(Reading time: 25 - 50 minutes)

ல்லை மகளே… மலை, வனம் என்று எங்கும் நிறைந்திருக்கும் தாமரை மலர்களை கொண்டு வரவேண்டும்… அது சற்றே சிரமமான காரியம்…”

“இல்லை தந்தையே… என் தந்தைக்கு கிடைக்கும் வெற்றிக்கு நான் எத்தனை சிரமப்பட்டாலும் அது எனக்கு வலி கொடுத்திடாது சிறிதும்…”

சதியின் வாய்ச்சொற்களைக் கேட்டு, உள்ளம் பூரித்தார் பிரஜாபதி…

“சதி…. மகளே… பூஜைக்கு நிறைய தாமரை மலர்கள் வேண்டுமம்மா…”

“அனைத்தையும் நான், என் உடன் பிறந்தவர்களோடு சேர்ந்து சென்று பறித்து வருகிறேன் தந்தையே… இதற்கு மேலும் மறுக்காதீர்கள்… இது ஒரு மகளாய் நான் என் தந்தைக்கு செய்யும் கடமை… அதனை தடுத்து என் கடமைக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள் தந்தையே…”

கரம் கூப்பி வேண்டும் மகளின் கரத்தினைப் பிடித்தவர், மகளை வாஞ்சையுடன் பார்க்க,

“கவலை வேண்டாம் தந்தையே… நாங்களும் சதியுடன் சென்று வருகிறோம்…” என சதியின் உடன் பிறந்த தமக்கைகள் முன் வந்து கூற, பிரஜாபதி சரி என்றார்…

“போய் வாருங்கள்…” என்று வழி அனுப்பி வந்த தந்தையின் புன்னகை முகத்தினைக் கண்ட பின்னர் தான் அங்கிருந்து நகன்றாள் சதி…

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வளர்மதியின் "நிழலாய் உன்னை தொடரும்..." - திகிலூட்டும் அமானுஷ்ய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

சதியும் அவளின் சகோதரிகளும் தாமரை மலர் தேடி வனத்திற்கு செல்ல, அங்கே சற்று இடைவெளி விட்டு விட்டு, தாமரை மலர்கள் குளத்தில் பூத்திருந்தது…

குளத்தின் அந்த புறம், இந்த புறம் என்று மாறி மாறி, அவர்கள் பூக்களை சேகரிக்க, அப்போது சதியின் கண்முன்னே வந்து நின்றது ஓர் அழகிய வண்ணத்துப்பூச்சி…

அது அவளின் கண்களைக் கவர, அதனைப் பிடிக்கும் முயற்சியில், கை உயர்த்த, அது பறந்து சென்றது… அதனைப் பின் தொடர்ந்தவாறே, அவள் செல்ல, அது பறந்து சென்று ஒரு குளக்கரையை எட்டியது….

அங்கே அநேக தாமரை மலர்கள் நிறைந்திருக்க, சகோதரிகளையும் அழைத்தவள், அந்த மலர்களை சேகரித்துக்கொண்டிருந்த பொழுது, அவளின் கரங்களைத் தொட்டு நின்றது நேற்று அவள் கைசேர்ந்த ருத்திராட்சம்… அதன் மேலேயே அவளை இதுநேரம் வரை பரிதவிக்க விட்ட வண்ணத்துப்பூச்சியும் ஒருங்கே காண, அவளின் சந்தோஷம் இரட்டிப்பானது…

“சதி… இங்கே மலர்கள் தீர்ந்துவிட்டன… நாம் அடுத்த குளத்திற்கு செல்லலாம்… வருகிறாயா?...”

அவளின் தமக்கை அழைக்க,

“இதோ வந்துவிட்டேன் அக்கா….” என்றவள் பட்டென அந்த ருத்திராட்சத்தை தன் கைகளுக்குள் மறைத்துக்கொண்டு கிளம்ப, வண்ணத்துப்பூச்சியும் அவளைப் பின் தொடர்ந்தது…

மலர்களை சேகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நடந்து வந்து கொண்டே இருந்தவள், இறுதியில் அந்த மலையின் அடிப்பாகத்தை அடைய, அங்கே அவள் சிலரின் அறிமுகத்தைப் பெற்றாள்…

இடைகளில் காவி உடையும், நெற்றி, மற்றும் கரங்களில் திருநீறும், விரல்களில் ருத்திராட்ச மாலையை ஒவ்வொன்றாக எண்ணியபடி, தியான நிலையில் கண் மூடி அமர்ந்திருந்தனர் அங்கே பல முனிவர்கள்…

அவர்களின் தோற்றமும், அவர்களும் வேறுபாடாய் அவளுக்குத் தெரிய, அப்படியே விழி விரியப்பார்த்தாள் அவள்…

பின்னர் சற்று நாழிகைக்குள்ளாகவே, வேறு இடத்திற்கு வந்துவிட்டோமோ என்ற எண்ணம் எழ, கால்களை நகர்த்த அவள் மனம் நினைத்த பொழுது,

“வா மகளே….” என்ற குரல் அவளை நகரவிடாமல் செய்தது அங்கிருந்து…

சத்தம் வந்த திசையை பார்த்து அவள் நிற்க, உயரமான அந்த பாறையின் மீதிருந்து எழுந்து வந்தார் ஒரு மகரிஷி…

“என்ன மகளே அப்படி பார்க்கிறாய்?... நீ தேடி வந்த மலர்கள் இங்கு நிறைந்திருக்கிறது… வா.. வந்து எடுத்துக்கொள்…”

“மலர்களா?... நான் மலர்கள் தேடி வந்தது, தங்களுக்கு எப்படி தெரியும்?... அதுவுமில்லாமல் நான்…..”

“தெரியும் மகளே… நீ யார் என்பதும் நாம் அறிவோம்… பிரஜாபதி தட்சன் நடத்தும் யாகத்திற்காகத்தானே அவரின் புதல்வி நீ வந்திருக்கிறாய் மலர்களைத் தேடி…”

அவர் சொன்னதும், சிறு வியப்புடன் அவரை அவள் பார்க்க,

“வா மகளே… அங்கே தான் அந்த மலர்கள் இருக்கிறது… வா…”

அவரின் குரல் அவளை அங்கிருந்து திரும்பி போகவிடாமல் தடுக்க, இறுதியில் அவருடன் சென்றாள்…

அவள் அவருடன் நடந்து செல்கையிலே, தியானத்தில் அமர்ந்திருந்த முனிவர்கள் அனைவரும் எழுந்து அவளை வணங்க, அவளும் பதிலும் வணங்கியபடியே தயக்கத்துடன் சென்றாள் அந்த மலைப்பாதையில்…

சில நேரத்திற்குப் பின், அவர்கள் இருவரும் ஓரிடத்தை அடைய, அங்கே கண்ட காட்சியில் அப்படியே பிரம்மித்துப்போனாள் சதி…

நீண்ட நெடியதாய் லிங்க மலை ஒன்று ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்க, அதனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் அவள்…

அவளின் பார்வை மகரிஷியின் முகத்தில் புன்னகையை வரவழைக்க,

“நீ தேடி வந்த மலர்கள் உன் கையில் கிடைத்தாலும், உன் தந்தை நடத்தும் யாகம் வெற்றி பெறாது மகளே…” என்றார் அவர்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.