(Reading time: 31 - 61 minutes)

நீ இங்க வந்தது, இந்த தியாக செம்மலின் ஜோக்குக்கு சிரிக்கிறதுக்காக இல்லை!” என்று உள்மனம் அதட்டிட, சின்ன தலையசைப்புடன் வீட்டினுள் நுழைந்தாள் அவள். ஆரத்தி எடுக்கவில்லை, பூஜை அறையில் விளக்கும் ஏற்றவில்லை.

“ என் ராகினி மனசுல காதல் எனும் சுடர் எரியும் வரை காத்திருங்க கடவுளே! இதற்காகவே மேடம் மனசுல மேஜிக் பண்ண வேண்டியது உங்க கடமை!” என்று மனசீகமாய் கடவுளுக்கே வேலை கொடுத்தான் ஷ்யாம்.

வர்களது படுக்கை அறையில் மிருதனை படுக்க வைத்துவிட்டு நிமிர்ந்தவளிடம்,

“ ஃபீல் ப்ரீ ராகினி.. உன்னை இந்த வீட்டில் யாரும் கடிச்சு தின்னுற மாட்டாங்க.. நீ பசியில இருப்ப. பாலும் ப்ரெட்டும் இருக்கு. சாப்பிட்டு படுத்துக்கோ.. சோபாவுல படுக்குற அளவு நான் தியாகி இல்லம்மா.. இங்கயே படுத்துக்குறேன்.. உனக்கு எந்த டிஸ்டர்பன்ஸ் உம் வராது.. குறட்டை கூட விட மாட்டேன்.. நிம்மதியா தூங்கு.. குட் நைட்” என்றபடி தனது முத்திரை சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு உறங்க சென்றுவிட்டான் ஷ்யாம்.

அவன் பேசிய வசனம் சிறிதுதான் என்றாலும், அவனது குரல், தொனி, உற்சாகம் இது அனைத்தையும் கேட்டவளுக்கு என்னவோ மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது. மிருதனின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு ஷ்யாமுக்கு முதுகு காட்டியப்படி படுத்துக் கொண்டாள் ராகினி.

ராகினியின் எண்ணவோட்டங்கள், ஒலிம்பிக்கில் ஓடுவதாக நினைத்துக் கொண்டு வேகமாய் ஓடின. ஷ்யாமைப் பற்றி நினைத்து பார்த்தாள் அவள்.

நல்லவன்தான்  ஷ்யாம். அவன் பேச்சிலும் பார்வையிலும் கண்ணியம் இருக்கிறது. மிருதனின் மீது கொஞ்சம் அக்கறையும் இருப்பது போலத்தான் தெரிகிறது.  ஆனால் அவன் புன்னகை!!

அந்த புன்னகைத்தான் அவளுக்கு எரிச்சலாய் தோன்றியது. இந்த புன்னகை அலட்சியத்தின் சாயலோ? சட்டென சங்கீதனைப் பற்றி நினைக்க ஆரம்பித்தாள் ராகினி.

சங்கீதன் இளம் வயதிலேயே இராணுவத்தில் சேர்ந்துவிட்டான். பெற்றோரால் நிச்சயக்கப்பட்ட வாழ்க்கைத் துணை என்றாலும் கூட, அவன்தான் அவளுக்கு சகலமும்!

சங்கீதனுடன் வாழ்ந்த ஈராண்டு வாழ்க்கையை அவளால் மறக்கவே முடியாது! சங்கீதன் இயல்பிலேயே கொஞ்சம் இறுக்கமான சுபாவம் கொண்டவன். கறார் பேர்வழி. எதிலும் நேர்த்தியை எதிர்ப்பார்த்தல், நேர்பட பேசுதல், நேரம் தவறாமை இப்படி அவனிடம் இருந்த ஒவ்வொரு குணமும் ராகினியை ஈர்த்தது. ஈர்த்தது என்பதை விட பாதித்தது என்றே கூறலாம்! ராகினி இயல்பில், சங்கீதனைப் போல கறார் பேர்வழியல்ல. அதே நேரம் சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் சுபாவம் அவளுக்கு அதிகமாகவே இருந்தது.

இதனால் வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு வாழும் பழக்கம் அவளுக்கு பிடிக்காமல் போனது. சங்கீதனின் குணங்கள் அவளையும் தொற்றிக் கொண்டது. மேலும், “இராணுவ வீரனின்” வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் என்று அவளே தீர்மானித்துக் கொண்டாள். அதனாலேயே, அளவுக்கு அதிகமாக சிரிப்பவர்கள், கலகலப்பானவர்கள், வாழ்க்கையை அதன் போக்கில் ரசித்து வாழ்பவர்கள், அவளது கண்களுக்கு சோம்பேறிகளாகவும் அலட்சியவாதிகளாகவும் தெரிந்தனர்.

ஷ்யாமும் அவளது கண்களுக்கு அப்படித்தான் தெரிந்தான். ஆம்! அவன் அலட்சியவாதிதான்! இல்லையென்றால் இப்படி தனக்கு வாழ்க்கை கொடுக்கிறேன் பேர்வழி என்று தன் வாழ்க்கையை பாழாக்கி கொள்வானா? திருமண வாழ்க்கை என்ன இந்த ஒரு இரவில் முடிந்து போகும் பந்தமா? முட்டாள்தனம்! என்று ராகினியின் ஒரு மனம் சாடிட மறு மனமோ, அவன் மிருதனுக்கு நல்ல தகப்பனாக இருப்பான் என்று கூறியது!

சட்டென எழுந்து அமர்ந்தே விட்டாள் ராகினி. என் மகனுக்கு இவன் தந்தையா? எப்படி என்னால் இவ்வாறு யோசிக்க முடிந்தது? அந்த தாய்மனம் வெகுண்டெழுந்தது! மிருவை தன் பக்கமாய் இழுத்து போட்டுக் கொண்டாள்.

“மிரு என் மகன்.. என் மகன்..!” என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டே அவனை அணைத்தப்படி உறங்கிபோனாள் அவள். ராகினியை எப்படி சமாளிக்க போகிறான் ஷ்யாம்?

றுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் எழுந்து விட்டிருந்தாள் ராகினி. அதிகாலையிலேயே எழுந்து விடுவது அவளது வழக்கம். தன் அருகில் படுத்திருந்த மிருதனையும், அவன் அருகில் உறங்கி கொண்டிருந்த ஷ்யாமையும் பார்த்தாள் அவள். இருவருமே ஒரே போல வலது கையை தலைக்கடியில் வைத்துக் கொண்டு இடது காலை மடக்கியபடி உறங்கி கொண்டிருந்தனர். வியந்து தான் போனாள் ராகினி! எப்படி இருவரும் ஒரே போல உறங்குகிறார்கள் ? என்று ஆச்சர்யப்பட்டபடி எழுந்து கொண்டவள் அருகில் இருந்த அலமாரியைத் திறந்தாள்.

அவளுக்காகவும்,மிருதனுக்காகவும் நிறைய ஆடைகளை வாங்கி குவித்து வைத்திருந்தான் ஷ்யாம். “இவனை என்னவென்று சொல்வது?” என்று ஒரு நொடி சலித்துக் கொண்டவள், இனி இதுதான் தன் வாழ்க்கை என்று உணர்ந்தவளாய் புடவையொன்றை எடுத்துக் கொண்டு தயாராகினாள்.

காலை ஏழரை மணியளவில் ஆவி பறக்கும் காஃபியை ஷ்யாமின் அருகில் வைத்தாள் ராகினி. அவனை எழுப்பலாமா? என்று யோசித்தவள் பின்பு தோளை உலுக்கி கொண்டு சமையல் வேலையை பார்க்க போனாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.