(Reading time: 44 - 88 minutes)

நான்கு  நாட்கள் கடந்திருந்தன. இன்னமும் அம்மாவுக்கு நினைவு திரும்பவில்லை. வாழ்க்கை என்பது என்ன??? என்ற பாடத்தை அவனுக்கு கற்றுக்கொடுத்துக்கொண்டே நகர்ந்துக்கொண்டிருந்தன அருணின் பொழுதுகள்.

நான்கு  நாட்கள் முன்னால் வரை சிரிக்க சிரிக்க பேசிக்கொண்டு வலம் வந்துக்கொண்டிருந்த அம்மாவை இப்படி கட்டுகளுடன் படுக்க வைத்து விட்டேனே நான்..' ஒவ்வொரு நிமிடமும் அவன் உயிர் அறுந்துக்கொண்டே இருந்தது. பிரார்த்தனையை தவிர வேறேதுவுமே செய்ய தோன்றவில்லை மகனுக்கு

அவனது பிரார்த்தனைகள் விழுந்தே விட்டன இறைவனின் செவிகளில் 'அவங்க கண் முழிச்சிட்டாங்க..' அவன் கேட்க துடித்த அந்த ஆனந்த வார்த்தைகள்  அன்று வந்து சேர்ந்தன அவன் செவிகளை. விழுந்தடித்துக்கொண்டு ஓடினான் அம்மாவை பார்க்க.

'தலையிலே ஆபரேஷன் பண்ணி இருக்கு. அவங்க பழையபடி நடக்க பேச கொஞ்ச நாள் ஆகும். ரொம்ப சிரம படுத்தாம பத்திரமா பாத்துக்கோங்க..' மருத்துவர் சொல்லிவிட்டு சென்றார்.

கண்ணீர் வழிய நின்ற மகனை அரை குறை மயக்கத்தில் பார்த்து அம்மா புன்னகைக்க புனர் ஜென்மம் பெற்றான் மகன்.

'இறைவா உனக்கு கோடி கோடி நன்றிகள்!!!'

ரத் பெங்களுர் திரும்பியாக வேண்டும். இன்று மதியம் அபர்ணாவும் பரத்தும் அவள் பெற்றோருடன் கிளம்புவதாக உத்தேசம். அவளது வீட்டில் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை தயாராக அடுக்கி  வைத்திருந்தாள் அபர்ணா. இன்னும் தங்கையுடன் பேசிய பாடில்லை.

'அது எப்படி என் தங்கை என்னை ஏமாற்றலாம்???' ஒரு வீம்பான கோபம். அபர்ணாவுக்கு. 'தவிக்கட்டும் கொஞ்ச நாள் தவிக்கட்டும்..' என்றே தோன்றியது. ஓடி ஓடி அவளுக்கு எல்லா உதவிகளையும் அஸ்வினி செய்தும் கூட அவள் பக்கம் திரும்பவில்லை அபர்ணா.

'அஸ்வினிகிட்டே பேசு கண்ணம்மா. தப்பு பண்ணது நான்தான் அது பாவம்..' பரத் சொன்னதையும் கேட்டுக்கொள்ளவில்லை அவள்.

காலை உணவுக்காக எல்லாரும் மேஜையில் அமர எல்லார் தட்டிலும் பரிமாறிவிட்டு அமர்ந்தாள் அபர்ணா.

'நாளை முதல் என் காலை உணவு இந்த வீட்டில் இல்லையா???' சின்னதாய் ஒரு அழுத்தம் அபர்ணாவின் மனதிற்குள்.

'கிளம்பும் போது அழுதுவிடவெல்லாம் கூடாது..' தலையை குலுக்கி மனதை சரிப்படுத்திக்கொண்டு தட்டில் பார்வையை வைத்துக்கொண்டாள் அபர்ணா. ஒரு பக்கம் பரத் ஒரு பக்கம் அஸ்வினி அமர்ந்திருக்க அவள் சாப்பிட துவங்க அஸ்வினி தட்டில் கேசரியிலிருந்த முந்திரி பருப்பு இவள் தட்டுக்கு வந்தது.

இவளுக்கு முந்திரி பருப்பு பிடிக்குமென எப்போதும் இது ஒரு பழக்கம் அஸ்வினிக்கு. இவள் கண்களில் முட்டிக்கொள்ள தயாராக இருக்கிறது கண்ணீர்.

'தூக்கி போட்டுடாதே அதை. ப்ளீஸ் சாப்பிட்டுடு. நாளையிலிருந்து யார் தட்டிலே போடுவேன்னுதான் தெரியலை..' அவள் சற்றே இறங்கிய குரலில் சொல்ல உடைந்து போனாள் அக்கா. கண்களில் கண்ணீர் வழிய ஓங்கி ஓங்கி அடிக்கிறாள் தங்கையை.

'குரங்கு... குரங்கு..... எங்கேடி போயிடுவே என்னை விட்டு??? பெங்களூர்லே ஹாஸ்டல் காலி பண்ணிட்டு வீட்டுக்கு வந்து சேரு..' அபர்ணா சொல்ல எல்லாரிடத்திலும் மெலிதான கண்ணீருடன் கூடிய புன்னகை.

சென்னை விமான நிலையம்!!!

பரத் - அபர்ணாவை வழி அனுப்ப விஷ்வா சகிதம் பரத்தின் அப்பா அம்மாவும் ஆஜர். சந்தோஷ சிரிப்புடன் பேசியபடியே விஷ்வா திரும்ப அவன் கண்ணில் விழுந்தது அந்த காட்சி.

'இந்துஜா!!!! இந்துஜாதானே அது??? சற்றே தூரத்தில் சக்கர நாற்காலியில் அவள் அமர்ந்திருக்க அதை யாரோ தள்ளிக்கொண்டு வந்துக்கொண்டிருக்க......

அவள் பார்வை அவன் மீது விழவில்லை. 'ஊருக்கு போகிறாளா??? எங்கே???' தெரியவில்லை அவனுக்கு. 'இன்னும் காலில் கட்டு கூட பிரிக்கப்படவில்லையே!!!' பதறுகிறது விஷ்வாவுக்கு.

இங்கே இவர்களை எல்லாம் விட்டு சற்றே விலகி விஷ்வா வர அவனை கடந்து நகருகிறது சக்கர நாற்காலி. அவளுடன் வரும் அந்த பெண் யாரென தெரியவில்லை.

'இந்துமா..' விஷ்வா மெதுவாக அழைக்க திடுக்கென நிமிறுகிறாள் அவள். அவனை பார்த்த திடீர் சந்தோஷம், அவனிடம் ஏதோ சொல்ல துடிக்கும் தவிப்பு, நிறையவே கவலை ரேகைகள் எல்லாவற்றையும் அவள் முகம் அடுத்த மூன்று நொடிகளில் பிரதிபலித்து முடித்திருக்க, அதற்குள் பயணிகள் பகுதிக்குள் பிரவேசித்துவிட்டிருந்தது இந்துஜாவின் சக்கர நாற்காலி. .

அவசரமாக அவளுக்கு இரண்டு மூன்று குறுஞ்செய்திகள் அனுப்ப அவை போய் சேர்ந்ததாக தெரியவில்லை. அவள் எண்ணுக்கு அழைத்து பார்க்க அது அணைக்கப்பட்டிருந்தது.அது.

'எதுவும் பிரச்சனையா??? நிச்சியம் ஏதோ பிரச்சனை என புரிகிறது விஷ்வாவுக்கு. அருண் திருமணம் நின்று போனதால்தானா??? என்னை விட்டு எந்த ஊருக்கு போகிறாள் என் நிலாப்பெண்??? புரியாமல் தளர்ந்து நின்றான் விஷ்வா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.