(Reading time: 25 - 50 minutes)

வனின் குறும்பு பேச்சில் மறுபடியும் சிவந்தவள், “சரி, அதை நாளைக்கு பார்க்கலாம் தர்ஷ்” என்றபடி அங்கிருந்து ஓடிவிட்டாள்.

அவர்களின் இனிமையான வாழ்க்கையை கற்பனை செய்தவர்களாக இருவரும் உறங்காமலே அந்த இரவை கழித்தனர்.

யாருக்கும் காத்திராத காலம் தன் கடமையை தவறாது செய்ததில் பொழுதும் விடிந்தது.

“மேடைல வைக்கிறதுக்காக தனியா எடுத்து வச்சிருந்த பழம் எங்கே மைத்ரீ”

“இங்கதானேமா எல்லா பொருளும் இருக்குது”

“சீக்கிரம் தேடுடா… ப்ரோஹிதர் பழ தட்டு எடுத்துட்டு வர சொன்னாரு”

அந்த அறை முழுவதும் தேடியவள், “இங்க இல்லைம்மா!”

“இல்லையா?! எங்க வச்ச?” தன்னை தானே கேட்டபடி சிறிது யோசித்த வடிவு, “மைத்ரீ, அது கார்லயே இருக்குனு நினைக்கிறேன்.  கொஞ்ச சீக்கிரமா போயி அதை எடுத்துட்டு வரியா?”

“சரிம்மா!” கல்யாணத்துக்கு வந்ததிலிருந்து இவள் பொறுப்பில் இருந்த மூன்று வயது தியா குட்டியை தூக்கிக்கொண்டு கிளம்பினாள் மைத்ரீ.

“குழந்தைய இங்கேயே விட்டுட்டு போயே மைத்ரீ.  அவளையும் தூக்கிட்டு பழத்தையும் எடுத்து வர முடியுமா?”

“நீங்க கவலைப்பட வேணாம்மா! நான் சமாளிச்சிருவேன்.  கல்யாணம் முடிஞ்சவுடனேயே இந்த சுட்டி கிளம்பிரும்… இப்பவாவது என்னோட இருக்கட்டுமே” தியாவின் மூக்கை பிடித்து ஆட்டியவளாக வடிவுக்கு பதிலளித்தாள்.

“சரி! சீக்கிரம் வா” என்றுவிட்டு ப்ரோஹிதர் கேட்டிருந்த வேறு தட்டுகளை எடுத்து வைத்தார் வடிவு.

குழந்தையிடம் ஏதேதோ பேசியபடி பேஸ்மெண்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை அடைந்தவள் பழங்களை எடுப்பதற்காகக் குழந்தையை கீழே இறக்கிவிட்டாள்.

“நல்ல பொண்ணா இங்கேயே நிக்கனும்… பழத்தை எடுத்துட்டு நாம போகலாம்” இவளின் பேச்சை புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக அந்த மழலையும் சிரித்து தலையை ஆட்டி “ததி அட்ட” என்றது.

குழந்தையின் செய்கையையும் பேச்சையும் ரசித்தவள் “யூ ஆர் ஸோ க்யூட்” என்று கொஞ்சிவிட்டு திரும்பி கார்க் கதவை திறந்து அதிலிருந்து பழங்கள் நிறைந்த பையை எடுத்தாள்.

கவனப்பிசகால் பையின் ஒரு பிடியை மட்டும் பிடித்திருந்தாள்; விளைவாக பழங்கள் சிதறி உருண்டன.  சில காரினுள்ளும்; சில வெளியிலும் சிதறின.  அதைக் கண்ட தியா கைத்தட்டி ஆர்பரித்தாள்.

“அட்ட! கொட்டி….”

“ஆமான்டி தங்கம்… அத்தை பழத்தைக் கொட்டிட்டேன்.  இப்போ என்ன செய்ய முடியும்! எல்லாத்தையும் எடுக்கனுமே… அம்மா வேற சீக்கிரம் வரச் சொன்னாங்க” குழந்தையிடம் இவள் புலம்புகையில், தியாவோ தன்னருகிலிருந்த பழத்தை எடுத்து மைத்ரியிடம் நீட்டினாள்.

“தியா இஸ் அ குட் கேர்ள்!” குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டவும் இவள் பூசியிருந்த சிவப்பு உதட்டுச்சாயம் இப்போது தியாவின் கன்னத்தில் அழகாய் கோலமிட்டிருந்தது.

“ஸாரிடா தியாக் குட்டி!” குழந்தையிடம் மன்னிப்பு கேட்டபடி அதை துடைக்கையில் ஃபோன் அலறியது.  திரையில் மிளிர்ந்த வடிவின் புகைப்படத்தைப் பார்த்தவள் உடனடியாக அழைப்பை ஏற்றாள்.

“மைத்ரீ! பழத்தை கொண்டு வரச் சொன்னனே என்னாச்சு? அது ஒன்னுதா பாக்கியிருக்கு” பரபரப்பாக பேசினாள் வடிவு.

“டென்ஷன் ஆகாதீங்கமா! பழத்தை எடுத்துட்டு வந்துட்டேயிருக்க”

அழைப்பைத் துண்டித்துவிட்டு குழந்தையை கவனித்தவள் அதன் செயலில் உரக்க சிரித்துவிட்டாள்.

இவளின் சிரிப்பு சத்தத்தில் கலைந்த குழந்தை திரும்பி ஒருமுறை இவளைப் பார்த்துவிட்டு மறுபடியும் தன் வேலையைத் தொடர்ந்தது.

சற்று தொலைவில் விழுந்திருந்த ஒரு பழத்தை தியா தன் வலக்கையின் விரல்களை மடித்து “வா… வா…” என்று அழைத்துக் கொண்டிருந்தாள்.

சிரித்தாலும் கூட தனக்கு உதவும் தியாவின் குணம் மைத்ரீயைக் கவர்ந்தது.

சிரிப்பை அடக்கிய மைத்ரீ, “தியாக் குட்டி! பழம் நாம கூப்பிட்டா வராதுடா கண்ணா! நீதான் போய் அதை எடுத்துட்டு வரனும்.  இப்போப் பாரு” குழந்தியிடம் முழந்தாளிட்டு பேசிக் கொண்டிருந்தவள் எழுந்து சென்று ஒரு பழத்தை எடுத்து பையில் போட்டாள்.

“அத்தை செய்ததை பார்த்தயில்லை… அதே மாதிரி நீயும் செய்யனும்… சரியா?”

“ததி அட்ட!” தியா தன் மழலை மொழியில் அவளுக்கு பதிலளித்துவிட்டு சிதறியிருந்த ஒரு பழத்தை நோக்கி நடந்தாள்.  அதை எடுத்து வந்து இவள் கையில் கொடுத்துவிட்டு மற்றொன்றை நோக்கிச் சென்றாள்.

“சமத்துடா நீ!” தியாவை கொஞ்சிவிட்டு குனிந்து காருக்குள் சிதறியிருந்த பழங்களை பொறுக்கினாள் மைத்ரீ.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.