(Reading time: 20 - 40 minutes)

தாட்சாயிணி….”

தன்னையும் அறியாமல் அவன் உதடுகள் உச்சரிக்க, அவன் இதழ்கள் விரிந்த அதே வேளை, அவனது விழிகளோ சந்தோசத்தில் நீரை சிந்தியது மளமளவென…

அவன் அணுதினமும் கண்ட கனவினை இன்று நனவாக நெருப்புக்குள் அவளை காண்கையில், அவன் உடலெங்கும் ஓர் அதிர்வு பேரலையாக எழுந்து அவனது சிரமேற, அவன் கால்கள் தரையிலிருந்து குதித்தெழுந்தது வேகமாய்…

கணமும் தாமதிக்காமல், அவன் அவளை நோக்கிப் பாய இருந்த வேளை, அவளுக்கும் நெருப்புக்கும் இருந்த இடைவெளி அவனது கண்களுக்கு காட்சியளித்தது விருந்தென…

வீட்டின் பின்புறமிருந்து அவள் வெளிப்பட, அங்கே எரிந்து கொண்டிருந்த நெருப்பிற்குள் அவள் நிற்பது போல் காட்சியளித்தது முதலில்…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "என்றென்றும் அன்புடன் - 02..." - காதல் கலந்த தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்..

அவள் நகர்ந்து நகர்ந்து அவனை நோக்கி வர வர, நெருப்பு வீட்டின் பின்புறத்திலேயே இன்னமும் எரிந்து கொண்டிருப்பதையும், அவளுக்கும் நெருப்புக்கும் இருந்த தூரம் அவனுக்கு புரிந்தது…

அவளை எவ்வாறு அவன் காரில் பார்த்தானோ அதே போன்று அவன் இப்போதும் அவளைப் பார்க்க நேரிட, நெருப்பை மட்டுமே பல மணி நேரமாக பிரதிபலித்த அவன் விழிகள், சட்டென குளிர்ந்த சந்திரனாய் மாறிப்போனது….

அவனின் உச்சரிப்பு, பிரம்மரிஷிக்கு சற்றே நிம்மதி அளிக்க, அவனது முகமாற்றமோ, அவரை சிந்திக்க வைத்தது…

அவன் பார்க்கும் திசையில் அவரும், இஷானும், தைஜூவும் பார்க்க, மூவருக்குமே சுவாசம் அப்போது தான் வந்தது சீராய்…

“எம்பெருமானே உன் கருணையே கருணை……” என பிரம்மரிஷி வாய்விட்டு கூறிவிட்டு ஈசனை நினைத்து கண்மூட, அவரின் கண்களுக்குள் அதுநேரம் வரை வர மறுத்திருந்த காட்சி விரிந்தது வேகமாய்…

வீட்டை முழுதும் சூழ்ந்திருந்த நெருப்பையே சதி இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்த போது,

“ம்ருத்யூ………………..” என அவள் உதடுகள் உரைக்க, பட்டென உடலெங்கும் ஓர் அதிர்வும், சந்தோஷமும் அவளுக்கு வர, அவளின் தன்னவன் அவள் கண்களுக்குள் வந்திருந்தான் அழகாய்…

அப்போது அவள் இருந்த அறைக்கதவு திறக்க, ஒருவன் வந்து நின்றான் அவளின் முன்னால்…

“ஜெய் சாருக்கு நான் எதாவது கைமாறு செய்யணும்னு காத்திருந்தேன்… ஆனா இன்னைக்கு உன் உயிரை காப்பாத்துறது மூலமா அந்த சந்தோஷம் எனக்கு கிடைக்கும்… என்னை நம்பும்மா… என் கூட வா… இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த வீடு இடிஞ்சு விழுந்துடும்… வா….” என அவன் அழைக்க,

முன்னே பின்னே தெரியாதவனாக இருந்தாலும், அவன் தன்னவன் பெயரை உச்சரித்து அவளை காப்பாற்ற முனைய, அவள் சம்மதித்து, அவனின் பின் சென்றாள்…

வீட்டின் பின்புறம் திறந்து வைத்திருந்த கதவின் வழியே அவளை வெளியே அழைத்து வந்தவன், வீட்டிற்கு சற்று தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் பின்னே சென்று நிற்க வைத்தான்…

“எனக்கு ஜெய் சார் நிறைய உதவி செஞ்சிருக்கார்ம்மா… நான் இப்போ திருந்தி ஒரு மனுஷனா வாழுறேன்னா அதுக்குக் காரணமே அவர் தான்ம்மா… இந்த பைரவ் கிட்ட நானும் ஒருநாள் வேலை பார்த்தவன் தான்ம்மா… ஒரு கேஸ்ல நான் உள்ளப்போகுற நிலைமை… என் பொண்டாட்டி, பிள்ளை எல்லாம் என்னை வெளியே எடுக்க சொல்லி எவ்வளவோ கெஞ்சினாங்க பைரவ் கிட்ட… ஆனா அவன் கண்டுக்கவே இல்லம்மா… ஒரு தப்பை சரியா செய்ய முடியாதவன் வெளியே இருந்து என்ன செய்யப்போறான்?... உள்ளேயே இருந்துட்டு போகட்டும்… உன் செலவுக்கு இந்த பணத்தை வச்சிக்கோன்னு சொல்லி என் பொண்டாட்டிகிட்ட கொஞ்ச பணத்தை கொடுத்துட்டு போயிட்டான்ம்மா அந்த பாவி… அவனை மாட்டிவிடக்கூடாதுன்னு நினைச்சு தான் நான் பழியை ஏத்துக்கிட்டேன்… கடைசியில அவன் எனக்கே துரோகம் செஞ்சிட்டான்…”

“என் பொண்டாட்டி தினமும் என்னை ஜெயிலுக்கு பார்க்க வர்றதை கவனிச்ச ஜெய் சார், என்னை அவர் தான் காப்பாத்தி வெளியே எடுத்தார்… அதோட நிக்காம எனக்கு ஒரு வேலையும் வாங்கி கொடுத்து என் குடும்பத்துக்கும் ஒரு நல்ல வழி காட்டினார்… நான் இந்த தொழிலிலிருந்து வெளிவந்துட்டேன்னு தெரிஞ்சதும் பைரவ் எங்கிட்ட எதுவும் பேசுறது இல்ல… நேத்து எதேச்சையா அவனைப் பார்க்குற நிலைமை வந்துச்சு… அப்போதான் அவன் தனக்கு ஒரு உதவி பண்ணனும்னு கேட்டுகிட்டான்… அப்போதான் ஜெய் சார் அவனை பிடிச்சு உள்ள தள்ளின நியாபகம் வந்துச்சு… ஜெயிலில் இருந்து தப்பிச்சு வந்தவனை எப்படியாச்சும் சார்கிட்ட பிடிச்சு கொடுக்கணும்னு நினைச்சு திட்டம் போட்டேன்.. அந்த நேரத்துல தான்,  வீட்டை சுத்தி பெட்ரோல் ஊத்த சொன்னான்… அப்போதான் பைரவ் உன்னையும் சாரையும் கொல்ல நினைச்சது எனக்கு தெரிய வந்துச்சு… அதான் அவன் வீட்டுக்கு நெருப்பு வச்சிட்டு போனதும், ஏற்கனவே ரெடி பண்ணி வச்சிருந்த சாவியை வச்சு திறந்து, உன்னை நான் காப்பாத்தினேன்மா….”

அவன் அனைத்தையும் சொல்லி முடித்ததும், கண்ணீரோடு அவனுக்கு நன்றி கூறினாள் சதி…

ஜெய் அவனை தூக்கிக்கொண்டு நெருப்பு எரியும் வீட்டிற்குள் செல்ல இருந்த போது, ஜெய்யிடம் செல்ல இருந்தவனை தடுத்தான் அவன்…

“அவன் சாக வேண்டியவன்ம்மா… நீ போகாத இப்போ… சாகட்டும் அவன்…” என்றவன் சதியை  போகவிடாமல் தடுத்து நிறுத்தியிருந்தான்…

நடந்து முடிந்த நிகழ்வை பிரம்மரிஷி தன் மனக்கண்ணில் பார்த்து முடித்ததும்,

“ஈசனே எல்லாம் உன் செயல்…” என்றார் சந்தோஷத்துடன்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.