(Reading time: 14 - 28 minutes)

பெட்ரூமின் ஒரு பகுதியை தடுத்து சித்தார்த் சுயமாக அந்த அறையை நிர்மாணித்து இருந்தான். முன்பு கட்டிலின் பின்னே ஒரு கதவு வழியே அந்த அறைக்கு செல்ல முடியும்.. அந்தக் கதவை அடைத்து விட்டு  இந்த “மாடர்ன் பாதாள பைரவி” மாடல் வாயிலை சித்தார்த் வடிவமைத்திருந்தான்.

தனது அம்மா மாலை வாங்கி வர போன் செய்த போது இந்த வேலையில் தான் மும்மரமாக இருந்தான். அவனுக்கு அபூர்வாவிடம் இதைக் காண்பிக்க பரபரத்தது. அதனாலேயே அரங்கத்தில் அவள் நாட்டியம் முடிந்ததும் இருப்பு கொள்ளாமல் தவித்தான்.

ங்கு கலையரங்கில் சிறப்பு நிகழ்ச்சிகள் முடிவு பெற்றதன் அடையாளமாக தேசிய கீதம் ஒலிக்கவும் சித்தார்த் வந்து சேரவும் சரியாக இருந்தது.

அபூர்வா அருகில் வந்து நின்று கொண்டு தேசிய கீதம் முடிந்ததும்,

"பில்லி உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்லு பார்க்கலாம்" தன் கையில் இருந்த பையை  அவள் முன் ஆட்டினான் சித்தார்த்.

அவன் கையில் இருந்த பையைப் பார்த்ததுமே அது என்ன என்று அபூர்வாவிற்கு தெரிந்து விட்டது. அவனிடம் இருந்து அதை வாங்கிக் கொள்ள கைகள் பரபரத்த போதிலும் கொஞ்சம் கெத்து காண்பிக்க வேண்டாமோ..

"ஹும் கும். ஸ்மால் வால் டாங்கி" அவள் சொல்ல

"பால்கோவா நக்கிங் மங்கி" இவன் பதிலுக்கு வாரினான். இது இன்று நேற்றல்ல... பல ஆண்டுகளாகவே தொடரும் பழக்கம்.

அபூர்வாவிற்கு பால்கோவா என்றால் உயிர். சாப்பிடுவது தயிர் சாதமா பால்கோவாவா என்று பிரித்து அறிந்திராதபடி உண்பது தான் அவளின் வழக்கம். அதுவும் கைகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் துகள்களை நக்கவில்லை எனில் சரித்திரம் சவுண்ட் கொடுத்து விடுமே...

"எல்லாம் எங்களுக்கா போய் வாங்கி சாப்டுக்க தெரியும்"

"சரி போய் வாங்கிக்கோ..நான் போய் அங்கே டான்ஸ் ஆடுன குட்டிஸ்க்கு கொடுக்கறேன்"

அவன் அந்தக் குழந்தைகளை நோக்கி நடக்க இவள் வேக நடை போட்டு அவனுக்கு முன்

சென்று விட்டிருந்தாள்.

"ஹாய் குட்டீஸ் நீங்க எல்லோரும் ரொம்ப நல்லா ஆடுனீங்க. மதுவந்தி தில்லானா ரொம்ப பிரமாதமா இருந்துது...கீப் இட் அப்"

"தேங்க்ஸ் அக்கா" கோரஸாய் குழந்தைகள் நன்றி சொல்லவும்

"சித்து இவங்க எல்லோருக்கும் சாக்லேட்ஸ் வாங்கிட்டு வந்தியே...குடு"

"ஹை சாக்லேட்" உற்சாகமாகினர் குழந்தைகள்.

என்ன தான் மொமெண்ட்டோ பெற்றாலும் சிறு பிள்ளைகளுக்கு சாக்லேட் என்றாலே தனி குஷி தானே..

அபூர்வாவை நோக்கி  இரு புருவங்களையும் உயர்த்தி," என்ன இப்படி மாட்டி விட்டுட்டே" என்ற பாவனையில் கொஞ்சம் திருட்டு முழி விழித்தது ஒரு கணமே... சட்டென்று புன்னகை சிந்தி கண்ணடித்தவன்

"உங்க எல்லோருக்கும் சாக்லேட் தரேன்...உங்க அக்காவும் டான்ஸ் ஆடினாங்களே... அவங்களுக்கு என்ன கொடுக்கலாம்" தன் கையில் வைத்திருந்த பையில் இருந்து ஒரு பெரிய கேட்பரி சாக்லேட் பாக்ஸை பிரித்தபடியே அந்த சிறார்களிடம் வினவினான்.

"அல்வா குடுத்திரலாம் அங்கிள்" ஒரு சுட்டி சட்டென கூறிவிட அங்கு சிரிப்பலை.

அந்தக் குழந்தை சித்தார்த்தை அங்கிள் என்று சொன்னதும் அபூர்வாவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது. குழந்தைகள் முன்னிலையில் மிகவும் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள்.. 

"என்ன குட்டி இப்படி சொல்லிட்டீங்க. இவங்க மட்டும் அக்கா நான் அங்கிளா"

சித்தார்த் அந்தக் குழந்தைக்கு இன்னொரு சாக்லேட் கொடுத்தபடியே கேட்க அந்தக் குழந்தையோ ரொம்பவுமே சாமர்த்தியமாக " நீங்க ஸ்மார்ட்டா உயரமா இருக்கீங்க. அதான் அங்கிள் சொன்னேன்" எனவும் இப்போது அபூர்வா கலகலவென சிரித்தாள்.

"அக்கா நீங்க தானே அபூர்வா அக்கா. இன்டர்நேஷனல் டான்ஸ் காம்படிஷன்ல வின் பண்ணவங்க. எங்க குரு சொன்னாங்க, வின் பண்ண அக்கா இன்னிக்கு ஆடுறாங்கன்னு" அந்த குழுவில் சற்று பெரிய குழந்தை அபூர்வாவிடம் கேட்கவும் அபூர்வாவின் முகத்தில் சட்டென ஒரு இறுக்க திரை விழுந்தது.

"ஆமா இந்த அக்கா தான். சரி குட்டீஸ். நாங்க கெளம்பனும். நீங்க எல்லாம் டின்னர் சாப்பிட போங்க ஓகே ...சி யு பை"

"பை அங்கிள் பை அக்கா" குழந்தைகள் இருவரிடமும் கைகுலுக்கி விடை பெற்றுக் கொண்டிருந்தனர்.

ஸ்மரணையே இல்லாமல் எங்கோ பார்வை நிலைகுத்தி இருக்க இயந்திரமாய் கை குலுக்கிக் கொண்டிருந்தவளிடம் "போகலாமா"  என்று அவன் கேட்டதை அவள் உணர்ந்தாளில்லை.

"அக்கா" அவள் கை பற்றிக் கொண்டிருந்த சிறுமி அவளை உலுக்கவும் "ஹ்ம்ம்" என்று தெளிந்தாள்.

"என்னம்மா"

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" சொல்லிவிட்டு சிட்டாய் பறந்து சென்று விட்டாள் அந்தச் சிறுமி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.