(Reading time: 44 - 88 minutes)

'ண்டிப்பா பிழைச்சுக்குவாங்க..' என்றபடியே அவனை எழுப்பி அங்கிருந்த நாற்காலியில் அமர வைத்தான் பரத்.

கிட்டதட்ட இரண்டு மணி நேரங்கள் கடந்திருக்க அம்மாவை பற்றிய தகவல்கள் எதுவும் இன்னமும் தெரியாமல் இருக்க கண்ணீர் மட்டும் வழிந்துக்கொண்டிருக்க அசைவின்றி அமர்ந்திருந்தான் அருண். அப்பாவுக்கு தகவல் சொல்லக்கூட தோன்றவில்லை.

அப்போது டாக்டர் அழைப்பதாக செய்தி வர எழுந்து சென்று உண்மையை சந்திக்கும் தைரியம் கண்டிப்பாக இல்லை அருணிடம்.

'நீங்க வாங்க அருண். என்னன்னு கேட்போம் வாங்க..' பரத்தே உதவிக்கு வந்தான் மறுபடியும்.

'கொஞ்சம் சீரியஸ்தான்' என்று துவங்கினார். எப்படி இப்படி கீழே விழுந்தாங்க???'

பதில் சொல்லவில்லை இருவருமே..' உணர்வற்றவன் போல்தான் அமர்ந்திருந்தான் அருண்.   மருத்துவ ரீதியாக ஏதேதோ சொன்னார் மருத்துவர். கடைசியில்

'எவ்வளவு சீக்கிரம் சர்ஜரி பண்றோமோ அவ்வளவு சீக்கிரம் கண் முழிக்க வாய்ப்புகள் அதிகம். முப்பத்தி அஞ்சு லட்சம் செலவாகும். நீங்க பணத்தை கட்டினவுடனே சர்ஜரி வெச்சுக்கலாம்..'

கொஞ்சம் திடுக்கிட்டவன் போலத்தான் பார்த்தான் அருண்.

'முப்பத்தி அஞ்சு லட்சமா.???' ரெண்டு நாள் டைம் குடுங்க நான் கட்டிடறேன்...' அருண் மெல்ல சொல்ல

'இல்ல டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்திலே நான் பணத்தை கட்டிடறேன் நீங்க சர்ஜரி ஸ்டார்ட் பண்ணிடுங்க...' சொல்லிவிட்டு எழுந்தான் பரத்..

இருவரும் வெளியே வர 'என்கிட்டே பணம் இருக்கு பரத்...' என்றான் அருண் மெதுவாக. 'நான் கட்டிடுவேன்..' பரத் மீது கொஞ்சம் மரியாதை பிறந்திருந்தது அவனுக்கு.

மெல்ல புன்னகைத்தான் பரத் 'எனக்கு தெரியும். உங்களாலே புரட்ட முடியாத தொகை இல்லை அது. பட் இப்போ நீங்க மனசாலே ரொம்ப தளர்ந்து போயிருக்கீங்க. இப்போ பணத்துக்காக அலைய வேண்டாம். என்னாலே உடனடியா கட்ட முடியும். அதனாலே கட்டறேன் அவ்வளவுதான்..'

'நான் நாளைக்கு கொடுத்திடறேன்..'

'எப்போ முடியுதோ அப்போ திருப்பிக்கொடுங்க நான் கண்டிப்பா வாங்கிக்கறேன்..' அவன் தோளில் கை வைத்து அழுத்திவிட்டு நகர்ந்தான் பரத். அவன் என்ன செய்துக்கொண்டிருக்கிறான் என்று புரிந்தது அபர்ணாவுக்கு.

பணத்தை கட்டிவிட்டு அவள் அருகில் வந்தான் பரத் 'பசிக்குதா கண்ணம்மா??? ஏதாவது சாப்பிடலாம் வா...' என்றவன் அவள் முகம் பார்த்து மனம் படித்தவனாக சொன்னான்

'எனக்கு அருண் மேலே நிறைய கோபம் உண்டுதான் கண்ணம்மா. அவன் முரட்டுத்தனமா நடந்த போதெல்லாம் அவனை தோற்கடிச்சு உன்னை கூட்டிட்டு போயிடணும்னு நினைச்சு இருக்கேன். ஆனா இப்போ தளர்ந்து போய் விழுந்துட்டான். இப்போ அப்படியே விட்டுட்டு போக மனசு வரலை. அவன் நம்ம அஸ்வினிக்கு செஞ்சது இன்னமும் எனக்கு நினைவு இருக்கு கண்ணம்மா..' வியப்பும் அவன் மீது நிறையவே மதிப்பும் போட்டி போட பேசாமல் அவனை பார்த்தபடியே அமர்ந்திருந்தாள் அபர்ணா.

சில மணி நேரங்களில் அறுவை சிகிச்சை தொடங்க. வந்து சேர்ந்திருந்தார் அவன் தந்தையும். அருணால்தான் இந்த சூழ்நிலை என்பது புரிய  கொதிப்பின் உச்சியில் இருந்தவர்

'கொலைக்காரா.... கொலைக்காரா...' கத்திக்கொண்டிருந்தார் மகனிடம் 'அவ மட்டும் கண்ணு முழிக்கலைன்னா உனக்கும் எனக்கும் இனிமே எந்த உறவும் இல்லைடா..' இன்னமும் அதிகமாகவே  முடிங்கிப்போய்த்தான் இருந்தான் அருண்.

'ஆம்.. கொலைக்காரன்தான்... கண்டிப்பாக கொலைக்காரன்தான் நான்...'

அறுவை சிகிச்சை முடியும் வரை. பரத்துடனே ஒட்டிக்கொண்டு அவன் கையையே பிடித்துக்கொண்டு முள்ளின் மேல்தான் அமர்ந்திருந்தாள் அபர்ணா

'சர்ஜரி நல்லபடியா முடிஞ்சது. அவங்க எப்போ கண் விழிப்பங்கன்னு சரியா சொல்ல முடியலை. நல்லதையே நினைப்போம். எல்லாம் நல்லதா நடக்கும்..' என்றார் டாக்டர்.

'நாங்க அவங்களை பார்க்கலாமா டாக்டர்' அருண் தவிக்க .

இப்போ வேண்டாம் நாளைக்கு பார்க்கலாம்..' நகர்ந்தார் டாக்டர்.

'இறைவா இனி நான் எல்லாவற்றிலும் நல்லதையே நினைக்கிறேன். என் அம்மாவை கண் விழிக்க வை. அவளை இழக்கும் சக்தி கண்டிப்பாக இல்லை என்னிடத்தில்...' கண்ணீர் வழிய கண்ணெதிரில் சுவற்றில் இருந்த அந்த கண்ணன் படத்தையே பார்த்திருந்தான் அருண்.

பரத்தும் அபர்ணாவும் அவன் எதிரில் வந்து நின்றனர். 'நாங்க கிளம்பறோம் அருண். எல்லாம் நல்லபடியா நடக்கும். நான் நாளைக்கு வந்து பார்க்கிறேன். எதாவது தேவைன்னா போன் பண்ணுங்க..' சொன்னான் பரத்.

மெல்ல எழுந்தான் அருண் அவள் முகம் பார்த்தான் நேராக 'சாரி அபர்ணா எல்லாத்துக்கும்..' என்றான் அவன். திகைத்து போனாள் பெண்.

'ஆல் தி பெஸ்ட் ரெண்டு பேருக்கும். டேக் கேர்..' புன்னகையுடன் கைகுலுக்கினான் பரத்துடன். வார்த்தைகள் இல்லை இவர்களிடத்தில்.

காலம் நிமிடங்களில் புரட்டிப்போட்டு விடுகிறதே மனித வாழக்கையை .சில மணி நேரங்கள் முன்னால் இவர்கள் மருத்துவமனைக்குள் வரும்போது இருந்த மனநிலை மூவரிடத்திலுமே இல்லை. விடைபெற்றுக்கொண்டு நடந்தனர் இருவரும்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.