(Reading time: 9 - 18 minutes)

அப்பாவோட நண்பர்கள் அவங்க மேல கேஸ் போட்டு தண்டனை வாங்கிக்  கொடுக்கலாம்ன்னு சொன்னாங்க.... ஆனா பாட்டிதான் பயந்துட்டு வேண்டவே வேண்டாம்ன்னு தடுத்துட்டாங்க... அந்த சம்பவத்துக்கு பிறகு எனக்கு ஓவர் பாதுகாப்பு கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க... என்னை விளையாடக்கூட வெளிய விட மாட்டாங்க.... ஸ்கூல்க்கும் தாத்தாதான்  கொண்டுவிட்டு கூட்டிட்டு வருவார்.... புது இடம் அப்படிங்கறதால எனக்கு அப்போ நண்பர்களும் கம்மி.... ஸோ சின்னதுல இருந்து ஒரு மாதிரி அடக்கியே வளர்க்கப்பட்டதாலயா, இல்லை அப்பாவை அந்தக் கோலத்துல பார்த்ததாலையா தெரியலை எனக்கு எதைப் பார்த்தாலும் பயம்... யாரானும் கொஞ்சம் சத்தமா பேசினாக்கூட அந்த இடத்துல இருக்க மாட்டேன்... அனாவசியமா இல்லை, அவசியமாக்கூட யார்கிட்டயும் சண்டைக்கு போகமாட்டேன்... நான் மட்டும் இல்லை என் கூட இருக்கறவங்களும் அப்படித்தான் இருக்கணும்ன்னு நினைப்பேன்... அப்பாவோட கொலை நடந்தது இரவு நேரம்... அதனால இன்னைக்கு வரைக்கும் நான் ஏழு மணிக்கு மேல எங்கயும் வெளிய அதிகம் போகமாட்டேன்.... பத்தாவது முடிக்கறவரை தனியா இருக்கவே பயமா இருக்கும்... அப்பறம் அப்பறம் கொஞ்ச கொஞ்சமா எனக்கு நானே தைரியம் சொல்லி தனியா படுக்க ஆரம்பிச்சேன்... Infact மொதல்ல கொஞ்ச நாள் பயத்துல தூங்கினது கூட கிடையாது... ரூம்ல லைட் போட்டு வச்சுட்டு காதுல ஹெட்போன் மாட்டிட்டு ஏதானும் காமெடி கேட்டுட்டு இருப்பேன்... என்னையே அறியாம தூங்கினா உண்டு...”, ராஜா பாரதி எதுவாவது கூறுவாளோ என்பதுபோல் பார்க்க, அவள் அவனை முடிக்குமாறு கூறினாள்.

“என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கற நீ... என்னடா இது ஆண்பிள்ளையா இருந்துட்டு இப்படி ஒரு பயந்தாங்கோலியா இருக்கானேன்னு யோசிக்கறியா...”

“ச்சே ச்சே அப்படில்லாம் இல்லை... இதெல்லாம் மன உணர்வுகள்தானே... ஆண்கள் அப்படின்னாலே தைரியமா இருந்தே ஆகணும், பெண்கள்ன்னா பயந்து இருக்கணும்னு ஏதானும் ரூல்ஸ் இருக்கா என்ன... அவங்க அவங்க சந்தர்ப்ப சூழ்நிலைதான் ஒருத்தரோட குண இயல்பை  தீர்மானிக்குது.... எல்லாருமே அநீதியைக் கண்டா பொங்கி எழ இது என்ன சினிமாவா... பயம் அப்படிங்கறது நிறைய பேருக்கு உண்டு... சில பேர் உங்களை மாதிரி வெளிய காட்டிக்கறாங்க... மத்தவங்க காட்டிக்கறதில்லை அவ்வளவுதான் வித்யாசம்....”

“இருந்தாலும் பெண்களுக்கு நல்ல வீரமான ஆணைத்தானே பிடிக்கும்... என்னை மாதிரி பக்கத்து ஊருல கலவரம்ன்னா இங்க கதவை மூடற ஆளை எப்படி பிடிக்கும்....”

“நீங்க என்ன, உங்களைத்தவிர மத்த எல்லாருமே சண்டைன்னு வந்துட்டா நாங்க சண்டியர்ன்னு கிளம்பிடறாங்கன்னு  நினைச்சீங்களா.... ஒரு பத்து பேர் சேரட்டும் பதினோராவது ஆளா நாம போய் சேர்ந்துக்கலாம்னு நினைக்கறவங்கதான் இங்க நிறைய பேர்... மொத ஆளா நிக்கற தைரியம் நூத்துல ஒரு பத்து பேருக்கு இருந்தா அதிகம்....”

“உனக்கு புரியல... நான் முதல் ஆளா இல்லை கடைசி ஆளாக் கூட போக மாட்டேன் அப்படின்னுதான் சொல்றேன்....”

“எனக்கு புரியுது ராஜா... சின்ன வயசுல இருந்து உங்களை ஓவர் பாதுக்காப்பா வளர்த்த விதம் நீங்க இப்படி இருக்கீங்க...”

“இப்போ சொல்லு என்னோட பயம் தெரிஞ்சபிறகும் உனக்கு என்னைப் பிடிச்சு இருக்கா?”

“எனக்கு நீங்க எப்படி இருந்தாலும் பிடிக்கும் ராஜா.... ஆனா உங்களோட குணத்துக்கும் என்னோட குணத்துக்கும் மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கு...”

“புரியலை...”

“ஹ்ம்ம் நீங்க எப்படி பக்கத்து ஊருல சண்டை நடந்தா இங்க கதவை சாத்துவீங்களோ, அது மாதிரி நான் பக்கத்து ஊருல சண்டை நடந்தா இங்க இருந்து பறந்து போயாவது அடிச்சுட்டு வருவேன்.... more or less உங்கப்பா மாதிரிதான் நான்.... அநியாயம் எங்க நடந்தாலும் அதுக்கு எதிரா நிற்பேன்.... சாரங்கனும் அதே மாதிரிதான்...”, பாரதி சொல்ல ராஜாவின் முகம் வாடியது.

“என்னாச்சு ராஜா... ஏன் டல்லா ஆகிட்டீங்க....”

“இல்லை பாரதி.... உனக்கும் எனக்கும் சரியா வருமா.... உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சது எதுனால தெரியுமா, உன்னோட பேச்சு.... ரொம்ப கலகலப்பா இருக்க அப்படியே எனக்கு நேர்மாறான குணம்... நீ எங்க வீட்டுக்கு வந்துட்டு கிளம்பறவரை எங்கம்மா முகத்துல சந்தோஷத்தை தவிர வேற எதுவுமே இல்லை... ஏன் சாதாரணமா வீட்டுக்கு யாராவது வந்தா வாங்கன்னு சொல்லிட்டு உள்ள போய்டற என்னையே உன் பக்கம் இழுத்துட்ட... அதே மாதிரி அன்னைக்கு நீ அம்மாக்காக அந்த பசங்களோட சண்டை போட்டதை அம்மா சொன்னாங்க.... இத்தனை போல்டா இருக்கற உன்னை என்னோட பயத்தால வீட்டுக்குள்ள உக்காற வச்சுடுவேனோ அப்படின்னு பயமா இருக்கு...”

“புரியுது... இப்போ என்ன பண்ணலாம்ன்னு சொல்றீங்க...”

“நாளைக்கு என்னோட இந்தப் பிரச்சனைனால என்னை விட்டு போயிடுவியா...”

“ஹலோ இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லைன்னு சொல்றேன்... மறுபடி மறுபடி அதையே சொல்றீங்க....”

“அப்போ ரோஜாப்பூவை பறிச்சுடலாம்ன்னு சொல்றியா.... இருந்தாலும் நான் professor, முட்டி போட்டா நல்லாவா இருக்கும்... நாளைக்கு வரலாறு தப்பா பேசாது...”, ராஜா சிரித்தபடியே கேட்க பாரதி அவனை முறைத்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.