(Reading time: 25 - 50 minutes)

யார் இறைவன்?... இடுகாடே கதி… சாம்பலே சந்தனம்… சர்ப்பமே அணிகலன்…. உலர்ந்த ருத்திராட்சமே எல்லாம்… என சடைமுடியுடன் இடையில் அரை ஆடையுடன் திரிகிறானே அவனை தாங்கள் வேண்டுமென்றால் இறைவன் என்று ஏற்றுக்கொள்ளலாம்… ஆனால் எனக்கு அந்த பரந்தாமன் ஒருவரே போற்றுதலுக்குரிய, பெருமைக்குரிய இறைவன்…”

“வைணவத்தை உயர்த்தி, சைவத்தை தாழ்த்தி பேசுவது எந்த வகையிலும் முறையல்ல பிரஜாபதி….”

“முறை!!.......... அதை தாம் எனக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை… நான் தங்களை இங்கே அழைக்காத போது, தாம் இங்கே எந்த முறையில் வந்தீர்கள்?... இது எந்த வகை முறையில் சேரும் தேவமகரிஷி?.....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வளர்மதியின் "நிழலாய் உன்னை தொடரும்..." - திகிலூட்டும் அமானுஷ்ய தொடர்கதை...

படிக்க தவறாதீர்கள்...

“சத்தியம் என்ற ஓர்முறையினை மட்டுமே சாரும் பிரஜாபதி… தாம் இறைவனாக பூஜிக்கும் அந்த பரந்தாமன் தான் தனது சிற்பத்தில் சிவலிங்கத்தையும் இடம் பெற செய்திருப்பது… அந்த தர்மத்தையும், சத்தியத்தையும் மறந்து, தாம், ஸ்ரீவிஷ்ணுவின் சிலையை பிரதிஷ்ட செய்ய விழைவது சத்தியமன்று என்று உரைக்கவே யாம் இங்கு எமது சீடர்களோடு வந்தோம்….”

“தமது அறிவுரைகள் எதுவும் எமக்கு தேவையில்லை… எனது மகளின் மனதை கலைத்தது தான் தமது சத்தியமா?... அதுதான் தங்களுக்கு தர்மமாக தெரிகிறதா?...”

“தேவியின் மனதை நான் மாற்றவில்லை… தேவி சத்திய வழி தெரிந்து நடந்து கொண்டார் அவ்வளவே……”

“எது சத்திய வழி?... நான் எனது இறைவனுக்கு ஆலயம் எழுப்பி, சிலை பிரதிஷ்டை செய்வதில் அனர்த்தம் நிகழ்த்துவது தான் தங்களது சத்திய வழியா?...”

“செய்யும் சிலை பிரதிஷ்டையில், இருக்க வேண்டிய சிவலிங்கம் இல்லாமல் போவது தான் அனர்த்தம்… அதை தான் தங்கள் மகள் தடுத்து தங்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார்… அதுமட்டுமின்றி, இறைவனை துதிக்க, தூய உள்ளம் போதும்… அந்த மனதோடு இறைவனை பூஜித்தால், அவர் நிச்சயம் அதற்குரிய பலனைத் தருவார்….”

“அந்த தூய உள்ளம், அந்த சிவனின் அம்சமென தாங்கள் அனைவரும் உளறிக்கொண்டிருக்கும் தங்களது மன்னனிடத்தில் தான் இருக்கிறது என்று பெருமை போற்ற வந்தீர்களா இங்கே?...”

பிரஜாபதி சிறு நகையுடன் கேட்க,

“நிச்சயமாய்… எல்லாம் வல்ல அந்த ஈசனின் ஆதியினையும் அந்தத்தினையும் கண்டவர் எவருமிலர்… அதுவே சத்தியமும் கூட… அந்த ஈசனின் அம்சம் தான் எம் மன்னரும்… ஈசனே என் மன்னராக அவதரித்திருப்பதாக தான் யாம் நம்புகிறோம்…”

“ஹாஹா… உமது மன்னனுக்குத்தான் பிறந்த தேதி, நாள், நட்சத்திரம் எதுவும் கிடையாதே… அவன் எந்த நேரத்தில் இந்த உலகத்தில் ஜனனம் கொண்டான் என யாருக்குமே தெரிந்திடாதே… அதுதானே சத்தியமும்….”

பிரஜாபதி எள்ளி நகையாட, தேவமகரிஷியோ அமைதியாக இருந்தார்…

“பிறப்பு தெரியாது என்று கூறுகிற தாங்கள், அவனுக்கு இறப்பும் கிடையாது என்று தானே உளறுவீர்கள்?... இந்த கதையெல்லாம் கேட்கவோ, நம்பவோ நான் சாமானியன் இல்லை… நான் தட்ச பிரஜாபதி… இப்போது இருக்கும் இந்த உலகத்தை படைத்திட்ட, பிரம்மதேவனின் மகன்…”

அவர் பெருமையுடன் கூற, தேவமகரிஷியோ புன்னகைத்தார்…

“அந்த பிரம்மதேவனின் வணக்கத்திற்குரியவர் தான் எம்பெருமானும்… அதே பிரம்மதேவனின் பெருமைக்குரிய, பிரியத்திற்குரியவர் தான் எங்களது மன்னனும்…. மக்களுக்கு தன் மன்னனே கடவுள்… அந்த வகையில், அந்த ஈசனின் அவதாரமான எம் மன்னரே எங்களுக்கும் கடவுள்… எங்களுக்கு கவலைகள் கிடையாது… அதையும் மீறி, எங்களின் உள்ளத்தில் கவலை ஏற்பட்டாலும், அவரிடம் மானசீகமாக மனதோடு உரையாடினால் கூட போதும், அந்த கவலை சில நொடிகளில் எங்களை விட்டு அகன்றுவிடும்… அவரும் எங்களின் கண் முன்னே வந்து நிற்பார்…”

தேவமகரிஷி, பக்தியுடன் பூரிப்புமாய் கூற, அவரின் சீடர்களோ சம்போ மகாதேவா…. என்று கூக்குரலிட, பிரஜாபதிக்கோ உடலெங்கும் எரிந்தது…

“நிறுத்துங்கள்…” என்று கட்டளைப் பிறப்பித்தவர்,

“ஆக…. மனதளவில் வேண்டினாலே போதும்… அவன் கண் முன்னே வந்திடுவான் அல்லவா?... பூஜை, அபிஷேகம் எதுவும் தேவையில்லை அல்லவா அந்த ஈசனுக்கும், ஈசனாக பாவிக்கும் உங்கள் மன்னனுக்கும்?.... பக்தி மட்டும் போதுமல்லவா?...”

“ஆம்… அபிஷேகம், ஆராதனை செய்து தான் பூஜிக்க வேண்டும் என்ற நிர்பந்தமில்லை… சாதாரண வில்வ இலை ஒன்றே போதும்… அதைக்கொண்டு மனதார அவரை நினைத்தால், எங்களின் மகாதேவர் நிச்சயம் கண் முன் தோன்றுவார்…”

“யாரங்கே… கொண்டு வாருங்கள் அதனை…..”

பிரஜாபதி உத்தரவிட, தேவமகரிஷியின் முன் ஒரு பெரிய தாம்பூலம் கொண்டு வந்து நீட்டப்பட்டது…

அதில் நிறைய வில்வ இலைகள் இருந்தன…. அதில் இரண்டை எடுத்த பிரஜாபதி, தன் மகளிடம் நீட்டி, “அந்த சிவலிங்கத்தை ஸ்ரீவிஷ்ணுவின் சிலையில் பிரதிஷ்டை செய்தாய் அல்லவா?... அவன் இல்லை என்று இப்போது நான் உனக்கு நிரூபிக்கிறேன்… இதைப் பிடி….” என்று உத்தரவிட, அவள் தயங்கினாள்….

“பெற்றுக்கொள் சதி…… அவனை அழைத்திடு இங்கே……..” என அவர் மீண்டும் சத்தமாக முழக்கமிட,

அமைதியாக தலைகுனிந்த மகளின் செயலை, அவர் பார்த்துக்கொண்டிருந்த போது, அவரின் கைகளிலிருந்து அந்த வில்வ இலையை வாங்கிய தேவமகரிஷியை ஒருவித திகைப்புடன் பார்த்திருந்தார் பிரஜாபதி…

“அழைத்திடு மகளே… சிவனை மனதில் நினைத்து வேண்டிடு மகளே… அவரின் தரிசனம் உனக்கு கிடைத்திடும்….”

அவர் உறுதியோடு கூற, சற்றும் யோசிக்காமல் சதி வில்வ இலையை அவரிடமிருந்து பெற்றுக்கொள்ள, பிரஜாபதியின் திகைப்போ மேலும் பெரிதானது….

பின்னர், தாமதிக்காமல், கைகளுக்குள் வில்வ இலையை வைத்து, கைகூப்பி, இமைமூடியவள், மனதில் மகாதேவா….. என்று உரைத்து வேண்டி நிற்க, தேவமகரிஷியும், அவரது சீடர்களும் கூட கண்மூடி வேண்ட ஆரம்பித்தனர் உடனேயே….

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.