(Reading time: 11 - 22 minutes)

24. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval

யோசித்து யோசித்து தலை வின் வின்னென்று தெறிக்க ஆரம்பித்தது ரூபனுக்கு. முதல் வேலையாக பரேஷின் ரிப்போர்ட் வரும் வரை மட்டும் தொடருவதாக இருந்த அனிக்காவின் பாதுகாவலை நீட்டியவன் வழக்கமாக அவனுக்கு வரும் தினசரி ரிப்போர்ட்டை தவிர்த்து இன்றைய நிலவரம் என்னவென்று விசாரித்ததில், மதியம் அவள் வீட்டிற்கு வந்த ஒரு விருந்தாளியோடு அவள் வெளியே சென்றதாக தகவல் கிடைத்தது.

தன்னிடமிருந்த புகைப்படத்திலிருந்த விக்ரமின் படத்தை அனுப்பி அது விக்ரம் தான் என்று உறுதி செய்துக் கொண்டான். அவன் அவர்கள் வீட்டிற்குள் செல்லுமளவும் அப்படி அவனுக்கு அனிக்காவின் வீட்டினரோடு எப்படி நெருக்கம்?, அனிக்காவை அவளுடைய தோழியரோடு கூட சட்டென்று எங்கும் அனுப்பாதவர்கள் விக்ரமோடு அனுப்பி வைத்த காரணம் என்னவாக இருக்கும்? என அவனுக்கு மனதில் பல கேள்விகள் எழுந்தன. அத்தோடு கூட அவளுடைய வீட்டிலிருந்து விக்ரம் அவளை அழைத்துச் சென்றிருப்பதால் நிச்சயமாய் இன்றைய தினம் ஆபத்து ஒன்றும் விளைவிக்க மாட்டான் என்று ஆசுவாசமும் தோன்றிற்று.

தன்னிடமிருந்த விக்ரமின் அனைத்து போன் நம்பர்களிலும் அவனை தொடர்பு கொள்ள ரூபன் முயற்சித்துப் பார்த்தான், அவற்றில் எந்த நம்பரும் பதிலளிக்கப் படாததால் அவனை தொடர்புக் கொள்ள வழியில்லாமல் திணறினான். விக்ரம் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டலிலும் சென்று விசாரித்தான் அதற்க்குள்ளாக அங்கிருந்தும் அவன் செக் அவுட் செய்து விட்டிருந்ததாக தகவல் வரவே முட்டுச் சந்தில் போய் முட்டிக் கொண்ட நிலையானது ரூபனின் நிலை.

விக்ரமைக் கொல்லும் ஆத்திரம் வந்த போதும் ரூபன் முடிந்தவரை விவேகமாக செயல்பட எண்ணினான். தன் மேலிருக்கும் கோபத்தை தன்னிடம் மட்டும் காட்டச் சொல்லி, அவனுக்கு தேவையானதென்ன என அறிந்து தன்னுடைய தவறுக்கு எத்தகைய தண்டனைப் பெறவும் அவன் சித்தமாக இருந்தான். மறுபடி ஒரு முறை விக்ரம் மேல் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தி அவனுக்கு உயிரானவளை இழக்க மட்டும் அவனால் இயலாது என்பதே அதற்கு காரணம்.

அடிக்கடி விக்ரம் அனுப்பிய ஃபோட்டோவே நினைவிற்கு வந்து ரூபனை இம்சித்தது, அதில் அனிக்கா கொலைஞன் முன்னால் நிற்கும் பலி ஆட்டைப் போலவே அவனுக்கு தெரிந்தாள். இல்லை , முடியவே முடியாது தலையை உதறிக் கொண்டான். ஒரு நாளும் எவனோ ஒருவன் பழிவெறிக்காக அவளது வாழ்க்கையை பலியிட முடியாது. அதற்காக நான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்று உறுதிக் கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தெய்வாவின் "காதல் கீதம்" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

செய்ய வேண்டியவை என்னவென்று வரிசையாக திட்டமிடலானான்.

அதில் முதலாவதாக ஜீவனை தன்னுடைய இந்தப் பிரச்சினையினின்று விலக்கி வைப்பதை முடிவுச் செய்தான். அவனுடைய தற்போதைய சூழல் போர்க்களத்திற்கு ஒப்பானதாக தோன்றிற்று. ஏற்கெனவே இவனுக்காக அனிக்காவை குறி வைத்திருக்கும் விக்ரமின் பழி உணர்ச்சிக்கு தன்னைச் சார்ந்த மற்றெவரையும் பாதிப்பில் ஆழ்த்த அவன் விரும்பவில்லை.

இரண்டாவதாக அனிக்காவை இந்த விஷயத்தினின்று பாதுகாப்பது எப்படி? என்ற கேள்விக்கு கிறிஸ் அல்லது தாமஸ் மாமாவிடம் சொல்லலாமா என யோசித்தால், ரூபனை அவர்கள் எத்தனை தூரம் நம்புவார்கள்? எனப் புரியவில்லை . உனக்காக என் மகளை ஏன் குறி வைக்க வேண்டும் என்றுக் கேட்க , தான் சொல்லும் பதில் எந்த அளவிற்கு அவனுக்கும், அவன் காதலுக்கும் நலம் பயக்கும் என்றும் ஒரு முடிவிற்கு அவனால் வர முடியவில்லை. இவன் கூறினாலும் அதற்கு உரிய விதத்தில் யோசித்து அவர்கள் தீர்வு காண முன் வருவார்களா? என்பதும் சந்தேகமே? 

தன்னிடம் இருக்கும் ஆதாரங்கள் மற்றும் தற்போதைய ஆடியோ முதலியன போலீஸில் கொடுத்து உதவி கேட்டால் என்ன? என்று தோன்றிய ஐடியாவை செயல்படுத்த முடியாமல் விக்ரம் குறித்த எண்ணம் தடுத்தது. அவன் நினைத்தால் எதையும் தலைகீழாக மாற்றும் வல்லமை படைத்தவன். யோசிக்காமலா வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியிருப்பான்.

இப்போது போலீஸ் உதவியை நாடினால், அதனால் குடும்பத்தில் ஏற்படும் குழப்பத்தினூடே தன்னுடைய எண்ணத்தை விக்ரம் எளிதாக நிறைவேற்றிக் கொள்வான். தான் பதட்டப்பட்டு அவனுக்கு எந்த வாய்ப்பையும் கொடுத்து விடக் கூடாது என்று எண்ணினான். அதே நேரம் தான் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எப்படி முடியும் என்றவனாய் பரேஷைத் தவிர்த்து அவனைப் பரிந்துரைச் செய்த தனக்கு பரிச்சயமான போலீஸில் இருக்கும் நபரிடம் விசாரித்து மற்றொரு டிடெக்டிவ் ஏஜென்சியின் விபரம் பெற்று அவர்களை அணுகி தன்னிடமிருந்த அனைத்து தகவல்களையும் ஒப்படைத்து வந்த பின்பே அவனால் ஓரளவுக்கு நிம்மதியாக சுவாசிக்க முடிந்தது.

ப்படி பலச் சோர்வுகளோடு பலமணி நேரங்கள் கழித்து மதியம் சென்றவன் சாயுங்காலத்தில் வீடு திரும்பியபோது அனிக்கா அவன் வீட்டிலிருந்தாள்.

வாசலினின்றே அவளைப் பார்த்தவன் முன் தினத்தின் ரசனை பார்வை எல்லாம் எப்போதோ அவனிடமிருந்து விடைப் பெற்றுச் சென்றிருக்க அழுத்தமாய் தலை முதல் கால் வரை அவளை ஆராய்ந்தான். அவளோ தன்னுடைய வழக்கமான சிரிப்போடு தீபனிடம் முகம் மலர பேசியவாறு நின்றுக் கொண்டிருந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.