(Reading time: 15 - 29 minutes)

ஒரு தடவை அண்ணி உங்களுக்கு என்னை பெண் கேட்கிறதா சொன்னப்போ முதலில முதலில என் கிட்ட கேட்காம எப்படி பெண் கேட்கிற அளவுக்கு வரலாம்னு ஒரு பக்கம் கோபமா இருந்ததாலும் நாமளும் இப்படித்தானே சொல்றதா இருந்தோம்னு நினைச்சு சந்தோஷமாவும் இருந்துச்சு.

நம்ம ரெண்ட் பேரும் எப்பவுமே அதிகமா மனம் விட்டு பேசியிருக்காவிட்டாலும் நீங்க அடிக்கடி உங்களுக்கு நான் எவ்வளவு முக்கியம்னு உணர்த்திட்டே இருப்பீங்க அது எனக்கு எப்பவுமே புரியும்.

ஆனால், நீங்க எனக்கு எவ்வளவு முக்கியம்னு ஒரு நான் ஒருபோதும் உணர்ந்திருக்கவேயில்லைனு நினைக்கிறேன்.

அதனால தான் உங்களை திருமணம் செஞ்சுகிட்டா எப்பவுமே திருமணத்துக்கு பிறகு அம்மாவை அடிக்கடி சந்திக்கிற மாதிரி பக்கத்தில வீடுன்னு ஒரு காரணம். எனக்கு ரொம்ப பிடிச்சவங்க எல்லோர் கூடயும் அதான் அத்தை, ஜீவன், தீபன் அத்தான் கூடயும் இருக்க கிடைக்குமே அப்படி ஒரு காரணம் இப்படில்லாம் தான் நான் எனக்கே காரணம் கற்பிச்சிட்டு இருந்தேன். இதெல்லாம் விக்ரம்னு ஒருத்தரை அப்பா எனக்கு பார்த்திருக்கார்னு சொல்லியிருந்த வரைக்கும் தான்.

அதுக்கப்புறமாதான் எனக்கே என் மனசு புரிஞ்சது. உங்களுக்குன்னு நான் என் மனசில கொடுத்திருக்கிற இடமும் புரிஞ்சது. அதை வேற யாருக்கும் கொடுக்கவே முடியாது என்கிற உண்மையும் கூட.

கடைசில அவசர அவசரமா நான் முடிவெடுக்கப் போக நான் செஞ்ச தப்புக்கெல்லாம் நீங்க நிறைய கஷ்டப்பட வேண்டியதாயிடுச்சு. எல்லாம் என்னால தான். உங்களுக்கு என் மேல ரொம்ப கோபமிருக்குன்னு புரியுது அத்தான். நீங்க என்னை திட்டினாலும் பரவாயில்லை. ஆனால் ப்ளீஸ் என் கிட்ட பேசுங்க எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

ப்ளீஸ்.

கடிதத்தை வாசித்தவன் நிகழ்ந்த எல்லாவற்றையும் தன்னுடைய தவறாக உருவகப்படுத்திக் கொண்டு இருக்கின்றவளை இவள் எனக்கும் மேல் இருக்கிறாளே என்று மனதிற்குள்ளாக செல்லமாக திட்டிக் கொண்டான். போன் பேசுவதானால் இரவே பேசியிருப்பான். ஆனால், அவளே குறிப்பிட்ட மாதிரி இதுவரை இருவரும் மனம் விட்டு பேசியதே கிடையாது.

முன்பு என்னவென்றால் அவளுக்கே தெரியாமல் அவளுக்கு தாலியைக் கட்டி தன் வீட்டிற்கு கூட்டி வந்தவனுக்கு தன்னுடைய எந்தவித செயலாலும் தன் வீட்டினராகவே இருந்தாலும், யாரும் அவளை தரக்குறைவாக பேசி விடக் கூடாது என்பதனால் அப்போது அவளுடன் பேச மிக தயக்கமாக இருந்தது. நிச்சயம் ஆன பின்னால் இருவரும் பேசும் போது யாரும் எதுவும் சொல்ல இயலாது என்பதால் அந்நாளுக்காக காத்திருந்தான்.

இப்போது முன்னிரவு அவள் கடிதம் படித்த பின்னால் அவளை எப்போது பார்ப்போமோ என்று இருந்தாலும் தன் வேலை முடிந்து சாயும்காலம் அவளை சந்தித்து பேச எண்ணியிருந்தான். ஆனால், ஜீவனுடனான் அவள் பேச்சைக் கேட்டபின்னால் அவனால் அப்படி இருக்க முடியவில்லை. ஏதோ சிரிப்பு விளையாட்டு என்று அவள் தன்னை காட்டிக் கொண்டாலும் அவளுக்கு உள்ளுக்குள்ளே ஏகத்திற்கு ஆதங்கம் இருக்கின்றது என்று உணர்ந்ததால் உடனே அவளை சந்திக்க விரைந்தான்.

வெகு நாளைக்கு அப்புறமாக ரூபன் அனிக்காவின் வீட்டிற்கு வந்திருந்தான். முன்னறையிலேயே அத்தையைக் காணவும் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தான். ஆனால், கண்களின் அலைபாய்தலோ நிற்கவில்லை. சாராவும் அவன் பொறுமையை அதிகம் சோதிக்காமல் ,

“அனிம்மா இப்போதான் அவ ரூமுக்கு போனா” என்று பாதி தகவலும் பாதி அனுமதியுமாய் பதிலிருக்க, ரூபன் மாடிப்படிகள் ஏறத் தொடங்கினான். சாரா மருமகன் கையிலிருந்த அந்த பெரிய பையை கவனிக்க தவறவில்லை.

அவளறையின் வாசல் அருகேச் சென்றவன் அவளை முதலில் அழைக்கவா என்றெண்ணி தாமதிக்க உள்ளேயோ அவள் யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்டது. போனில் பேசுகிறாளாக இருக்கும் என்றெண்ணியவனாக சத்தமிட்டு தொந்தரவு செய்யாமல் உள்ளே நுழைந்தான்.

அவன் அறையை விடவும் சற்று விசாலமான அறைதான், திருமணத்திற்கு பிறகு அவளுக்கு ஏற்ற மாதிரி தன் அறையில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று சில நொடிகளில் கண்ணால் அளவிட்டான்.

நாளைக்கு நான் உன்னை மாதிரி சேம் கலர் ஸாரி தான் கட்டுறதுக்கு எடுத்து வச்சிருக்கேன். காலைல மட்டும் மேட்சிங்கா வச்சுக்கிறதுக்கு ஒரே ஒரு பூ பறிச்சுகட்டுமா?

கைகளில் போன் இல்லை ஜன்னலின் அந்தப் பக்கம் யாரோடு பேசிக் கொண்டிருக்கிறாளென கவனித்து அவளை நெருங்கினான். அவள் வழக்கமான உடையில் இல்லை. வீட்டிற்கு உடுக்கும் வகையிலான அதிக கனமில்லாத சேலையொன்றை அணிந்திருந்தாள். அதன் இளஞ்சிவப்பு நிறம் அவளது உருவத்தை ரம்யமாய் காட்டி இன்னுமதிகமாய் அவனை ஈர்த்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.