(Reading time: 36 - 72 minutes)

றுநாள் அவளிடம் சொல்லாமலே அலுவலகத்தினை அடைந்தவன், ஏனோ மனம் ஒருநிலையில் இல்லாமல் போக, நேரே வீட்டிற்கு வந்தான்… வீட்டினுள் நுழைந்ததிலிருந்தே அவளைத் தானாகவே அவன் விழிகள் தேட, அவனுக்கே அவன் சமாதானம் செய்து கொண்டான் நேற்று அவளை கஷ்டப்படுத்தி விட்டோம் வார்த்தைகளால் அதனால் தான் நேற்றிலிருந்து தான் சரியில்லை என… கூடவே அவளிடம் மன்னிப்பு கேட்பதற்காகத்தான் தனது விழிகள் அவளைத் தேடுகிறது எனவும்… அப்போது டேபிளின் மேல் இருந்த காகிதத்தை அவன் கவனிக்க, அதை எடுத்துப் பார்த்தான்… அதில்,

“என் ரக்ஷித்திற்கு,

என் ரக்ஷித் என்று சொல்லவா வேண்டாமா என கூட தெரியவில்லை எனக்கு… இந்த நொடி கடவுள் என் முன் வந்து வரம் ஏதும் வேண்டுமா எனக் கேட்டால், ஆம், என் ரக்ஷித்தின் மனதில் ஒரு நொடியாவது நான் வாழ்ந்து மடிந்திட வேண்டும் என கேட்பேன்… காதல் என்ற ஒன்றையே உங்களை சந்தித்தப் பின் தான் நான் உணர்ந்தேன்… அதிலிருந்து இப்பொழுது வரை காதலில் என்னை இழந்து கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு பொழுதும்… என் நெஞ்சில் தோன்றிய முதல் காதலை நானே இன்று உயிருடன் கொளுத்த போகிறேன் உங்களை விட்டு பிரிந்து… என்னுடன் இருக்கும் நேரங்கள் உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரவில்லை என்னும்போது, இனியும் உங்களை வதைக்கும் காரியத்தை நான் செய்ய என் மனம் இடம் தரவில்லை… ஆதலால் போகிறேன் உங்களை விட்டு, உடல் அளவில் மட்டுமே… என் மூச்சுக்காற்றும், என் சுவாசக்சூடும், என் உயிரும், என் இதயமும் என்றும் உங்களை சுற்றியே வரும் என்றென்றும்…

இப்படிக்கு,

சஷிதாம்ருதா பரிக்ஷித்…

(நான் உங்களுடன் ஒன்றாக வாழத்தான் விதி இல்லை… ஆனல் இந்த பெயரளவிலாவது சேர்ந்திருக்க விதி இருந்ததே….)

கடிதத்தைப் படித்தவனுக்கு சில நேரம் ஆகியது நடந்ததை நம்ப… அவனின் கைகள் வலுவிழக்க, காற்றில் சட்டென அவன் முகத்தில் மோதியது அவள் எழுதிய கடிதம்… அவளின் மூச்சுக்காற்று அவன் நாசி வழிய அவன் இருதயம் இருக்கும் திசையில் சென்று உலவியது அவனுக்கும் தெரியாமல்… வேகமாக காரை எடுத்துக்கொண்டு அவள் வழக்கமாக சாரதாவுடன் செல்லும் கோவில், கடைவீதி என அலைந்தவன், பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையத்தை கூட விட்டுவைக்கவில்லை… மொத்தமாக சோர்ந்து போனவன் ரயில் நிலையத்திலிருந்து வெளிவந்த போது “ரிஷி…” என்ற குரலில் திரும்பியவனுக்கு முகமெங்கும் வலிகள்…

ப்படி இருக்குற ரிஷி?...” என ரித்திகா சிரித்த முகத்துடன் கேட்க, “ஹ்ம்ம்…” என்றபடி நகரப்போனவனை தடுத்து, “என்னை மன்னிச்சிடு ரிஷி… உன்னை நான் தப்பா புரிஞ்சிகிட்டேன்… என் அப்பா வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நீ எடுத்த சில முடிவுக்கு இப்போ வர நீ தண்டனை அனுபவிச்சிட்டிருக்குற… போதும் ரிஷி… இனியாவது உனக்கான வாழ்க்கையை வாழு… நான் உன்னை காதலிச்சேனே தவிர, புரிஞ்சிக்கலை… ஆனா சஷிதா உன்னை புரிஞ்சிகிட்ட அப்புறம் தான் காதலிக்கவே செஞ்சிருக்கா… அவளோட காதல் ஆத்மார்த்தமானது… உன் காதல் தேனை மட்டுமே சுத்தி வர்ற பட்டாம்பூச்சி அவ…” என அவள் சொன்னதும், அவன் ஆச்சர்யமாய், “உனக்கெப்படி நடந்தது தெரியும்?... அது மட்டுமில்லாம என் மனைவியை நீ?...” என அவன் இழுக்க

ரித்திகா சஷிதாவை சந்தித்து அவள் பேசிய அனைத்தையும் முழுமையாக சொல்லிவிட்டு, “உன்னுடனான என் காதல் முடிஞ்சதும், என் வாழ்க்கையே போச்சுன்னு நான் நினைச்சப்ப, என்னை புரிஞ்சிகிட்ட கணவரோட காதலில் நான் உன்னை மறந்தேன்… ஆனா நீ என்னை காயப்படுத்திட்டன்னு மட்டும் மனசுல ஒரு ஓரமா ஆறாமலே இருந்துச்சு நீ பேசின வார்த்தை… ஆனா சஷி சொன்னபிறகு தான் புரிஞ்சது, அது உன்னைப் புரிஞ்சிக்காம பேசி கஷ்டப்படுத்தினதுக்கு கிடைச்ச வலின்னு… எப்போ தப்பெல்லாம் உன் மேல இல்லன்னு தெரிஞ்சதோ அப்பவே என் மனசு லேசாயிடுச்சு… இப்போ என் மனசு முழுக்க, என் கணவரும், என் குழந்தையும் தான்… அதும், என் கணவரோட முழுமையான காதலில் சத்தியமா நான் ரொம்ப சந்தோஷமா இருக்குறேன்…” என்றதும், அவனது முகத்தில் அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து சற்றே புன்னகை வந்தது, அவள் சந்தோஷமாக தான் இருக்கிறாள் என…

அவனது முகத்தில் பல வருடத்திற்கு முன் பார்த்த சிறு புன்னகையை கண்டவள், “எல்லாருக்கும் காதல் வரும்… அந்த முதல் காதலே கைகூடணும்னு ஆசையும் இருக்கும்… முதல் காதல் எல்லாருக்கும் கைகூடுறது இல்லை… அப்படி ஒரு சந்தர்ப்பத்துல அது தோல்வியில முடிஞ்சா, அந்த முதல் காதலிலேயே வாழ்க்கையும் முடிஞ்சிடுறது கிடையாது… கடவுள் காரணம் இல்லாம என் பேர் பின்னாடி என் கணவர் பேரையும், சஷிதா பேர் பின்னாடி உன் பேரையும் எழுதலைன்னு நான் புரிஞ்சிகிட்டு ரொம்ப நாளாச்சு… அதை நீயும் புரிஞ்சிக்குற நாள் தூரமில்லைன்னு நம்புறேன்… சஷிதா மாதிரி ஒரு மனைவி கிடைக்க நீ நிஜமா கொடுத்து வைச்சிருக்கணும் ரிஷி… இப்படி ஒரு பொண்ணைப் பார்க்குறது உண்மையிலேயே ரொம்ப ரேர்… அடுத்த தடவை உன்னை நான் பார்க்கும்போது சந்தோஷமான உங்க இரண்டு பேரையும் சேர்ந்து தான் நான் பார்க்கணும்… தனித்தனியா இல்ல… சரியா?...” என அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு செல்ல, ரிஷி சஷிதாவைத் தேடும் தனது பயணத்தை மீண்டும் தொடர்ந்தான்…

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.