(Reading time: 36 - 72 minutes)

சாரதா, சஷியுடன் மனம் விட்டு பேச எண்ணி கோவிலுக்கு அழைத்துச் சென்று அவளிடம் பேச வாய் திறக்கையில், அவள் கேட்ட கேள்வியில் பெரிதும் கவலையுற்றார்… “நான் உங்களுக்கு நல்ல மருமகளா இல்லையா அத்தை?...” என அவள் கேட்டதும், உன்னைப் போன்ற மருமகள் கிடைக்க நான் கொடுத்து தான் வைத்திருக்க வேண்டும் என சொல்ல, அவளோ பதிலுக்கு கஷ்டப்பட்டு வரவழைத்துக்கொண்ட புன்னகையுடன் அவரைப் பார்த்தாள்… இனிமேலும் அவளிடம் மறைப்பது தவறு என்றெண்ணியவர், நடந்த உண்மைகளை அவளிடத்தில் கூறினார் அச்சு பிசராமல்…

பரிக்ஷித்-ரித்திகா இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்ததாகவும், அந்த காதலுக்கு தான் சம்மதம் என பச்சைக்கொடி காட்டியதாகவும், ரித்திகாவின் அப்பாவை சந்தித்து அவரின் சம்மதம் பெற ரிஷி சென்ற போது, அவர் சொன்ன வார்த்தைகளால் மனமுடைந்து ரிஷி அந்த பெண்ணை விட்டு விலகியதாக சொல்ல, சஷிதாவிற்குள் ஒரு பேரதிர்ச்சியே வந்திருந்தது… தன்னை விட்டு விலகுவதற்கு ஏதேதோ காரணங்கள் இருக்குமோ என்று யோசித்தவளுக்கு, இப்படி ஒரு காரணம் இருந்திருக்கிறது என கனவிலும் எண்ணிப் பார்த்திடவில்லை அவள்… அதிர்ச்சியை வெளிக்காட்டாமல் ரித்திகாவின் அப்பா ரிஷியிடம் பேசியவற்றை அவள் கேட்க அவரும் மறைக்காமல் சொல்லலானார்…

“உங்களை விட நல்ல மாப்பிள்ளை நான் தேடினாலும் கிடைக்காது தான்… ஆனா, நீங்க என் ஜாதி இல்லையே… எனக்கு இருக்குறதோ ஒரே பொண்ணு… என் ஜாதியில் என் பொண்ணை கட்டிக்கொடுத்தா நாளைக்கு எனக்குப் பின்னாடி என் பொண்ணை என் சொந்த பந்தங்க பார்த்துப்பாங்க அவளுக்கு துணையா இருந்து… ஆனா நான் உங்களுக்கு கட்டிக்கொடுத்தா என் பொண்ணுக்கு நீங்க மட்டும் தான் சொந்தமா இருப்பீங்க… என் சொந்த பந்தங்கள் கிட்ட இருந்து அவ விலகிடுவா… அதனால நீங்க வேற இடம் பார்த்துக்கோங்க…” என அவர் சொல்லியதும், அவருக்கு எவ்வளவோ எடுத்து சொல்லிப் பார்த்தான் அவன்… தன் தாயையும் வர வைத்து பேசினான்… ஆனால் அவர் தனது முடிவில் பிடிவாதமாக இருந்தார்…

அவன் அந்த பிடிவாதத்தை தளர்த்த முயற்சித்த போது, “இது தான் என் முடிவு… இல்ல நான் ஆசப்பட்டவளைத்தான் கைப்பிடிப்பேன்னு நீங்க சொன்னா அது உங்க விருப்பம்… என் பொண்ணும் வீட்டை விட்டு விட்டு உங்களோட வர ரெடியாதான் இருக்குறா…. ஆனா உங்களால தான் அவ இன்னும் என் வீட்டுல என் மகளா இருக்குறா அப்படிங்கிற உண்மையும் எனக்கு தெரியும்… இவ்வளவு தெரிஞ்சும் ஏன் இப்படி இருக்குறீங்கன்னு நீங்க என்னைப் பார்த்து கேட்கலாம்… எனக்கு என் பொண்ணோட எதிர்காலமும், என் ஜாதியும் தான் முக்கியம்… இப்பவே கூட என் பொண்ணை வர சொல்லி கல்யாணம் பண்ணிக்கோங்க… ஆனா அதைப் பார்க்க சத்தியமா நானும் என் பொண்டாட்டியும் இருக்கமாட்டோம்… எங்க இரண்டு பேர் பிணத்தை தாண்டி நீங்க அவளை உங்க மனைவியாக்கிக்கோங்க… நான் உங்களை மிரட்டுறதா நீங்க நினைக்கலாம்… ஆனா இது தன்னோட மகளை கண்டிக்க முடியாத ஒரு அப்பாவோட கையாளாகாதத்தனம், சேர்ந்து வாழணும்னு ஆசப்படுற உங்களை எதிர்க்க முடியாம செத்துபோயிடுவோம்னு மிரட்டுற கோழைத்தனம்…” என்று சொல்லிமுடிக்கையில் அவரது கண்கள் குளமாகி இருந்தன…

அவன் அவரை சமாதானப்படுத்த எண்ணி நடுங்கும் அவரின் கைகளைப் பிடித்தபோது, “எங்களை விட்டுடுங்க தம்பி… உங்களுக்குப் புண்ணியமா போகும்… என் பொண்ணை மறந்திடுங்க… அவளை விட்டு விலகிடுங்க… உங்க காலில் வேணாலும்….” என சொல்லிக்கொண்டே அவர் அடுத்த காரியத்தை செய்ய போக, “அய்யோ… என்ன காரியம் செய்யுறீங்க?...” என்றான் அவன் அவரைத் தடுத்து அதிர்ச்சியுடன்… “பெத்த புள்ளையா நினைச்சிக் கேட்குறேன்… என் பொண்ணை விட்டுடுப்பா…” என அவர் கதற, அவரின் கண்ணீர்த்துளி அவன் கைகளில் பட்டு தெறிக்க, அவன் மனதில் அவளின் முகம் வந்து போனது… கூடவே வலியும் சேர்ந்து நெஞ்சை ஆக்கிரமித்தது… தன்னை முடிந்த மட்டும் தேற்றிக்கொண்டு தன்னால் அவளின் திருமணம் தடைபடாது என்ற வார்த்தையை சொல்லிவிட்டு அவளைப் பார்க்கச் சென்றான் உயிரே இல்லாமல்…

“உன் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிக்க… பெத்தவங்க நமக்கு என்னைக்கும் நல்லது தான் நினைப்பாங்க…” என அவளிடம் இயல்பாக சொல்ல அவன் படாத பாடுபட்டான்… “என்னாச்சு உனக்கு?... ஏன் இப்படி பேசுற?... அப்பா எதாவது சொன்னாரா?... அவர் சொன்னதெல்லாம் நீ காதுல வாங்காத… நான் நாளைக்கே வீட்டை விட்டு வெளியே வரேன்… நாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம்…” என அவள் உறுதியாய் சொல்ல, அவன் அதிர்ந்தான்…

“யாருக்கும் தெரியாம ஓடிப்போய் கல்யாணம் பண்ணிறதுக்கா இத்தனை வருஷமா காத்திருந்தோம்???…” என்ற அவனின் கோபமான கேள்விக்கு, “அந்த காத்திருப்புக்குத்தான் இப்போ பலன் இல்லையே… பின்ன வேற என்ன செய்ய சொல்லுற?... என்னை கொன்னுடுவேன்னு சொன்னாங்களா?... சொல்லு… அத உண்மைன்னு நம்பி அவங்க பண்ணுற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் பயந்து பின்வாங்க சொல்லுறீயா?...” என்றாள் அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.