(Reading time: 11 - 22 minutes)

 06. தவமின்றி கிடைத்த வரமே - லேகா

Thavamindri kidaitha varame 

ருள் ப்ரியாவிடம் சொல்லி இரு வாரங்கள் ஓடிவிட்டன. அதன்பின் என்ன நடந்தது என்று அருளுக்கும் தெரியவில்லை. அன்று அவன் வீட்டில் இருந்ததால் நடந்தவை எல்லாவற்றையும் ஒரு பார்வையாளனாய் அவனால் காண முடிந்தது. ஆனால், அதன் பின், அவன் தொழில் விஷயமாக வெளியூர் சென்றதால், எதுவுமே தெரியாமல் போயிற்று ப்ரியாவிற்கு. இதுபோன்ற விஷயங்களை இவர்களிடம் கேட்டா முடிவெடுப்பார்கள்?

வைரமுத்துவையே மிஞ்சும் அளவுக்கு அந்த ரூமுக்குள் நடை போட்டுக்கொண்டிருந்தாள் ப்ரியா. அவளது மனம் குழம்பிய குட்டையாக இருந்தது. அன்றிலிருந்தே இந்த நிலைமையில் தான் இருக்கிறாள் ப்ரியா.

ப்ரியாவுக்கு ஏனோ இப்போது திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு எண்ணம் எழவில்லை. தான் தேர்ந்தெடுத்த துறையில் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிட பெரிதும் விரும்பினாள் ப்ரியா. அதற்கு திருமணம் சரிப்பட்டு வராது என்பது அவள் எண்ணம். அதற்கும் காரணம் இருந்தது. இந்த இரு வருடத்தில் திறமையுள்ள பல பெண்கள் திருமணமானபின் பல காரணங்களால் வேலையில் இருந்து நின்றதைக் கண்ட அவள் மனம், தனக்கும் இதே நிலைமை வருமோ என்று தவித்தது. அதன் விளைவாய் ஒரு முடிவுக்கும் வந்திருந்தது.

தனக்கு வருபவரிடம் தெளிவாக இதைப் பற்றி பேசி, இடையூறாக நில்லாதவரையே மணப்பது என்று. ஆனால், அதனை அப்பாவிடம் அமாவின் மூலம் சொல்லிக்கொள்ளலாம் என்று நினைத்து இவள் தள்ளிப்போட, இவள் தந்தையோ, அதுபோல எதற்கும் வாய்ப்பு தராமல் தடாலடியாக எல்லாவற்றையும் நடத்தி விடுவார் போல் இருக்கிறதே என்று ப்ரியா எண்ணிக்கொண்டிருந்த நேரம், ப்ரியாவின் சிந்தனையைக் கலைத்தது அவளது அலைபேசி. எரிச்சலோடு எடுத்துப் பார்த்தவள் முன் பளிச்சிட்டது அவளது தாயின் பெயர்.

“ஹலோ அம்மா… எப்படி இருக்கீங்க… அப்பா எப்படி இருக்கார்?”

“நல்லா இருக்கோம் ப்ரியா. வெளியே இருக்கியாடா?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "நிர்பயா" - புத்தம் புதிய தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“இல்லைம்மா. இனி தான் கிளாம்பனும். சொல்லுங்கம்மா” என்று கேட்டாள் ப்ரியா. ப்ரியாவின் அம்மா ஏதேனும் முக்கியமாக அல்லது நீண்ட நேரம் பேசுவதென்றால், அதற்குமுன் ப்ரியா இருக்கும் இடம் அதற்கு ஏற்றதா என்று அறிந்துகொண்டே ஆரம்பிப்பார். எனவே, ஏதோ முக்கியமானதாக பேசப் போகிறார் என்று உணர்ந்தாள் ப்ரியா.

அவளது கூற்றை பொய்யாக்காமல், “கண்ணு, இந்த வாரம் நீ ஃப்ரீயா டா?” என்று வினவினார் அவளது தாய்.

‘ஏதோ முடிவு பண்ணிட்டாங்க’ என்று நினைத்து, என்ன சொல்லலாம் என்று யோசித்தாள். “மோஸ்ட்லி ஃப்ரீயா இருக்க சான்ஸ் இல்லம்மா. ஏதாவது முக்கியமான விஷயமா?”

“உன்னைப் பார்த்து ரொம்ப நாள் ஆச்சே கண்ணு. அதான் வரசொல்லலாம்ன்னு” என்று மறுபக்கத்தில் இருந்த அவள் தாய் தன் அருகில் அமர்ந்திருக்கும் கணவனைப் பார்த்துக்கொண்டே கூறினார். எதிரில் அமர்ந்திருந்த ப்ரியாவின் தந்தையின் முகத்தில், மகள் என்ன சொல்வாளோ என்ற ஆவல் ஒரு புறம், அதோடு சேர்த்து, மற்றுமொரு உணர்வு அவரிடம் இருந்தது. என்ன அது?

“ஓஓஓ… நான் கூட ஏதாவது முக்கியமா டிஸ்கஸ் செய்ய கேகுறீங்களோன்னு நினைத்தேன்ம்மா. எனக்கும் ஊருக்கு வரனும்போல இருக்கு. நான் இங்கே எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொல்றேன்” என்று ப்ரியா கூற, மேலும் சில வார்த்தைகளைப் பேசி தொடர்பை துண்டித்தார் மீனாட்சி. எதற்காக வர சொல்லியிருப்பார்கள் என்று யோசித்தது ப்ரியாவின் மனம்.

ப்ரியாவின் வீட்டில், (கோவையில்)

மீனாட்சியின் எதிரில் இருந்த கைலாசநாதன், உடனே வினவினார். “என்ன வர்றாளா?”. அவரது குரலில் ஏக்கம் அப்பட்டமாகத் தெரிந்தது.

“பாத்துட்டு சொல்றேன்னு சொன்னா” என்று மனைவி பதிலளிக்க, “ஓஓஓ….” என்றவரின் குரல் தாழ்ந்து போயிற்று.

‘இவ்வளவு பாசத்தைத் தன்னுள் வைத்துக்கொண்டு எதற்காக வெளிவேஷம் போடவேண்டும்? தானும் துன்பப்பட்டு மகளையும் ஏன் துன்புறுத்த வேண்டும்?’ என்று உள் அறையை நோக்கி செல்லும் கணவனை நினைத்து கலங்கினார் மீனாட்சி.

மகள் என்ன கேட்டாலும் அடுத்த நிமிடமே செய்து முடித்துவிடுவாராம். ஆனால், தான் செய்தது என்று காட்டமாட்டாராம். இந்த ஒரு விஷயத்தில் கணவனை சுயநலவாதி என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை அவரால். தன்னைப் பற்றி யோசித்தவர், மகளுக்கும் மனது என்று ஒன்று இருக்கும் என்றும், அது தந்தை பாசத்துக்காக ஏங்கக்கூடும் என்று நினைக்கவில்லையே.

அவர் ஒவ்வொரு முறையும் ப்ரியாவை கண்டுகொள்ளாமல் செல்லும்போதும், வார்த்தைகளால் சுடும்போதும் ப்ரியா தவிக்கும் தவிப்பைக் காண்பவர்தானே இவரும்.

ப்ரியாவும் எத்தனையோ தடவை கேட்டுவிட்டாள். “அப்பா ஏன்ம்மா விலகிப்போறார்? என்னை அவருக்குப் பிடிக்கலையா?” என்று. அவள் அவ்வாறு கேட்கும்போது, முழுவதும் சொல்லிவிட அவரது மனம் துடிக்கும். ‘நீ என்றோ அவர் இருப்பது தெரியாமல் யாரிடமோ விட்ட வார்த்தையின் வினைதான் இதுவென்று. ஆனால், அப்போதோ, அவள் சிறுபெண். எதுவும் அறியாதவயது. அதை இன்றும் எண்ணி தன்னையும் பிறரையும் காயப்படுத்தும் இவரை என்னவென்று சொல்வது?

எப்போதும்போல, காலமே பதில் கூறட்டும் என்று விட்டுவிட்டு, காய்ந்த துணிகளை எடுத்து மடிக்கச் சென்றார் மீனாட்சி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.