(Reading time: 25 - 50 minutes)

பார்க்கிங்க் ஏரியாவினுள் காரொன்று வரும் சத்தம் கேட்டதும் மைத்ரீக்கு தியா பழங்களை எடுத்து கொண்டிருப்பதும் அவர்கள் பேஸ்மெண்டில் இருப்பதும் ஒருசேர நினைவு வந்தது.  பேஸ்மென்ட் பார்க்கிங் லாட் என்பதால் வண்டிகள் சருக்கு மரத்தில் சருக்கும் குழந்தைகள் போல் சருக்கிக் கொண்டு உட்புக வேண்டியிருந்தது.  அப்படி வரும்பொழுது, என்னதான் குறைந்த வேகத்தில் வண்டி வந்தாலும் யாராவது திடீரென குறுக்கே வந்தால் வண்டியைக் கட்டுப்படுத்துவது கடினம்.  அவசரமாக எழுந்து தியாவைப் பார்த்தாள்.  குழந்தை வண்டிகள் வந்து போகும் வழியிலிருந்த பழத்திடம் ஓடிக்கொண்டிருந்தது.  அதே சமயம் காரும் வேகமாக வந்து கொண்டிருந்தது.  இவளுக்கும் குழந்தைக்குமான இடைவெளியை விட காருக்கும் குழந்தைக்குமான இடைவெளி மிகவும் குறைவாக இருக்கவும் பதறியவள், குழந்தையை நோக்கி ஓடினாள்.  இப்போது தியா பழத்திடம் குனிந்திருந்தாள்.  அதே சமயம் குழந்தையின் வெகு அருகில் நெருங்கிவிட்டக் காரைப் பார்த்தவளுக்கு நடக்கவிருக்கும் விபரீதம் புரிந்தது.

காதுகளை தனது இருகைகளால் பொத்தி கண்களை இறுக மூடி “தியா!” என்று அலறினாள் மைத்ரீ.

கார் கிரிச்சீட்டு நிற்கும் சத்தம் தெளிவாகக் கேட்டது.  ஆனால் கண்களை திறந்து அந்தக் காட்சியைக் காண முடியாதபடி மனதில் எழுந்த பயம் நெஞ்சை அழுத்த நடுங்கிய உடலோடு உறைந்து நின்றிருந்தாள் மைத்ரீ.

செப்பு வாயில் பல்வரிசை தெரிய சிரிக்கும் தியாவின் பால்முகம், இன்றுக் காலையில் பட்டு பாவாடையில் ஒரு தேவதையாய் தன்னை நோக்கி ஓடி வரும் தியா, சற்று முன்பு பழத்தை வாவென அழைத்த தியா, கடைசியாக பழத்தினருகே குனிந்திருந்த தியாவென அவளின் மனதில் தோன்றவும் துக்கம் தொண்டையை அடைக்க மைத்ரீக்கு உடலும் உள்ளமும் நடுநடுங்கிப்போனது.

“அட்ட!” தன் முகத்தினருகே கேட்ட தியாவின் குரலில் ஏறபட்ட ஆச்சரியமும் குழப்புமுமாகக் கண்களைத் திறந்தவளுக்கு தியா காட்சியளித்தாள்.  இனிமேல் தியாவின் சிரித்த முகத்தை பார்க்க முடியாது என நினைத்திருந்தவளின் முன்னால் இருந்த குழந்தையை அள்ளி அணைத்து அதன் கன்னங்களில் முத்தமிட்டாள்.  குழந்தையின் நலனில் நெகிழ்ந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளி எட்டிப்பார்த்தது.

“தாங்க்ஸ் அ லாட்!” என்றபடி எதிரிலிருந்தவனைப் பார்த்தவளுக்குள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி.

“குழந்தையோட இப்படிதா அஜாக்கிரதய இருக்கறதா?” கண்டிப்புடன் வந்திருந்த அவனின் வார்த்தைகளில்

அவசரமாக மன்னிப்பும் தன்னிலை விளக்கமும் மைத்ரியிடமிருந்து, “ஸாரி ராகுல்! பழங்களை கொடுக்கனுங்கிற அவசரத்துல இதை யோசிக்கலை.  தாங்க் யூ!” பதட்டம் இருந்தது குரலில்.

“இட்ஸ் ஆல்ரைட்! குழந்தைய பத்திரமா பார்த்துக்கிட்டா நல்லது” என்றான் ராகுல் அதே கண்டிப்போடு.

நியாயம் தானே! யாரவது அவசரத்தில் வந்திருந்து குழந்தையை கவனியாமல் போயிருந்தால் என்னாகியிருக்கும்?

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள் சரியென்பதாக தலையை மேலும் கீழுமாக அசைத்தாள்.

“காரை பார்க் செய்திட்டு வந்திடுறேன்” இயல்பானக் குரலுக்கு வந்திருந்தவன் தனது காரை அதற்கான இடத்தில் நிறுத்தச் சென்றான்.

“இப்படி பயமுறுத்திட்டியே தியா? கொஞ்ச நேரத்துல எப்படி இருந்துச்சுனு, உனக்கு தெரியாதுடா…” சிறிது நேரத்திற்கு முன் நடந்தவை மனதிலெழ உடலெங்கும் பயம் பரவிட குழந்தையை இன்னுமுமாக இறுக்கி அதன் கன்னங்களில் இதழ் பதித்தாள்.

அவர்களின் எதிர்ப்புற வரிசையில் காரைப் பார்க் செய்து கொண்டிருந்தவனின் பார்வையில் விழுந்தது இக்காட்சி.  அவளின் பயம் அவனுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த, ‘மையு! எதுக்காக இத்தனை பயம் உனக்கு? அன்னக்கு ஸ்கேரி ஹௌஸ்லயும் இதே மாதிரிதா அளவுக்கு அதிகமா பயந்திருந்த… உன்னை இப்படி பார்க்கும்போதெல்லா எனக்குள்ள தாங்க முடியாத வலி ஏற்படுதுடு மையு..’ மனதிலிருந்த வலியோடு அவர்களை நோக்கி நடந்தான்.

அவன் வருவதை கவனித்தவள் தன்னை சாதரணமாக காட்டிக்கொள்ள வேண்டி வராத சிரிப்பை இழுத்து உதட்டில் பொருத்தினாள்.

“போகலாமா?” என்று கேட்டவனின் கண்களில் விழுந்தது சிதறியிருந்த பழங்கள்.  அவைகளை எடுப்பதற்காக குனிந்தவனை தடுத்தாள் மைத்ரீ.

“வேணா! நீங்க அதை எடுக்காதீங்க” புருவங்களை உயர்த்தியவன்

“ஏன்? இந்த பழங்கள்….?” கேள்வியோடு நின்றிருந்தவனிடம் குழந்தையை கொடுத்தவள்,

“இஃப் யு டோன் மைண்ட், இவளை கொஞ்ச நேர தூக்க முடியுமா?” இன்னொரு முறை குழந்தையை கீழே இறக்கிவிட மனமில்லாமல் வீட்டு விசேஷத்துக்கு வந்தவனை வேலை வாங்குவது முறையல்ல என்றெண்ணி தயங்கினாலும் வேறு வழியில்லை என்று அவனின் உதவியை நாடினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.