(Reading time: 30 - 60 minutes)

வீட்டை அடைந்த பின்பு தனது வீடு போல நினைத்துக்கொள்ள சொல்லி ஒரு அறையையும் தந்து அனுப்பினர்... அவள் அறைக்கு செல்லவும் அம்மாவும் மகனும் பேச்சை துவங்கினர். “அம்மா... ஏதோ பாதிக்கப்பட்டிருக்காள் போல...”

“ஆமாடா நானும் அப்படி தான் நெனைக்குறேன்... அநேகமா காதலன் ஏமாற்றிட்டான்னு நினைக்குறேன்...”

“அட நானும் அதேதான் நினைச்சேன். நீங்கதான் பெண்கள் நலகாப்பு மையத்தின் உறுப்பினர் ஆச்சே கொஞ்சம் பேசி பாருங்களே...”

மெல்ல முறுவல் பூத்தவள் “ஆனால் அதிலும் கொஞ்சம் தப்பான யூகம் இருக்கலாம் கண்ணா.. அவளே சொல்லட்டும் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்” என்றார். 

இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்க கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்து திட்டிக்கொண்டு இருந்தாள் கீர்த்தி... மெலிந்த உடல் தான், தங்கை ஆசையாய் குடுத்த புடவை கசங்கி கலை இழந்து இருந்தது, கண்ணில் இருந்த சோகம் முகத்தில் அப்பட்டமாக காட்டியது, அந்த கொடியவனின் குரலும் கேட்கத்தான் செய்தது... “இனிமே இந்த பத்தினி வேஷமெல்லாம் உனக்கு ஒத்தே வராது... இதை நீ அன்னைக்கு என்னை பார்த்து காரி துப்புனியே அன்னைக்கு யோச்சுருக்கணும்...” என்றது எங்கோ இருந்து கேட்ட அசரிரி... தன்னை பார்த்தே துப்பிக்கொண்டாள் “நீயெல்லாம் இன்னும் வாழ்ந்து என்ன செய்ய போகிறாய்” என்று...

வெகு நேரம் கடந்திருந்தும் கதவு திறக்காமல் இருக்க கொஞ்சம் பயந்து போனார் விமலா.. கதவு தாள் போட்டிருகிறதா என்று உறுதி பண்ணிக்கொள்ள திறந்தார் கதவு திறந்தது மெத்தையில் அப்படியே அழுதுக்கொண்டு அமர்ந்திருந்தால் கீர்த்தி. ஒரு நொடி இருவரும் பார்த்துகொண்டனர் கண்களை வேகமாக துடைத்துக்கொண்டவள் இப்போது என்ன சொல்வது என்று புரியாமல் முழிக்க, அதை சுமூகமாக்கும் விதமாக “ரொம்ப நேரமாக காணமேன்னு வந்தேன்ம்மா உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு இரவுக்கு அதுவே பண்ணிடலாம்... சப்பாத்தி சாப்பிடுவியா... என்றதும்... ம்ம்ம்ம்” என்று தலையசைத்தாள். வெளியே செல்ல போனவர் மீண்டும் உள்ளே வந்து... “இங்க பாருமா நீ எதுவும் என்கிட்ட சொல்ல வேண்டாம் சரியா இப்போ போய் குளிச்சுட்டு உடையை மாத்திகிட்டு மட்டும் வா...” என்று பரிவாக பேசவும் அவளையும் தழுவிக்கொண்டாள் கீர்த்தி.

முதுகை தடவி கொடுத்தவர் அவள் குளியல் அறைக்கு செல்லவும் கதவை கொஞ்சம் திறந்தே வைத்துவிட்டு அவ்வப்போது வந்து எட்டி பார்த்துவிட்டு சென்றார் சமையலுக்கு நடுவில்.

இதை கவனித்த கீர்த்திக்கு அவருக்கு தாம் தேவையில்லாத தொந்தரவு தருகிறோம் என்று உணர்ந்து வெளியே வந்து அமர்ந்தாள்.

ஒருவாறு தனது மகள் அவளது கணவர், பிறக்க போகும் குழந்தை வெளிநாட்டு வாழ்க்கை... என்று ஏதேதோ மகனும் அன்னையும் பேசி அவளை உன்ன வைத்து படுக்கவும் வைத்துவிட்டனர், ஆனால் உறக்கம்??? அது எளிதில் வரக்கூடியதா... பொறுமையாய் விமலா தூங்கும் வரை கண்களை மூடி படுத்திருந்தவள், தூக்கம் வராமல் பலகணியின் பக்கம் போய் நின்று அசைத்த கதையையே மீண்டும் மீண்டும் மூளைக்கு உணவாய் குடுத்தாள். இனி அன்னையையும் தங்கையையும் போய் பார்ப்பது சரிதானா நான் ஒரு சுமையாக போய்விடுவேனோ... என்று முதல் தடவையாக தோன்ற துவங்கியது. அதுவும் அன்னை போன்ற உருவில் விமலா இந்த சில மணி நேரமாக காட்டிய பாசம் மேலும் யோசிக்க வைத்தது. இப்படி தானே தன் அன்னையும் பார்த்துக்கொள்வாள், இனி அவளுக்கு உதவியாய் இருக்க முடியுமா? என்றெல்லாம் தோன துவங்கியது.

“என்ன பலத்த யோசனை போல...”

எதிர்பாராத நேரத்தில் கேட்ட குரலில் கொஞ்சம் அதிர்ந்து போய் தான் திரும்பினாள். அவளின் பதட்டம் குறைய சில நிமிடங்கள் ஆனது அவளை அப்படி பார்க்கவே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது கைவிரல்கள் நடுங்குவது நிற்கவே இல்லை சில நிமிடங்களாக. அவளுக்கு தண்ணீரை எடுத்து வந்து தந்தவன் “சாரி நீ.. இப்படி பயப்படுவன்னு எதிர்ப்பார்க்கல...”

சிரமப்பட்டு ஒரு முறுவலை கொடுத்து... “தேங்க்ஸ்... நானே இப்படி மாறுவேன்னு எதிர்பார்க்கலை.”

சில மணி துளிகள் மௌனம் ஆட்சிகொள்ள, பொறுமையாய் கூறினாள் கீர்த்தி.. “எனக்கு எங்க அம்மாகிட்ட பேசணும் விரேன், ஊருக்கு போகணும்”. அவளது கூற்றில் கண்கொட்டாமல் அவளை பார்த்தான். அவனது எண்ணம் புரியாமல் “ஏன் என் அம்மாகிட்ட பேசுறது அவ்வளவு பெரிய அதிசயமா...”

“அப்படியில்ல நான் ஒரு காரணம் யோசுச்சு வச்சிருந்தேன் அதுப்படி பார்த்தால் இன்னும் 2 அல்ல 3 நாள் வீட்டுக்கு பேச மாட்டன்னு நெனைச்சேன்...”

“அப்படி என்ன காரணம்...

“ம்ம்ம்ம்... அது...” என்று யோசித்தவன் “நீ யாரையோ காதலிச்சு ஏமாந்திட்டன்னு...” என்று முடித்தான், அவன் கூற்றை முடித்த மறு நொடியே சிரித்துவிட்டாள் கீர்த்தி... “காதலா... எனக்கா... அதுல தோற்றால் இவ்வளவு வலிக்குமா???” என்று கூறி சிரித்தவள். கண்களில் இயலாமையோடு வந்த நீரை துடைத்துக்கொண்டு “ஹ்ம்ம்... தெரியலை... காதலும் இவ்வளவு வலியை தரும் போல... முன்னபின்ன காதல் பண்ணிருந்தால் தானே தெரியும்” என்று கூறிவிட்டு... யோசனையில் ஆழ்ந்தவள் “சரி விரேன் நான் போய் தூங்குறேன்...” என்றுவிட்டு கிளம்பினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.