(Reading time: 12 - 23 minutes)

ங்க அட்டய (அத்தைய), எங்க அட்டய நாங்க இன்னிக்கு கூட்டிட்டு போயிடுவோம்….என்று ஆரம்பித்தாள் ஹனி.

நோ, நோ, சித்திக்கு காச்ச (காய்ச்சல்) எங்க வீத்துல தான் இருப்பாங்க..என்று தொடர்ந்தான் ராபின்…. இவ்வாறு மாறி மாறி இருவரும் பேசிக்கொள்ள அதனை ரூபன் சுவாரசியமாய் பார்த்திருக்க,

நீங்க சொல்லுங்க சித்தா…..சித்தி நம்ம வீட்டுல தான இருப்பாங்க என ரூபனிடம் ராபின் கேட்க,

இல்ல மாமா அட்டய நாங்க கூட்டிட்டு போய்டுவோம்” அடம் பிடித்தாள் ஹனி.

எங்க அட்ட டான் (தான்) எனக்கு ஸ்டோரி சொல்லும்…..

சித்தி கூட நான் கேம்ஸ் விளாடுவேன் ….என இருவரும் மோதிக் கொள்ள சமாதானப் படுத்த இருவரையும் ரூபன் இரு கைகளிலும் ஒரே நேரத்தில் தூக்கிக் கொண்டான், உடனே அந்த குட்டிச் செல்லங்கள் இருவரும் தாம் இதுவரை பேசியவை மறந்து ஒருவரை ஒருவர் பார்த்து கிளுக்கி சிரித்தனர்.

சட்டென்று ஹனி அட்ட, அட்ட என மகிழ்ச்சியாய் ஆரவாரம் செய்ய, அவளும் ராபினும் அவன் கைகளினின்று இறங்கிப் போனதைக் கூட உணராதவனாக தன் வீட்டினர் கைவண்ணத்தில் அலங்காரப் பதுமையாய் ஹாலிற்கு வந்து மேடை நோக்கி கூட்டிச் செல்லப் படுபவளைப் பார்த்து உறைந்து நின்றான் ரூபன்.

பச்சையும் தங்க நிற பார்டருமாய் தான் அவளுக்கு தெரிவுச் செய்திருந்த பட்டுச் சேலையில், பச்சை சோலையாய், தலை நிறைய மல்லிகைப் பூக்கள் சூடி அவை இரு தோளிலும் வழிய தலை அலங்காரத்தாலோ, வெட்கத்தாலோ தலைக் குனிந்தே வெளியே வர, மை சூடிய அவளது பெரிய கண்களின் தாழ்ந்த இமைகளிலும், மலர்ந்து இருந்த முக வனப்பிலும், கன்னங்களின் முறுவலிலும், மிக அளவாய் வண்ணம் சேர்த்து பளபளத்திருந்த மெல்லிய உதடுகளின் அழகிலும் தன்னை மறந்து லயித்திருந்தான்.

தீபன் வந்து அவனை மேடைக்கு அழைத்துச் செல்ல தன்னவளைப் பார்த்த நேரம் முதலான மயக்கம் தீராமலே தன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளை, பார்த்தும் பாராதது போலே தன் பார்வைகளால் கொள்ளையிட்டான். அனிக்காவிற்கோ அருகிலிருந்தவன் பார்வை ஏற்படுத்திய தயக்கத்தால் அவனை மட்டுமல்லாமல் யாரையுமே ஏறிட்டும் பார்க்கவியலாது வெட்கம் தடைச் செய்தது.

தன்னை அறையினின்று ஸ்டேஜிற்கு அழைத்துச் செல்லுகையில் மட்டும் அவள் அவனைக் கண்ணால் தேடி ஒரு நொடி பார்த்ததோடு சரி. கையில் இரு பிள்ளைகளையும் ஏந்தியவனாய், வழக்கத்திற்கு மாறான முக பளபளப்போடு நின்றிருந்தவன். அவனது புன்முறுவலால் சற்றே அடர்ந்த அவன் மீசையும் சிரிக்கின்றது போல அவளை ஈர்த்தது. அவனுக்கு வெள்ளைச் சட்டை அவ்வளவாய் அழகாக பொருந்தியிருக்க அவனுடைய திண்ணிய மார்பும் , கம்பீரமும் அவளைக் கட்டிப் போட அப்போது அவனை விட்டு சட்டென்று கண்களை அகற்ற அவளால் முடியவில்லை. பக்கத்தில் இருந்த ஜாக்குலின் அண்ணி அவளைப் பார்த்து க்கும்.. என கிண்டலாய் தொண்டையை செருமி ………. சிரிக்க வெட்கியவளாக தன் கண்களை தாழ்த்திக் கொண்டாள்.

மேடையில் அமர்ந்திருக்கும் தருணம் தன்னருகில் இருப்பவன் பார்வை அவளை நிமிரவே விடவில்லை. மோதிரம் மாற்றும் தருணம் இருவரும் எதிர் எதிராக நிற்க அவள் கையை பற்றியவன் கையின் வெப்பம் அவள் உள்ளங்கையை தகிக்கச் செய்ய சட்டென்று மோதிரத்தை அணிவிக்காமல் அவளை பார்த்தவாறு நின்றான். அவன் செய்கையைப் பார்த்த அருகில் நின்ற குடும்பத்தினர் மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்து முறுவலித்தனர். அவன் செயலில் தீபனும், ஜீவனும் சற்று நகைக்க ஆரம்பிக்க கிறிஸ்ஸின் முகத்திலும் அனைவரின் செயலின் பிரதிபலிப்பாக சற்றாய் புன்முறுவல் மலர்ந்தது.

 இன்னும் ஏன் ரூபன் தனக்கு மோதிரம் அணிவிக்கவில்லை என்றெண்ணியவளாக தயங்கிக் கொண்டே தன் முகத்தை நிமிர்த்தியவளைக் கண்டு தன் ஆகர்ஷிக்கும் புன்னகையை பரவ விட்டு மோதிரத்தை அணிவித்தான் ரூபன். அவன் புன்னகையினின்று கண்ணை அகற்ற முடியாதவளாக அவளும் மந்திரத்தில் கட்டுண்டவள் போல அவனுக்கு மோதிரம் அணிவிக்க அனைவரின் மகிழ்ச்சியும் கரகோஷமாக ஒலித்தது. திருமணத்திற்கான நாளை அங்கேயே இரு வீட்டாரும் பேசி முடிவுச் செய்ய சில பல சம்பிரதாயங்கள் செவ்வனே நிகழ்ந்தன.

அந்த இனிய மாலையில் ஒருபக்கம் விருந்து ஆரம்பித்திருக்க, அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல ஒருவரொருவராக மேடைக்கு வந்தனர். சில்ஜீ ஃப்ரெண்ட்ஸ் அனைவரும் மேடைக்கு வந்து அழகான மலர்செண்டு கொடுத்து இருவருக்கும் வாழ்த்துக்கள் சொன்னதோடு நில்லாமல், தாங்கள் ரூபனை இன்றுதான் இவ்வளவு சிரித்த முகமாக பார்த்திருக்கிறோம் எனச் சொல்ல அழகாய் வெட்கினான் ரூபன். அவர்கள்  அனைவரையும் கவனித்து விருந்திற்கு அழைத்துச் சென்றான் ஜீவன். தொலை தூரம் இருந்தாலும் ராஜ் மகன்களின் ஏற்பாட்டில் நேரடியான ஒளிபரப்பில் அங்கு நிகழ்வன அனைத்தும் கண்டுக் கொண்டிருந்தார்.

நிகழ்வுகள் அனைத்தும் நிறைவு பெற விருந்தினர்கள் அனைவரும் விடைப் பெற்றுச் செல்ல அனிக்காவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல தயாரானார்கள். சொல்ல முடியாத அளவிற்கு ரூபனுக்கு அவளைப் பிரிவது துயரமாக தோன்றியது. திருமணத்திற்கு இன்னும் மூன்று மாதம் இருக்கின்றதே பெருமூச்செழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.