(Reading time: 30 - 60 minutes)

தெல்லாம் உனக்கு எதுக்கு சொல்றேன்னு புரியுதா...” என்று வினவியவளை ஆமோதிக்கும் விதமாக தலை அசைத்து பார்த்தாள். “ம்ம்ம்ம் புரிஞ்சால் சரி.. இப்பயே முடிவு பண்ணிக்கோ இது தான் உன் வாழ்க்கைன்னு... இல்லாட்டி கஷ்ட்டப்படுவ...” என்று கூறி ஒரு பெருமூச்சை விட்டாள். அப்போதும் கீர்த்தி தேம்பி தேம்பி அழுக ஆரம்பிக்க, “அடடா என்னது இது... சரி வேணும்னா நீ இதை உணருர வரைக்கும் ஒரு மூணு நாலு உனக்கு விடுப்பு வாங்கி தாரே... அந்த அளவுக்கு எனக்கு இங்க செல்வாக்கு இருக்கு” என்றுவிட்டு சிரித்தாள்.

அவளை பார்க்கும் போதெல்லாம் கன்னத்தில் வழியும் கண்ணீரின் வரியை துடைப்பதை காட்டிலும் எப்படி இவள் இங்கேயும் சிரிக்கிறாள் இந்த நரகத்திலும் என்றுதான் இருந்தது. இவள் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே... அந்த முரடன் கதவை திறந்துக்கொண்டு வந்தான், “ஹே என்னங்கடி பேசிக்கிட்டு இருக்கீங்க எதாவது பெருசா இருக்கும்னு தாபத்தோட வந்தே... ஹ்ம்ம் சரிவிடு. என்ன சொல்றா என்னோட வீர பெண்மணி” என்று அவளது கன்னத்தை தடவினான் சட்டென முகத்தை திருப்பிக்கொண்டு நகர்ந்ததும் அவனுக்கு கோவம் பொங்கியது “ஏய் என்ன பேசிகிட்டே இருக்கேன்னு பார்க்குறியா... என்ன பத்தி உனக்கு தெரியலை” என்று அவன் ஆவேசமாக எழுந்திரிக்கவும் கவிதா வந்து தடுத்தாள்.

“அட என்னய்யா அதுக்குள்ள கோவம் வருது உனக்கு... இப்போ தானே வந்திருக்கு அதெல்லாம் போக போக சரியாகிடும் நான் சொல்லி வச்சிருக்கேன்... அதோட அதுக்கு...” என்றுவிட்டு அவனது காதில் அவள் ஏதோ கூற கள்ள தனமாக சிரித்தான் அவன், “அதுனால தான்ய்யா தள்ளி போகுது, ஒரு மூணு நாள் குடு... எல்லாம் சரியாகிடும்” என்று ஏதேதோ பேசி அவனை சாந்தப்படுத்தும் வகையில் ஒட்டி நின்று பேசினாள். கோவம் கொஞ்சம் குறைந்தவன் “அட கழுத இதுக்கு தானா, சரி போ மூணு நாள் தானே... ஹ்ம்ம் சரி நீ எப்படி இருக்கியோ அப்படி இவளை கொண்டு வந்திடு சரியா” என்று கூறிவிட்டு கீர்த்தியை பார்த்து சிரித்துவிட்டு போனான்.

அந்த மூணு நாள் கணக்கு கீர்த்திக்கு புரியாமல் இல்லை, அருவருப்பாக இருந்தது. எப்படியெல்லாம் வளர்க்கப்பட்டு ஒரு ஆணின் முன் இந்த விஷயமெல்லாம் பேச கூட முடியாமல் நகர்ந்து செல்லும் பெண்கள் மத்தியில் வளர்ந்து “ச்சே... இப்படியா வாழ்க்கை மாறவேண்டும் ஆண்டவனாம் ஆண்டவன்... எதிரில் இருந்தால் சட்டையை பிடித்து கேட்போம் என்று தான் சட்டை கூடப் போட மறுத்து கோவில் என்னும் இடத்தில் இருக்கிறான் போலும்” என்று எண்ணி, தனது யோசனையையும் நிலையையும் நினைத்து விரக்தியில் சிரித்தாள் கீர்த்தி. ஒரே நிமிடம் ஒரே ஒரு நிமிடம் அவள் அவ்வாறு இருந்ததை பொறுமையாக நின்று பார்த்தவளின் கண்களிலும் நீர் கசிந்ததோ என்று நினைப்பதற்குள் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் கவிதா.

மூன்று தினங்கள்... அந்த மூன்று தினமும் அவளுக்கு அந்த அறைக்கே சாப்பாடு வந்தது, வேண்டாம் என்று சொன்னால் திட்டுவார்கள் அடிப்பார்கள் என்றால் பரவாயில்லை “நானே ஊட்டிவிடுவேன்” என்று அந்த குடிகாரனே வந்தான். அந்த கொடுமையை சகிக்க முடியாமல் உள்ளே அனுப்பினாள் உணவை. அவளுக்கே புரியவில்லை எப்படி பிடிக்காத இடத்தில் தன் உயிர் போகாமல் இழுத்துபிடித்துக்கொண்டு வாழ்கிறது என்று. என்னவோ கவரிமான் பரம்பரையாமே சட்டென உயிர் போய்விடும் என்று சொல்வார்களே அப்படியெல்லாம் இந்த காலத்தில் சாத்தியம் இல்லையோ, ஏதேனும் சக்தி இருக்க கூடாதா என்றெல்லாம் யோசித்தாள். அவ்வப்போது பெண்கள் வந்தனர் சிரித்து பேசினர் தங்கள் கதைகளை கூறினார்கள். எப்போதாவது கதவை மெல்ல திறந்து பார்த்தால், யார் யாரோ ஆண்கள் வருவார்கள் உள்ளூர சிலிர்த்து சட்டென கதவை மூடிக்கொள்வாள். அதனால் பயத்தில் மனம் மாறியதோ இல்லையோ அவர்களுக்காக பரிதாபப்பட்டது.

நான் IPS ஆன உடனேயே முதலில் இவர்களை போல இருப்பவர்களை தான் காப்பாற்றவேண்டும் என்றது பித்து பிடித்த மனம். சட்டென நிலையை உணர்ந்தவள் உண்மையிலேயே பித்து பிடித்தவள் போல சத்தமாக சிரித்துவிட்டாள் “நானாவது IPS ஆவதாவது... இனிமேல் என் வாழ்க்கை என்னவாக போகிறது என்று எனக்கே தெரியலை இதுல இவங்களையெல்லாம் காப்பாற்றனுமாம் என்ன ஒரு யோசனை” என்று சிரித்தாள்.  

மூன்று நாட்களும் இதோ முடியபோகிறதே என்று நினைத்து 3வது நாளின் இரவில் மனம் பதறியது. இருட்டில் ஒளிந்து மறைந்து அறையில் அமர்ந்திருந்தவளை கதவின் தாள் ஓசை உசுப்பியது, யாரோ வருகின்றனர் என்று பறைசாற்றியது.

உள்ளே கவிதா வந்தாள், அருகே வந்து அமர்ந்தவள். “என்ன ஒரு முடிவுக்கு வந்தியா... இந்த மூணு நாளே உனக்கு அதிஷ்டமா கிடைச்சது” என்றாள். பய மிகுதியால் அழுகை தாங்க துவங்கிவிட கவிதாவின் கைகளை பற்றியவள் “அக்கா.. என்ன எப்படியாவது காப்பாத்துங்க... எனக்கு இங்க ரொம்ப பயமா இருக்கு நான் பெரிய பெரிய கனவெல்லாம் வச்சிருந்தேன்... இனிமே அது நடக்குமான்னு தெரியலை ஆனால் என்னால இது முடியாதுக்கா.. சத்தியமா முடியாது...” என்று பிதற்ற துவங்கினாள். அவள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த கவிதாவின் உடல் இறுகிப் போனது என்ன கூறுவது என்றே புரியவில்லை. தானாக வழியும் கண்ணீரை துடைக்க கூட தோன்றாமல் “நானும் இப்படியெல்லாம் பல முறை கெஞ்சிருக்கேன் கீர்த்தி இது ஒருவழி பாதை உன் மனசை திடப்படுத்திக்க...” என்றுவிட்டு கைகளை உருவிக்கொண்டு சென்றுவிட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.