(Reading time: 11 - 22 minutes)

தே பரிச்சயமான இடம், பல இனிமையான தருணங்களைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள். ஆனால், எப்போதும் இருக்கும் கலகலப்பு துளியும் இல்லை ப்ரியாவிடம். அவளது அருகில் வர்ஷினியும் யாதவும். மூவரும் பேசிக்கொள்வதோடு, அவ்வப்போது வாயிலையும் பார்த்தவண்ணம் இருந்தனர். அவர்கள் எதிர்பார்த்திருந்தது, ப்ரனிசஷை. அவர்களை நீண்ட நேரம் காக்க வைக்காமல் வந்து சேர்ந்தான் ப்ரனிஷ்.

“ஹாய் காய்ஸ்!” என்றவாறே யாதவிற்கு அருகில் அமர்ந்தான் ப்ரனிஷ். நால்வரும் வாரம் ஒரு நாள் வெளியிலோ, வர்ஷினியின் வீட்டிலோ சந்தித்துக்கொள்வது வழக்கம். முடிந்தவரை அந்த நாள் அனைவருக்கும் வசதியாக சனியாகவோ ஞாயிறாகவோ இருக்கும். இன்றும் அதேபோல ஒரு நாளில் இந்த சந்திப்பு.

புன்னகையுடன் வந்த ப்ரனிஷைப் பார்த்தால் ஏதோ நல்ல மூடில் இருப்பதுபோல் உள்ளதே. நாம் நினைத்ததை யாதவ் வாய்விட்டே கேட்டுவிட்டான்.

“என்ன மச்சி… ரொம்ப சந்தோசமா இருக்க போல?”

“ஆமாம் மச்சி. அம்மா இப்போ ஃபோன் செஞ்சிருந்தாங்க. அவங்களும் அப்பாவும் இந்த திங்கள் ஃப்ரேன்ஸ் போறாங்களாம்” என்று குதுகலத்துடன் சொன்னான் ப்ரனிஷ்.

“சந்தோசமானதுதான். பட் ஏன் திடீர்ன்னு? அவ்வளவு தூரம் பயணம் செய்யமாட்டாங்கன்னு சொன்னீங்களே!” என்று வினவினாள் வர்ஷினி.

“ஆமாம். அக்காவும் எத்தனையோ தடவை கூப்பிட்டுப் பார்த்து சலித்துவிட்டாள். ஆனால், ரித்துக்கு தம்பியோ தங்கச்சியோ பொறக்கப்போறாங்கன்னு கேட்டதும் அம்மா துள்ளிக் குதிச்சு வரேன்னு சொல்லிட்டாங்க” என்று உவகையுடன் கூறினான் ப்ரனிஷ்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“வாவ்… அப்போ நம்ம சுச்சிக்கா…” என்று சந்தோசத்துடன் கேட்ட யாதவிடம் அதே புன்னைகையுடன் தலையசைத்தான் ப்ரனிஷ்.

அதன்பின் அனைவரும் ப்ரனிஷிடம் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதும், ஜாலியாக பேசுவதுமாக சென்றது. நேரம் செல்ல செல்ல, ப்ரியாவும் தன் குழப்பங்கள் அனைத்தையும் மறந்து தன் வழக்கமான மனநிலைக்கு ஓறளவு வந்திருந்தாள்.

இரண்டு மணி நேரம் கடந்தபின், யாதவ் வர்ஷினியுடன் விடைபெற, தனித்துவிடப்பட்டனர் ப்ரனிஷும் ப்ரியாவும். இதுவரை எதையும் நினைத்து பார்க்காத ப்ரியாவின் மனம், இப்போது மேலும் செய்யவேண்டியவற்றைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தது.

நாம் என்னதான் பல யுத்திகளைக் கையாண்டு வேதனைகளையோ தீர்வு காண முடியாத பிரச்சனைகளையோ ஒத்திப்போட முயன்றாலும், நம் மனம் அவற்றை தோண்டியெடுத்து கவலை கொள்ள செய்துவிடும். அதே கதியில் இருந்தாள் ப்ரியா. நினைத்து மகிழ ஆயிரம் இருக்க, அவற்றை எல்லாம் விட்டு, தந்தை என்ன செய்யப்போகிறார் என்று குழப்பத்தில் இருந்தாள் ப்ரியா.

அவள் முகத்தைக் கண்ட ப்ரனிஷ், ப்ரியா தன் சுயத்தில் இல்லை என்று புரிந்து கொண்டான். அவள் இருக்கும் இடத்தில் அமைதி என்ற சொல்லே out of dictionary என்றாகி விடுமே. அவனும் வந்ததிலிருந்து பார்க்கிறான். ப்ரியாவை ஏதோ ஒன்று குடைந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்துபோனது.

இருவரும் சந்தித்த நாட்களில் இருந்து ப்ரனிஷிற்கு உற்ற தோழியாய் இருப்பவள் ப்ரியா. அது ஏனோ, ப்ரியாவைப் பார்க்கும்போது நீண்ட நாள் பழகிய ஒரு உணர்வு தோன்றும் ப்ரனிஷிற்கு. யாதவும் வர்ஷினியும் காதலிப்பதாலும், இவர்கள் இருவரும் அவர்களுடனேயே எப்போதும் சேர்ந்திருப்பதாலும், இருவரையும் காதலர்களா என்று கேட்டவர்கள் பலர். அவர்களிடம் ஒரு சிறு புன்னகையை உதிர்த்து மேற்கொண்டு எதுவும் பேசாமல் அமைதியாக சென்று விடுவர் இருவரும். இருவருக்குமே தங்களுக்கு இடையேயான உறவைப் பற்றிய புரிதல் இருந்தது. ஒருவருக்கொருவர் எத்தகைய இடராக இருந்தாலும் உதவும் ஒரு நல்ல நட்பு அது. அதனை நேம்போர்ட் ஒட்டி அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதில் இருவருக்குமே உடன்பாடில்லை.

“ரியா…. அக்கா, மாமா, ரித்துக்கு ஏதாவது வாங்கிட்டு வர அம்மா சொன்னாங்க. இன்னைக்கு ஈவினிங் திருச்சி போறேன். என்ன வாங்குறதுன்னு புரியலை. என்கூட வந்து செலக்ட் செய்து தர்றியா?” என்று கேட்டான் ப்ரனிஷ்.

ப்ரியாவிற்கு ஷாப்பிங் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால், இப்போது இருக்கும் மனநிலையில் வர இயலாது என்று மறுத்து கூற நினைத்தவள், ப்ரனிஷின் உறுதியான நிலைப்பாட்டைக் கண்டு ஒத்துக்கொண்டாள்.

இருவரும் சேர்ந்து அந்த மாலில் இருந்த கடைகளுக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கினர். அந்த நேரத்தைப் பயன்படுத்தி, ப்ரனிஷும் ப்ரியாவை சகஜமாக்க முயன்று, அதில் வெற்றியும் கண்டான்.

ப்ரியா பஸ்ஸில் வந்திருந்ததால் அவளை வீட்டில் விட்டுச் செல்வதாகக் கூறி தன் காரில் ஏற்றிக்கொண்டான் ப்ரனிஷ். சிறிது தூரம் சென்றதும் மெல்ல பேச ஆரம்பித்தான்.

“என்ன குழப்பம் ப்ரியா?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.