக், வாட்ஸப்பில் பகிரப்பட்டு ட்ரெண்டிங்க் ஆகத் தொடங்கியது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.