(Reading time: 10 - 20 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 13 - தேவி

vizhikalile kadhal vizha

திருமண வீட்டில் இருந்து கிளம்பிய மலருக்கு சற்று நேரம் தனிமையில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.. அதனால் வீட்டிற்கு சென்றவுடன் தன் அம்மாவிடம் அலுப்பாக இருப்பதாக கூறி தன் அறைக்கு சென்று விட்டாள்.

அறைக்கு சென்று சற்று நேரம் தூங்கலாம் என்று எண்ணி கண்ணை மூடினாள். ஆனால்  செழியனின் பார்வையும், அவன் கூறியதுமே கண்ணில் வலம் வர, செய்வதறியாது புரண்டு படுத்து கொண்டு இருக்கும் போதுதான் செழியன் போன் வந்தது.

செழியன் பேசி வைத்தவுடன் மலரின் மனதில் ஏதோ ஏதோ சொல்ல தெரியாத எண்ணங்கள் வந்து போய்க் கொண்டு இருந்தன.. அதை அடக்கி விட்டு, தன் வீட்டில் மறுநாள் காலேஜ் செல்ல வேண்டி இருப்பதை எப்படி சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

தன் மனதில் எந்த கள்ளமும் இல்லை என்றால் வீட்டில் நேரடியாகவே சொல்லி இருப்பாள் செழியன் சார் அழைத்து இருக்கிறார் என்று.. ஆனால் அவளுக்கு ஒரு ஊகம் இருந்தது.. செழியன் அவளிடம் propose செய்ய போகிறாரோ என்று. அது அவளுக்கு பிடிக்கவும் செய்தது.. அதே சமயம் தவறு போலவும் தோன்றியது.

இந்த புரியாத உணர்வினால் மிகவும் தடுமாற்றமாக இருந்தாள் மலர். இப்படி யோசித்துக் கொண்டு இருந்தால் வேலைக்கு ஆகாது என்று எண்ணியவளாக தன் அம்மாவை தேடி சென்றாள்.

இவள் அம்மா அடுப்பில் வேலையாக இருக்கவும், வரண்டாவில் இருந்த ஊஞ்சலில் அமர்ந்து ஆட ஆரம்பித்தாள்.

இவள் வாசலுக்கு வரவும், டிவி பார்த்துக் கொண்டு இருந்த சுந்தரவடிவும் வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டு ஊஞ்சல் ஆடிக் கொண்டு இருக்கும் பேத்தியை பார்த்துக் கொண்டு இருந்தார்.

சற்று நேரம் ஆடிக் கொண்டு இருந்த மலர், பாட்டி தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கவும்,

“ஏன்.. ஆச்சி.. என்ன என்னையே பார்த்துட்டு இருக்க.. ? “

“ஏன் புள்ள.. மூஞ்சு எல்லாம் வாடி கிடக்க... ? “

திடுக்கிட்ட மலர் “அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை ஆச்சி.. நான் நல்லாத்தான் இருக்கேன்..” என்றாள்.

இவளும் , ஆச்சியும் பேசிக் கொண்டு இருக்கும் போதே அங்கே வந்த மலர் அம்மா வள்ளி,

“இந்தா கண்ணு.. எடுத்துக்கோ “ என, ஒரு தட்டில் கைமுறுக்கும், காபியும் கொண்டு வந்து கொடுத்தார்.

“ஏம்மா.. நீ உள்ளே ஏதோ வேலையா இருக்கேன்னுதனே.. நானே வெளிலே வந்து உட்கார்ந்தேன்.. நான் உன்ன கூப்பிடவும் இல்லை.. நீ என்னிய பார்த்த மாதிரியும் இல்லை.. அப்போ எப்படி சரியா கொண்டு வந்து கொடுக்க..?”

“எந்தாயி .. இது என்ன கம்ப சூத்திரமா? ஒத்த புள்ளைய வச்சிருக்கவ.. உன் நினைப்பு தவிர உங்காத்தாக்கு வேற என்ன யோசனை ஓடும்.. “ என்று வள்ளி பதில் சொல்லும் முன்னே வடிவு வாயை திறந்தார்.

என் பொண்ணு எங்கிட்ட கேட்டதுக்கு இவுக பதில் சொல்லணுமாக்கும்.. எனக்கு சொல்ல தெரியாதா.. எல்லாமே இவுக இஷ்டபடிதான் நடக்கணும்.. என்று மனதிற்குள் தாளித்தார்... வாயை திறந்தால் அவள் மாமியாரோடு போட்டி போட முடியுமா என்ன  ? என்று எண்ணியவர், மலருக்கு பதிலாக

“உங்க ஆச்சி டிவி ஆப் பண்ணிட்டு போனாங்களே.. அப்பா வர இன்னும் நேரம் இருக்கு .. நீதான் வந்து இருக்கணும்நு காபி போட்டு எடுத்து வந்தேன் செல்லம்.. உங்க ஆச்சி சொல்றதும் சரிதான்.. உன்னை தவிர எங்களுக்கு வேற என்னடா நினைப்பு இருக்க போகுது.. ?” என்று கூறினார்.

“அதேதானே நானும் சொன்னேன்.. நீ என்னமோ அதுக்கு விளக்கம் கொடுத்துட்டு இருக்கிரவ... “ என்று வடிவு கொடி பிடிக்க,

“என் பொண்ணு என்கிட்டதானே கேட்டா .. அதுக்கு தானே பதில் சொல்லிட்டு இருந்தேன்.. என்னமோ உங்கட்ட கேட்டதுக்கு சொல்ற மாதிரி குதிக்கிறீங்க.. “ என்று அவரும் கொடி பிடித்தார்..

இவர்கள் இருவரின் வாக்கு வாதத்தை கவனித்த மலர்,

“ஐயோ.. மறுபடியும் ஆரம்பிச்சுடீங்களா.. உங்க ரெண்டு பேருக்கும் எப்படித்தான் இப்படி ஏழாம் பொருத்தமா இருக்கோ.. ஆச்சி.. நீ உன் மவனுக்கு, எங்க அம்மா ஜாதகத்தை வாங்கி பொருத்தம் பார்க்கும் முன்னாடி .. உனக்கும் எங்க அம்மாவிற்கும் பொருத்தம் எப்படின்னு பார்த்து இருக்கணும்.. எத எடுத்தாலும் ஏட்டிக்கு போட்டி தான்.. உன்னோட .. “ என்று பட பட வென பொரிய ஆரம்பித்தாள்.

இப்போது மலரின் முகம் சற்று தெளிவாய் இருக்க, வடிவும், வள்ளியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

மலர் இவர்கள் பக்கம் திரும்ப ஆரம்பிக்கும் போது, இருவரும் ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை தூக்கி வைத்து கொண்டு இருந்தனர்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.