(Reading time: 21 - 41 minutes)

04. இவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்

Love

காவ்யா இரண்டாவது முறையாக, அழைப்பு மணியை அழுத்த கையை உயர்த்தினாள், தர்ஷினியின் கண்கள் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. அந்த வீட்டின் நடு அறையின் மின் விளக்குகள் ஒளிர, விஷ்ணு மெதுவாக சிவாவின் ஒற்றைக்கைவிரலைப் பற்றி நடந்து வந்தாள். அவள் விரல் நீட்டி காண்பித்த திசையில் ஒளி பிம்பமாக அவனின் முக தரிசனத்திற்கு ஏங்கும் இதயத்தையும் அதை மறைக்க முயலும் துருதுரு கண்களுடனும் நின்றிருந்தாள் தர்ஷினி. முதலில் அவள் மேல் விழுந்த பார்வையில் விழிகள் விரிய,  ஒரு கணம் அவனை அறியாது உள்ளம் குதுகலிக்க அவளைப் பார்த்தான் சிவா. அவளைத் தொடர்ந்து நின்ற காவ்யாவைக் கண்டதும் தன் இயல்பு நிலைக்கு வந்தவன், புன்னகையுடன் வாயிற்கதவை திறந்துவிட்டு, ஒற்றைக் கையால் விஷ்ணுவைத் தூக்கி தன் தோளோடும் மார்போடும் வைத்துக்கொண்டான்.

“ஹலோ, வாட் எ ஸ்ர்ப்ரைஸ்!” – அவன் கண்கள் புன்னகைத்தது.

சாம்பல் நிற டிஷர்ட்டும்,  அதற்கு ஏற்ற வெண்மையில் கருப்பு கோடிட்ட ட்ராக்ஷூட்டும் அணிந்திருந்தான்.

தர்ஷினியின் கண்கள்  சுழன்று  மெதுவாக வீட்டை இரசித்தது.

“ஹலோ சிவா சார், ஆக்ச்சுவலா, நாங்க ஷாப்பிங்க் வந்தோம், அப்படியே டாடீ உங்க கிட்ட ஒரு முக்கியமான டாக்குமென்ட் வாங்கிட்டு வர சொன்னாங்க!” – காவ்யா

அவன் ஒரு நொடி புருவம் சுருக்கினான். “ஓ, அத பத்தி பேசலாம், இப்ப உட்காருங்க!” என்றாவாரே உள் அறையை நோக்கி “அம்மா” என அழைத்தான்.

அவன் அழைப்புக்கு, “வர்றேன்பா” என்றவாரே மெதுவாக நடந்து வந்தார் சிவாவின் தாயார் செண்பகாதேவி.  “வாங்கம்மா!” என பொதுவாக இருவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு சற்று தள்ளாடி நடந்து வந்து இருவரும் அமர்ந்திருந்த சோபாவின் அருகே அமர்ந்தார். முதுமையின் சாயல் படர்ந்த தேகம், கணிவு நிறைந்த கண்கள், புன்னகையும் சாந்தமும் நிலவும் அவரது முகத்தைப் பார்த்ததும் தோழியர் இருவருக்கும் பிடித்துப்போயிற்று. விஷ்ணு, சிவாவிடமிருந்து இறங்கி மெதுவாக தன் பாட்டியின் அருகே வந்து நின்றுகொண்டாள். தர்ஷினி தன் கையில் வைத்திருந்த பொம்மையையும் பரிசு பொருட்களையும் விஷ்ணுவிடம் கொடுக்க அவள் வாங்காது நெழிந்துகொண்டே சிவாவைப் பார்த்தாள், அவன் கண்களை சிமிட்டி, முகத்தை லேசாக சரித்து, வாங்கிக்கொள் என்று சாடைக்காட்ட ஓடிச்சென்று அவள் கையில் வைத்திருந்த பொம்மையை வாங்கிக்கொண்டு புன்னகைத்தாள்.

“அம்மா, இவங்க தான் நம்ம சம்பந்தம் சார், பெண் காவ்யா” – சிவா

அவளைப்பார்த்து புன்னகைத்த செண்பகம், “அப்பா அம்மா, நல்லாயிருக்காங்களாம்மா? உன்ன சின்ன வயசிலப் பார்த்தது!”

“நல்லாயிருக்காங்க ஆன்ட்டி!” –காவ்யா

“அம்மா, இவ யாருன்னு தெரியுதா உங்களுக்கு?” – இமைகளை உயர்த்தி காட்டி தர்ஷினியைப் பற்றி தன் அம்மாவிடம் கேட்டான் சிவா.

பெண்கள் இருவருக்கும் மெதுவாக ஆர்வம் தொற்றிக்கொண்டது.

“நல்ல தெரிஞ்ச முகம் மாதிரிதான் சிவா தோணுது, நானே கேட்கனும்னு நினைச்சேன்!”

சிவா தர்ஷினியைப்பார்த்துக் கொண்டே பதிலளித்தான், “நம்ம லெஷ்மி ஆன்டி பெண், தர்ஷினி!”

“ஓ, லஷ்மியோட பெண்ணா, அதான் அப்படியே அவங்க அம்மாவ உரிச்சு வச்சருக்காளே! அப்பா நல்லயிருக்காராம்மா? நீங்க இப்ப எங்க இருக்கீங்க?”

தர்ஷினியின் மனதில் கேள்விகள் பல கரைபுரண்டது. ஏதேதோ யோசனைகளுடன் அவள் பதிலளித்தாள். “அப்பா, நல்ல இருக்காங்கம்மா, இப்ப பெசன்ட் நகர்ல இருக்கோம்!” சிறிது இடைவெளிவிட்டு அவளே தொடர்ந்தாள். “என்னோட அம்மாவ உங்களுக்கு தெரியுமாம்மா, அவங்கள நீங்க பார்த்திருக்கீங்களா?”

செண்பகமும் சிவாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். செண்பகம் புன்னகையுடன் பதிலளித்தாள், “உன்னோட அம்மா, சிவாவோட அப்பாக்கு சின்னம்மா பெண், எனக்கு நாத்தனார்”

காவ்யா, மெதுவாக தர்ஷினியின் காதுகளில் கிசுகிசுத்தாள், “அப்படிப்போடு, மச்சீ, அதான் அட்வகேட் சார் உன்ன பார்த்துக்கிட்டே இருந்தாரா.,, இத அவரு சொல்லவே இல்ல, சரியான அமுக்கமான குடும்பம இருக்கும் போல இருக்கு!”

கண்களால் காவ்யாவை முறைத்துவிட்டு செண்பகத்திடம், “என்னோட அம்மவ பார்த்திருக்கீங்களா?”

“சரியாபோச்சு போ, சிவாவ இரண்டு வயசு வரைக்கும் வளர்த்ததே லெஷ்மி தான், அவ கல்யாணம் வரைக்கும் எங்க வீட்டில தான் இருந்தா. அவ கல்யாணாத்தோட கலைந்த குடும்பம் இது, இன்று வரைக்கும் அது அப்படியே தான் இருக்கு. லெஷ்மிய கூட்டிட்டு மாணிக்கம் சிங்கப்பூர் போனது தெரியும். அதுக்கப்புறம் உன் அம்மா மறைந்த செய்தியும் உன்ன  தூக்கிக்கிட்டு உங்கப்பா இங்க வந்ததும் தெரியும். மாணிக்கம் எங்க யாரு கண்ணுலயும் படாமலே உன்ன வளர்த்துட்டான் கெட்டிகாரன் தான். உங்க அம்மாவோட  ஃப்போட்டோ எதுவும் நீ பார்த்ததில்லையா தர்ஷினி?” செண்பகம் உண்மையான வருத்தம் பிரதிபலிக்கும் முகத்துடனும் தர்ஷினியைப் பார்த்த மகிழ்வுடனும் இதை கூறினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.