(Reading time: 25 - 50 minutes)

யாகத்தில் தன்னை ஈடுபடுத்தியிருந்தாலும், மனதின் ஓர் மூலையில் மகள்களை எதிர்பார்த்து காத்திருந்தார் பிரஜாபதி…

அவரை அதற்கு மேலும் காத்திருக்கவிடாமல், வந்தாள் சதி…

“தந்தையே… இதோ தாமரை மலர்கள்… இதை வைத்து யாகத்தை முழுமை செய்யுங்கள்…”

மகளின் வார்த்தைகளில் மகிழ்ந்து போனவர், பெருமிதமாய் காசியப்பரையும், பிருகுவையும் பார்க்க, காசியப்பர் புன்னகைத்தார்… ஆனால் பிருகுவின் முகத்திலோ யோசனை படர்ந்திருந்தது…

மலர்களை கொண்டு அர்ச்சனை செய்தபின், இப்போது சிலையை உள்ளே கொண்டு வர முயற்சி செய்ய சொல்ல, பணியாட்களும் முயல, சிலை அசையவில்லை…

அந்த நேரம் அங்கிருந்து ஒருவர் நழுவிச் செல்வது போல் இருக்க, அது யாரென இனம் கண்டு கொண்டு அவரைப் பின் தொடர்ந்தாள் சதி…

“தாம் தானே… அந்த சிற்பத்தை செதுக்கிய சிற்பி?...”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

“ஆம் தேவி….”

“தாம் ஏன் இங்கிருந்து வெளியேற நினைக்கிறீர்கள்?...”

“பெரும் தவறு செய்த பாவி நான் இங்கிருக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் தேவி…”

“தவறா?... என்ன கூறுகிறீர்கள்?... எனக்கு புரியவில்லை…”

“சிற்பத்தை முழுமையாக நான் செதுக்கவில்லை தேவி… அதனால் தான் சிலை கோவிலுக்குள் நுழைய மறுக்கிறது…”

“என்ன?..................”

சினத்துடன் அவள் அவரைப் பார்க்க,

“ஒரு சிற்பத்தை சிரத்துடன் செதுக்கி தராது, இப்படி என் தந்தையை அனைவரின் மத்தியிலும் அவமதித்து விட்டீர்களே… இது நியாயம் தானா?...”

“இல்லை தேவி… நான் அவர் அவமதிக்கப்படக்கூடாது என்று தான் எண்ணுகிறேன்… உங்கள் தந்தையிடத்திலும் மன்றாடினேன்… ஆனால்…..”

“ஆனால் என்ன?...”

“அது….” என இழுத்தவர்,

பின் தெளிவான மனதுடன், தன் தோள் மீது போட்டிருந்த துணிப்பையிலிருந்து ஒரு சிவலிங்கத்தை எடுத்து அவளின் முன் நீட்ட அவள் அதிர்ந்தாள்…

“இந்த சிவலிங்கத்தை அதனின் இடத்தில் வைத்துவிட்டால், அதன் பின் அனைத்தும் சுபம் தான் தேவி…”

அவள் சற்றே பின் வாங்க, “பின்வாங்க இதில் ஏதுமில்லை தேவி… இதை அதனின் இடத்தில் சேர்க்காவிட்டால், நிச்சயம் சிலை கோவிலுக்குள் நுழையாது…” என்றார் அவர்…

சற்று முன் அந்த மகரிஷியை சந்தித்த நிகழ்வுகள் கண் முன்னே வந்தாட, தானாகவே அவள் இதழ்கள் அந்த வார்த்தையினை உதிர்த்தது…

“இல்லை… அனைவரும் சேர்ந்து என்னை ஏமாற்ற முயலுகிறீர்கள்… என் தந்தை நடத்தும் யாகத்தை தோல்வியுறச் செய்ய நினைக்கிறீர்கள்… அதற்கு ஒருநாளும் நான் சம்மதிக்கமாட்டேன்…”

“சத்தியமாய் நான் தங்களை ஏமாற்றவில்லை தேவி… என் தொழில் மீது ஆணையிட்டு சொல்லுகிறேன்… இந்த சிவலிங்கத்தை அதன் இடத்தில் வைத்தால் மட்டுமே சிற்பம் முழுமையடையும்… என்னை நம்புங்கள் தேவி… நான் பொய்யுரைக்கவில்லை…”

அவர் கெஞ்ச, அவள் மனம் அசையவில்லை… அதே நேரம் அங்கே சிலையும் சற்று கூட அசையவில்லை…

“பாருங்கள் தேவி… இன்னும் எத்தனை பேர் சேர்ந்து இழுத்தாலும், ஒன்றும் நடவாது… சத்தியம் என்று ஒன்று உள்ளது தேவி… அதனின் வழி நடந்தால் மட்டுமே சிலை உள்ளே பிரவேசிக்கும்… இல்லையேல், பெரும் அனர்த்தம் நிகழ்ந்துவிடும் தேவி… தங்களின் தந்தை பிரஜாபதியின் கீர்த்திக்கும் பெரும் களங்கம் ஏற்பட்டுவிடும் தேவி… அதனை தடுத்து நிறுத்துங்கள் தேவி… தடுத்து நிறுத்துங்கள்…”

அவர் அழுதுகொண்டே கூறிய வார்த்தைகளில், கடைசியாக சொன்ன வார்த்தை, அவளின் மனம் இளக்கியது…

“தங்களின் தந்தை பிரஜாபதியின் கீர்த்திக்கும் பெரும் களங்கம் ஏற்பட்டுவிடும் தேவி… அதனை தடுத்து நிறுத்துங்கள் தேவி… தடுத்து நிறுத்துங்கள்…”

திரும்ப திரும்ப அவள் காதுகளில் அந்த வார்த்தைகளே ஒலிக்க, அவள் மனம் சில நொடிகளில் தன் முடிவினை எடுத்த வேளை, அவளது இரண்டு கரங்களும் சிற்பியினை நோக்கி நீண்டது…

மனம் மகிழ்ந்து போன சிற்பி, சிவலிங்கத்தை அவள் கைகளில் வைத்த தருணம், அவளது விழிகளில் நீர் திரண்டு, தேகம் எங்கும் சிலிர்த்து போக, மனமோ ஒருவித உவகையில் ஆட்கொண்டது முழுமையாய்….

“செல்லுங்கள் தேவி… நேரமாகிறது… செல்லுங்கள்…”

அவர் அவளை அவசரப்படுத்த, அவளின் மோன நிலை அறுபட்டது… சிவலிங்கத்தை தன் ஆடையால் மூடி, மெல்ல அங்கிருந்த கூட்டத்தினுள் நுழைந்தாள்…

அனைவரும் சிலை நகர்கிறதா என்று பார்க்கும் ஆவலில் கோவிலின் உள்ளே இருக்க, சிலை மட்டும் வாசலில் இருந்தது…

சதி மெதுவாக வாசல் பக்கம் வந்து, அந்த சிவலிங்கத்தை, ஸ்ரீவிஷ்ணுவின் சிற்பத்தில், அதற்கென இருந்த இடத்தில் வைத்தவள்,

“இப்பொழுது முயலுங்கள்…” என்று கூற, கயிற்றினை பிடித்து இழுக்க ஆரம்பித்தார்கள் அவர்கள்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.