(Reading time: 18 - 35 minutes)

17. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

காலையில் கண் விழித்த அவந்திகாவிற்கு,இரவு முழுவதும் கண்ட கனவின் தாக்கம் இன்னமும் மிச்சமிருக்க,புன்னகையுடன் எழுந்தாள்.கண்களை திறக்க முடியாத அளவிற்கு கனவுகளின் தாக்கம் இருந்தாலும் முயன்று எழுந்தவளுக்கு,அருகில் இருந்த நிரேஷின் பிம்பம்,அத்தனை சந்தோஷத்தையும் அழித்து விட்டது.

இரவின் ஞாபகங்கள் அவசரமாக நினைவலையில் தேடப்பட,மீராவின் நினைப்பிலையே இருந்தவளுக்கு அதற்கு பின் நடந்த எதுவுமே ஞாபகம் இல்லை.அவசரமாக தன்னை ஆராய்ந்தாள்.நேற்று அணிந்த அதே ஆடையில் இருக்க,மனம் சமன்பட்ட நேரத்தில்,கலக்கமும் ஏற்பட்டது.

தூங்கிக் கொண்டிருந்தவன் கை,தூக்கத்திலையே அவளை துலாவ,அவசரமாக கட்டிலைவிட்டு எழுந்துகொண்டாள்.

என்ன நடந்திருக்கும் என்பதை துளி கூட யோசிக்க அவள் விரும்பவில்லை.யோசித்தாலும் எதுவுமே அவளுக்கு நினைவு வரப்போவதில்லை என்பதும் திண்ணம்.

ஆழ்ந்த மயக்கத்தில் அவள் தான் யஷ்வந்த்துடன் கனவில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாளே.அவனுடன் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்ற கற்பனையும்,யஷ்வந்த்தின் ஆசைகள்,குழந்தைகள் பற்றிய பேச்சு,அவர்களை எப்படியெல்லாம் வளர்க்க வேண்டும் என்ற இருவரின் கற்பனைகளும் கோர்வையாக மாறி,நிகழ்காலத்தில் இருவரும் வாழ்வது போலவே ஒன்றுக்கொன்று தொடர்போடு..காட்சிகள் கோர்வையாக கனவுகளாக வந்து அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

நிரேஷுடன் திருமணத்திற்கு சம்மதித்துவிட்டு,நேற்று அவனது விருப்பங்கள் தான் முக்கியம் என்று என்னவென்னவோ செய்ய துணிந்துவிட்டு,இப்படி கற்பனையில் ஆழந்திருக்கிறோமே என்று வேதனையில் வெம்பியது அவள் மனம்.

குழப்பத்தின் அரசியாய் இருந்தவளுக்கு,கனவின் மூலம் ஒரு தெளிவு ஏற்பட்டது உண்மை.யஷ்வந்த்தை தவிர இந்த மனம் வேறு ஒருவரையும் முழு மனதோடு ஏற்காது என்று புரிந்துவிட்டாலும்,நிதர்சனத்தை புரிந்துகொண்டு அவசரமாக சுயஅலசலுக்கும் தடை போட்டாள்.

என்ன முயன்றும் நேற்று ஏற்பட்ட மயக்கம் எதனால் என்று ஆராயாமல் இருக்க முடியவில்லை.

‘அவன் மேல் சந்தேகம் கொள்’என்று உந்திய மனதை அடக்க முடியவில்லை.

‘எனக்கும் போதை மாத்திரை கொடுத்துவிட்டானா’என்ற நினைவு எழாமல் இல்லை.

எழுப்பி கேட்டுவிடலாம் என்று அருகில் சென்றால்,தலையணையை அணைத்துக்கொண்டு,இவள் பெயரை சொல்லி புலம்பிக் கொண்டிருந்தான்.

மேற்கொண்டு அங்கிருக்கவே பிடிக்கவில்லை.தன்னை நினைத்தே அவளுக்கு அவமானமாக இருந்தது..ஏன் இப்படி ஆனோம் என்று மட்டும் புரியவேயில்லை.

சரணை பார்க்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது.அவனிடம் பேசினால் நிச்சயம் தனக்கு ஒரு தெளிவு கிடைக்கும் என்ற எண்ணத்துடன் அவள் போனை எடுக்கப் போக,அதற்குள் அங்கு வந்த நிரேஷ்..

“அவந்தி..இன்னைக்கு வெளில போய் சுத்தறோம்..ஈவ்னிங் பிளைட்..அதுக்குள்ள ஒரு ரவுன்ட் போயிட்டு வந்துடலாம்.கிளம்பு..க்விக்”என்று மாடி அறையில் இருந்தே ஆணைகளை பிறப்பிக்க,அதற்கு மேல் அவளுக்கு எதுவும் யோசிக்க தோன்றவில்லை.

இதே நிலை தான் அன்றைய மாலை வரைக்குமே நீடித்தது.அவன் அருகில் இருக்கும் போது அவன் செய்த தவறுகளோ,தன்னையும் தவறாக உபயோகப்படுத்தியிருக்கிறான் என்ற சிந்தனையோ,நேற்றைய கனவின் தாக்கம் கூட அவளிடம் இல்லாமல் போனதை என்ன சொல்ல!!

விதி என்று சொல்வதா,இல்லை நிரேஷின் மதி என்று சொல்வதா..இல்லை அதையும் விட பல சித்து விளையாட்டுக்களின் வீரியம் என்று சொல்வதா!! பின்னது தான் சரியாக இருக்கும்.

பகலெல்லாம் ஊர் சுற்றிய களைப்பையும் மீறி,நிரேஷ் உற்சாகமாக அவந்தியுடன் வீட்டுக்கு வர,தன் வீட்டு வாயிலில் இருந்த கார்,நிரேஷ் மனதில் அபாய மணியை ஒலிக்க செய்தது.

அவந்திகாவின் கையை இறுகப் பிடித்துக்கொண்டே காரில் இருந்து இறங்கினான்.

‘யாருடைய கார்’என்பது போல அவந்திகா,நிரேஷை பார்க்க,அவனது கண் அசைவில் செக்யூரிட்டி அவனிடம் வந்து,”மேடமோட ஹஸ்பன்ட் வந்திருக்கார்”எனவும் நிரேஷ் கொதித்துப் போனான்.

வார்த்தைகளை வெளிவிட விரும்பாத,உணர்வுகளை உள்ளுக்குள்ளே அடக்கிப் பழகிய அவனது குணம் கை கொடுத்தாலும்,மிகவும் அழுத்தமாக அவந்திகாவின் கைப்பற்றிக் கொண்டு உள்ளே சென்றான்.

அவளுக்கோ கணவன் என்ற சொல்லிலையே எல்லாம் ஆட்டம் கண்டிருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.