(Reading time: 31 - 61 minutes)

மிருவின் அழுக்குரல் ராகினியை ஏதோ செய்தது! “போதுமா? இதுக்குத்தான் கல்யாணம் வேண்டாம்ன்னு சொன்னேன்!” என்று பார்வையாலேயே அவள் உரைக்க, மிருவை கை நீட்டி அழைத்தான் ஷ்யாம். அவனை மருண்ட விழிகளுடன் பார்த்தப்படி அன்னையை இடையோடு கட்டிக் கொண்டான் மிருதன்.

“அம்மா” என்று அவன் தவிப்பாய் கூறிட, “ அப்பாவும் உனக்கு ப்ரண்ட் தான் மிரு !” என்று புன்னகைத்தான் ஷ்யாம்.

“அப்பாவா?”என்று மிருதன் விழிக்கவும், ஒரு கணம் சிந்தித்த ஷ்யாம்,

“சரி அப்பா வேணாம்.. டாடி ஓகேயா?”என்றான். இரண்டு வார்த்தைகளுக்கும் அர்த்தம் ஒன்றுதான் என்று இன்னமும் மிருதனுக்கு புரியவில்லை என்பதினால்,

“ஓகே டாடி!” என்றான் அவன். அதன்பின் ஷ்யாம் சொன்னதை கேட்டு, அவனது கையைப் பிடித்துக் கொண்டான் மிருதன்.

மிரு முன்னால் நடக்க, அவன் கையைப் பற்றி ஷ்யாமும், ஷ்யாமின் கையைப் பற்றி ராகினியும் அக்னியை வலம் வந்தனர். அடுத்து மீதமிருந்த முக்கிய சடங்குகளைச் செய்த ஷ்யாம், பெரியவர்களிடம் மரியாதை நிமித்தமாய் சொல்லிவிட்டு, ராகினியையும்  மிருதனையும் அழைத்துக் கொண்டு தன் காரை நோக்கி நடந்தான்.

“இதுதான் என் கார் ராகினி. இனிமே இது நம்ம கார்” என்று அவன் சிரிக்கவும், உணர்ச்சி துடைத்த முகத்துடன் இருந்தாள் ராகினி. “சரி, கிளம்பலாம்” என்று ஷ்யாம் கூறிட காரின் முன் கதவை திறந்தவளை தடுத்தான் அவன்.

“ பையனை கையில் வெச்சுகிட்டு எப்படி நீ முன்னாடி உட்காருவ? உனக்கு சௌகரியமா இருக்காது! அதுக்காக நானும் பின்சீட்டில் உட்கார்ந்து காரோட்ட முடியாதும்மா! சோ நீ பின்னாடி ஜம்முனு உட்கார்ந்துக்கோ!” என்று இயல்பாய் கூறினான் அவன். சரியென்று கூட கூறாமல் பின் சீட்டில் அமர்ந்தாள் ராகினி.

“மிருவுக்கு தூக்கம் வர்ற மாதிரி இருந்துச்சே ராகினி. அவனுக்கு சாப்பாடு கொடுத்தாங்களா? இல்லன்னா பக்கத்துல ஏதும் ஹோட்டலுக்கு  போலாமா?”என்று  வினவினான் ஷ்யாம்.

“வேண்டாம்..தேங்க்ஸ்.. அவனுக்கு தம்பி சாப்பாடு ஊட்டிவிட்டு பாலும் கொடுத்துட்டான்!” இதுதான் ராகினி அவனிடம் பேசிய முதல் வார்த்தை. அதை கவனித்தவன், “ஓஹோ மகனைப் பத்தி பேசினால் மட்டும்தான் நீ பதில் பேசுவியா?”என்று மனதினுள் கேட்டுக் கொண்டான். பின் அவளைப் பார்த்து,

“ என் வீட்டில் உள்ளவங்களுக்கு உன்னை ஏத்துக்க டைம் ஆகும். அதுக்காக அவங்க முன்னாடி உன்னை விட்டு கொடுத்தும் என்னால இருக்க முடியாது! அதனாலத்தான் உன்னை இப்படி என் தனி வீட்டுக்கு கூட்டிட்டு போறேன். தப்பாக எடுத்துக்காதே ராகினி. அது மட்டுமில்ல. நமக்கு நிறைய நேரமும் தனிமையும் அவசியம்னு எனக்கு புரியுது ! அதனாலத்தான் இந்த தனி வீடு ப்ளான். நீ நம்ம வீட்டில் உன் இஷ்டத்துக்கு இருக்கலாம்! யாரும் உன்னை கேள்வி கேட்க முடியாது.. நான் கூட கேட்க மாட்டேன்!” என்று சிரித்தான்.

அவன் சிரிப்பை பார்க்கும்போதெல்லாம் அவளுக்குள் ஏனோ வலித்தது. அவளது வலியை குறைத்தது மிருதனின் குரல்.

“அம்மா”

“என்ன கண்ணா?”

“பாட்டு .. அந்த பாட்டு பாடும்மா!”. அண்மையில், மிருவுக்கு இதுவொரு பழக்கமாகிவிட்டது. ராகினியை அந்த “கண்ணம்மா” பாடலை பாட சொல்லி கேட்டுத்தான் உறங்குவான் அவன். மற்ற நாட்கள் என்றால், இருக்கும் இடத்தைப் பற்றிக் கூட கவலைப்படாமல் மகனது ஆசையை நிறைவேற்றி வைப்பாள் ராகினி. ஆனால் இன்றோ, அவளுடன் அந்த தியாக செம்மலும் இருக்கிறானே! ஆதலால்,

“இன்னைக்கு வேணாமே கண்ணா” என்றாள் மென்குரலில். பிடிவாதக்காரியின் மகனுக்கு பிடிவாதம் பிடிக்க சொல்லியா தர வேண்டும்? கடைசியாய் மிருதனின் கெஞ்சலே அங்கு வெற்றிபெற ஷ்யாமை தயக்கமாய் பார்த்தாள் ராகினி.

சாலையில் கவனம் செலுத்திக் கொண்டிருப்பது போல அவளது பாடலுக்காக காத்திருந்தான் அவன். தங்களை அவன் கவனிக்கவில்லை என்ற பெருமூச்சுடன் பாடத் தொடங்கினாள் ராகினி.

“கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை

என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை

உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே!

துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே

ஒளி வீசும் மணி தீபம் அது யாரோ நீ!”  

தன் மெல்லிய குரலில் ராகினி பாடிய பாடல் ஷ்யாமின் மனதையும் மயிலிறகாய் வருடியது. “நல்லா பாடுற!” என்று சொல்லி விடலாம் தான். ஆனால் அதற்குப்பின் வாழ்க்கையில் இனி பாடுவதே இல்லையென இவள் முடிவெடுத்து விடுவாளே என்றஞ்சியவன், வாயை மூடிக் கொண்டான்.

ஷ்யாமின் வீடு !

இடைவரை குனிந்து, சலூட் வைத்து “ வாங்க மேடம்!” என்று ஷ்யாம் அவளை வரவேற்றான். அத்தனை நேரம் இறுக்கம் படர்ந்திருந்த அவளின் முகத்தில் புன்னகை அரும்பும் தருவாயில், தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டாள் ராகினி.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.