(Reading time: 14 - 28 minutes)

"என்ன?"

"சர்ப்ரைஸ்!"-புன்னகையுடன் கூறினான் அவன்.

"கெட் ரெடி!அநேகமா,நாளைக்கு எல்லாம் ஒரு முடிவுக்கு வந்துடும்னு நினைக்கிறேன்!"-குறும்பாக அவன் கண்ணடிக்க,சில நொடிகள் அவளது இதயத்துடிப்பு உச்சமாய் துடிக்க ஆரம்பித்தது.

அவளது மனதினில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்!கனவுகள்!திருமணமாகி ஓராண்டு நிறைவுற்ற நிலையில்,இனியும் அவனை காக்க வைக்கும் எண்ணம் அவளுக்கில்லை.

மனம் முழுதும் புத்தம் புதிய வாழ்க்கைக்கான கனவுகள் உதிக்க,மனம் பூத்திருந்தாள் அவள்!!

றுநாள் சூரியோதயம்!!

"லூஸி!சிவாவை பார்த்தீங்களா?"-அதிகாலையிலே அவனை காணாது வினவினாள் கீதா.

"ம்...அவன் காலையிலே ஹாஸ்பிட்டல் கிளம்பிட்டானே!"-சட்டென வாடியது அவள் முகம்.

"உன்கிட்ட சொல்லலையா?"

"இல்லை...நான்...நல்ல தூங்கிட்டு இருந்தேன்.அதான் எழுப்பலை போல!யூ கேரி ஆன்!"-என்றவள் மெதுவாக அங்கிருந்து நழுவிக் கொண்டாள்.

எப்போதும் இதுபோன்று தன்னிடம் கூறாமல் அவன் எங்கும் சென்றதில்லையே!என்ற எண்ணம் கேள்வியாய் மாறி அவளை குடைய ஆரம்பித்தது.எனினும்,இனி இதுபோன்ற கசப்பான எண்ணங்களுக்கு இடமளிக்க அவள் விரும்பவில்லை.துளியும் விரும்பவில்லை!!ஏதேதோ சிந்தித்தப்படி தனதறைக்கு சென்றாள் அவள்.அன்று ஏனோ காலம் நீடித்திருப்பதாய் ஓர் உணர்வு!ஆதவன் சற்றும் இரக்கமில்லாமல் இவள் துன்பத்தைக் கண்டு நகையுறுகிறானோ என்றெல்லாம் ஓர் எண்ணம் அவளுக்குள்!!

வஸ்திரங்கள் அடுக்கப்பட்டிருந்த அலமாரியை திறந்தவள்,அதிலிருந்த அவனது சட்டை ஒன்றை வெளியே எடுத்தாள்.அதனை தன் முகத்தோடு உரசியவளின் மனம் உண்மையில் நிலையில்லாமல் தவித்தது.

"உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்ல சிவா!நான் செய்தது ரொம்ப பெரிய தப்பு!நான் என்னுடைய சுயநலத்துக்காக உன் உணர்வுகளோட விளையாடிட்டேன்.உன் காதலை அழிக்கப் பார்த்திருக்கேன்.ஆனா,இதுநாள் வரை நீ என்னைப் பற்றி தப்பா ஒரு வார்த்தைக் கூட சொன்னது இல்லை.என்கிட்ட கோபப்பட்டது இல்லை.என்னை தவிர வேற ஒரு பொண்ணைக் கூட நிமிர்ந்து பார்த்ததில்லை.என் கடந்த காலம் வெறும் கனவா இருந்திருந்தா,நான் சந்தோஷமா எப்போதோ என் வாழ்க்கையை உன் கூட ஆரம்பித்திருப்பேன் சிவா!உன்னை மாதிரி ஒரு ஒருவன் துணையா வர எத்தனையோ பெண்கள் தவம் கிடக்கிறாங்க!ஆனா,நீ எனக்கு கிடைத்திருக்க!"

"நல்லவேளை அன்னிக்கு நீ சொன்னப்படி டிவோர்ஸ் அப்ளை பண்ண எந்த முயற்சியும் எடுக்கலை.நீயாகவும் என் மனசுல இருக்கிறதை புரிந்துக்க மாட்ட!இன்னிக்கு வேற ஏதோ சர்ப்ரைஸ் தரேன்னு சொன்ன,ஒருவேளை நான் சொல்ல தவிக்கும் விஷயம் உனக்கு புரிஞ்சிடுச்சா?என்னவேணும்னாலும் இருக்கட்டும்!நான் இனி உன்னை விட்டுக் கொடுக்கிறதா இல்லை.ப்ளீஸ்...சீக்கிரமா வீட்டுக்கு வா!"-என்றவள் அவனது சட்டையை இறுக அணைத்துக் கொண்டாள்.

அவளது வேண்டுதல் வீண் போகவில்லை.மாலை நேரம் விரைந்து வர,ஆதவன் உலகின் மறுப்பக்கத்திற்கு ஔி நல்க,விரைந்து தன் அஸ்வங்கள் பூட்டிய தேரில் ஏறி கிளம்ப,இருள் சூழ்ந்த திசைக்கு ஔி நல்க பெருங்கருணையோடு வானில் உதித்தாள் வெண்ணிலா.தனது தோழியர்கள் கோடி உடுக்களோடு எழுந்தவளைக் கண்டவளின் மனதில் எண்ண அலைகள்,கடல் நீரை காட்டிலும் வேகமாய் எழும்பின.என்றுமில்லாமல் அன்று சற்று தனித்துவ அலங்காரம் பூண்டிருந்தாள்.திருமணமான பின்,முதல்முறையாய் அவன் வாங்கிக் கொடுத்த புடவையில்,அவனுக்கு பிடித்ததைப் போன்று இயற்கை அலங்காரத்தோடு தன் மனதை மட்டுமல்ல,தோற்றத்தையும் அவனுக்காக உருமாற்றி இருந்தாள் கீதா.நேரம் கடந்து கொண்டே இருந்தது!!மணி ஒன்பது!!இன்னும் அவன் வரவில்லை.ஏன் இவ்வளவு தாமதம்??என்றவள் சிந்தித்திருக்க,அவனது காரின் சப்தம் அவள் செவிகளுக்குள் நுழைந்தது.அவ்வளவு நேரமும் எண்ணற்ற ஒத்திகை செய்திருந்தவள்,அனைத்தையும் அந்த ஒரு நொடியில் மறந்துப் போனாள்.இனம் புரியாத பதற்றம் இதயம் முழுவதையும் வியாபிக்க தொடங்கியது.அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதையே மறந்தாள் அவள்.

"ஓ.கே.கீதா!டென்ஷன் ஆகாதே!"-தன்னை தானே ஆசுவாசப்படுத்தியவள்,கீழே இறங்கி சென்றாள்.அவனோ சோர்ந்துப் போய் சோபாவில் சாய்ந்து கண்களை மூடி இருந்தது.

"சிவா!"

"ம்..!"-விழிகள் திறந்து அவளைப் பார்த்தவனின் முகம் சட்டென வாடியது.

"ஃப்ரஷ் ஆயிட்டு வாங்க!சாப்பாடு எடுத்து வைக்கிறேன்!"

"இல்லை...வேணாம்!"

"வேணாமா?"-குழப்பமாக கேட்டாள் அவள்.

"எனக்கு...எனக்கு சுத்தமா பசிக்கலை!நீ சாப்பிடு!எனக்கு வேணாம்!"-என்றவன் வேறொன்றும் பேசாமல் தனதறைக்கு சென்றுவிட்டான்.எண்ணற்ற எண்ணங்களை மனதில் கொண்டிருந்தவளுக்கு பெருத்த ஏமாற்றம்!!என்ன நேர்ந்தது இவனுக்கு??அவனது நடவடிக்கை யாவும் மர்மமாய் திரிந்தன.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.