(Reading time: 9 - 17 minutes)

ரூபனை பாராத ஏக்கம், கோபம், தன்னிடம் என்னென்னவெல்லாம் மறைத்து வைக்கிறான் என்கிற ஆதங்கம் இன்னும் என்னென்னவோ மனதைச் சூழ அவள் உள்ளம் கொந்தளிப்பில் இருந்தது. அதிலும் இன்று அவர்கள் திருமணத்திற்கான முதல் அறிக்கை. அவர்கள் இருவருக்குமாக திருமணம் செய்யவிருக்கிறார்கள் என்பதையும், அந்த திருமணத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் மக்கள் தெரிவிக்க வேண்டுமென்றும் பங்கு குருவானவர் ஆலயத்தில் அறிவிப்பார். இவ்வாறு திருமணம் நடைபெறும் நாளுக்கு முந்திய சில ஞாயிற்றுக் கிழமைகளில் குறைந்த பட்சம் இரண்டு அறிக்கைகள் அதாவது இரண்டு ஞாயிறுகள் அறிவிக்கப் படவேண்டும் என்பது முறையாகும்.

இதன் நோக்கம் தவறான உறவு முறைகளில் திருமணம், அல்லது ஏற்கெனவே திருமணம் செய்தவராக மணமக்களில் யாராவது இருந்தால் ஆலயத்தில் வரும் யாரும் அதனை வெளிப்படுத்தி அந்த தவறான திருமணம் நடைபெறாமல் தடுக்க இயலும் என்பதாகும்.

இது ஒருபுறம் இருக்க இப்படி முதல் திருமண அறிக்கை அறிவிக்கும் நேரம் ஆலயத்தில் வரும் எல்லோருக்குமே இன்னாருக்கும் இன்னாருக்கும் திருமணம் என்று தெரியவந்துவிடும். நெருங்கிய தோழர்கள் தோழிகள் திருப்பலி முடிந்தவுடன் கேலி கிண்டல் என்று சீண்டுவதும் உண்டு. அல்லாது அவ்வளவு பரிச்சயம் இல்லாத மற்றவர்கள் பொண்ணு யாரு இந்த பொண்ணா? பையன் யாரு அவனா? என்று குறு குறு பார்வைகள் பார்ப்பதுவும் உண்டு.

எனவே எப்போதும் மகிழ்ச்சியும், வெட்கமுமான தருணங்களை முதல் திருமண அறிக்கை மணமக்களுக்கு வழங்கக் கூடிய ஒன்றாகும். எதிர்பார்த்த நேரம் வர பங்கு குரு அறிக்கை வாசிக்க ஆரம்பித்தார்.

" ……………வசிக்கும் நமது பங்கைச் சேர்ந்த தாமஸ், சாரா இவர்கள் மகளான அனிக்காவிற்கும், ………..வசிக்கும் நமது பங்கைச் சேர்ந்த ராஜ், இந்திரா மகனான ரூபனுக்கும் திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கின்றனர். இந்த திருமணத்தில் ஏதேனும் விக்கினம் இருந்தால் பங்கு குருவிடம் தெரிவிப்பது பங்கு மக்களின் கடமையாகும்" 

என்று அவர்களது திருமண அறிக்கை வாசித்து அதனை தொடர்ந்து திருப்பலி இறுதி செபத்துடன் நிறைவுற, அவளை நோக்கி ஒவ்வொருவராக வந்து விசாரிக்கவும் , வாழ்த்து தெரிவிக்கவுமாக இருந்தனர். அவள் அன்னையோடும் அண்ணியோடும் ஒன்றிக் கொண்டாள்.

வயதான ஒருவர் சாராவிடம் வந்து விசாரிக்கலானார்,

சாரா உன் பொண்ணை உன்னோட அண்ணன் பையனுக்கு  கட்டி கொடுக்கிறியாக்கும்…

ஆமா மாமி..

பையன் எங்க இருக்கிறான்….கூப்பிடு பார்ப்போம்.

அனிக்கா அவன் எங்கே வந்திருக்க போகிறான் என்று எண்ணியிருக்க…. சாராவோ,

ரூபன் தம்பி வெளியில தான் இருக்கான் மாமி  கூப்பிடறேன் என்றவராக திரும்பினார்.

அட ஃபிராடு அப்போ நீ திரும்ப வந்திட்டியா?..... அப்படியே வந்தாலும் நீ இவ்வளவு நேரம் ஜெபிக்க சர்ச்க்கு வராம கடைசி நேரம் அறிக்கை வாசிக்கிறப்போ வந்தியா? என மனதிற்குள்ளாக திட்டிக் கொண்டாள் அனிக்கா.

என்ன அத்தை என்று சாராவிற்கு பதில் கொடுத்தவனாக அனிக்கா அருகில் வந்து பாந்தமாக நின்றுக் கொண்டான் ரூபன். வழக்கத்திற்கு மாறாக ஃபார்மலில் அனிக்காவை கவரவே வெகு சிரத்தை எடுத்து தயாராகி வந்திருந்தவனை அவளோ பார்க்கவே இல்லை. ஏற்கெனவே இருந்த பல உணர்வுகளோடு சர்சில் அவனோடு ஜோடியாக நிற்க நேர்ந்த வெட்கமும் சேர்ந்துக் கொள்ள அவளால் அவனை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை.

அந்த பெரியவரோ தான் ஊருக்கு செல்வதாக இருப்பதால் திருமணத்தின் போது வரவியலாது எனச் சொல்லி இருவருக்கும் நெற்றியில் சிலுவை வரைந்து ஆசீர்வாதம் வழங்கிச் சென்றார்.

அவனோடு நிற்கும் நொடிகளில் வெட்கத்தில் வெடவெடத்துக் கொண்டிருந்தாள் அனிக்கா அவனோ அவளை பாராதது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

"வாரேன் அத்தை" சிறிது நேரத்தில் விடைப் பெற்றான் அவன். அவளோ இன்னும் அவனை நிமிர்ந்தும் பார்த்திருக்கவில்லை. ஹனியுடன் தன் கையை கோர்த்துக் கொண்டவளாக ஆலயத்தை விட்டு வெளியேறி வீடு நோக்கி அம்மா, அண்ணியுடன் சேர்ந்து நடக்கலானாள்.

ஆலயத்தின் வழியினின்று திரும்பும் திருப்பம் வரும்போது தன்னை தடுக்க இயலாது பல நாட்களாக காணாதிருந்த அவன் உருவம் காண மெதுவாய் திரும்பினாள். ஆலயத்திற்கு சற்றுத் தள்ளி வெளியில் நின்றிருந்தவனோ கண் அகற்றாது முன்பிருந்தே அவளையேத்தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

கண்கள் சிவந்து, சோர்ந்து களைப்பில் ரூபன் நின்றுக் கொண்டிருந்தது அவளுக்கு புரிந்தது. எப்போது வந்தானோ தெரியவில்லை. தன்னை காண்பதற்காகவே தூங்காமல் கொள்ளாமல் ஓடி வந்திருக்கிறான் என்றெண்ணி உள்ளூர உருகினாள். ஆனால், வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.

ரூபனோ "நான் உன்னை அறிவேனடி" என்ற பாவனையில் தன்னைச் சுற்றி நின்றவர்கள் கிண்டலையும் பொருட்படுத்தாது அவள் சென்ற திசை நோக்கி புன்முறுவலோடு பார்த்து நின்றுக் கொண்டிருந்தான்.

ஹாய் பிரண்ட்ஸ்,

இந்த அத்தியாயம் நான்  பெரிய பகுதியாக கொடுக்க எண்ணியும் நேரமின்மையால் பாதிதான் எழுத முடிந்தது. அதனால் தான் எழுதியவரைக்கும் பகிர்ந்துக் கொள்கின்றேன். ப்ளீஸ் அட்ஜஸ்ட் :)

தொடரும்

Episode # 33

Episode # 35

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.