(Reading time: 60 - 120 minutes)

 

பிறந்து ஒரு வாரம் கூட ஆகாத குழந்தைக்கு இப்படி பகட்டா சட்டை போட்டா மத்த குழந்தைகள் ஏக்கத்தோட பார்க்கும் அதுனால வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க” என்றாள் முகத்தில் கவலை படிய.

 

“உண்மை தானே”, அன்பு இல்லம் அருணகிரி சொன்ன கருத்தை ஆமோதிப்பது போல.

 

“இருக்கலாம். அதுக்காக ஆசையா வாங்கிட்டு போன எனக்கு அதை ஹர்ஷினிக்கு  போட்டு அழகு பாக்க முடியலைன்னு  ஏக்கமா இருக்கு.” என்றாள் மது வருத்தத்துடன்.

 

“குழந்தையே கோடி அழகு தானே மது. பட்டுக்கே பட்டா? பிறந்த குழந்தைக்கு பட்டெல்லாம் போட்டா இந்த மே மாச வெயிலுக்கு தாங்குமா? கொஞ்ச நாள் பொறு. தீபாவளிக்கு இல்லத்தில எல்லா பெண் குழந்தைகளுக்கும் பட்டு வாங்கி கொடுத்திடுவோம். அதுக்குள்ள ஹர்ஷினியும் கொஞ்சம் வளந்திடுவா” என்றாள் சந்தியா.

 

“நல்ல ஐடியா தான் சந்தியா. காதிட்ட நம்ம கம்பெனி மூலமாவே  ஸ்பானசர் பண்ண டிஸ்கஸ் பண்ணிட்டு அதுக்கு ஏற்பாடு செய்றேன்” என்றாள் மது.

 

“எதுக்கு கார்த்திக்கிட்ட கேக்கணும்? நீயே முடிவெடுக்க வேண்டியது தான?” என கேட்டாள் சந்தியா.

 

“ம்….அதுவும் சரி தான். அவன் லாங் டெர்ம் போறானே..ஆறு மாசம் இந்த பக்கம் வர மாட்டான். நான் தான் எல்லா முடிவும் எடுக்கணும்ன்னு விடியக்காலையில்  எனக்கு ஒரே லெக்சர் “ என்று அலுத்துக் கொண்டாள் மது.

 

அதைக் கேட்டவுடன் சந்தியாவிற்கு தூக்கி வாரிப்போட்டது. “ஆறு மாசமா? அஞ்சு நாளுன்னு தானே அன்னைக்கு சொன்னாரு” அதிர்ச்சியாய் குரலை உயர்த்தி கேட்க முயன்றவளின்  தொண்டை கரகரக்க, அடிவயிற்றில் இருந்து இருமினாள். கண்கள் லேசாக கரித்தது. அவளுக்கு வேகமாக தண்ணீரைக் கொடுத்தாள் மது. சந்தியா சிரமப்படுவதை பார்த்த சௌபர்ணிகா அவளிடம், “சந்தியா நீ ரெஸ்ட் எடு. மது அவளுக்கு சரியான பிறகு நிதானமா பேசிக்கோங்க. இப்போ நாம கிளம்பலாம்” என கிளம்ப, அதற்கு மேல் அந்த பேச்சை தொடர முடியாமல்  மனதிற்குள் சோர்ந்தாள்.

 

மாலையில் சந்தியா சற்று தேறியிருந்தாள். அனைவருக்கும் தேநீர், காபி, மில்க் ஷேக் என அவரவர் கேட்டதை சிவாவே முன் வந்து வாங்கி கொடுத்தான்.

 

தவிப்புடன் காத்திருந்த கார்த்திக்கிற்கு சிவாவின் மின்னஞ்சல் வரப்பிரசாதமாக இருந்தது. “ஆபரேஷன் சக்ஸஸ்; பாண்டியன் இன் பெட்” என்று அனுப்பியிருந்தான். கூடுதலாக சந்தியா உடல்நிலை தேறி வீட்டிற்கு சென்று விட்டாள் என்ற செய்தியையும் படித்து நிம்மதி அடைந்தான். உடனே சென்னையில் உள்ள தனது மாமாவிற்கு மின்னஞ்சல் செய்தான்.

 

மருத்துவமனையில் இருந்து கிளம்பும் போதே கண்களை சுழட்டிக் கொண்டு வந்தது பாண்டியனுக்கு. மிகவும் கஷ்டப்பட்டு காரை செலுத்தி ஒரு வழியாக வீட்டிற்கு வந்ததும் வராததுமாய் நிச்சயம் என்னவாயிற்று என பேச ஓடி வந்த வடிவை தவிர்த்து படுக்கையில் விழுந்தான்.

 

வீடு திரும்பிய சந்தியாவிற்கு காய்ச்சலும்  திரும்பியது. உறவினர் ஒருவர் போட்டுக் கொடுத்த கஷாயம் அவள் தொண்டையை இதமாக்கியது. கிராமத்திலிருந்து வந்த உறவினர்கள் ஆளும் பேருமாக சேர்ந்து இரவு உணவை சமைத்து, பரிமாறி வீட்டை ஒதுக்கி, தண்டட்டி பாட்டியை கவனிக்க உதவ லக்ஷ்மிக்கும், ஸ்ரீமாக்கும் வேலை சற்று எளிதாக இருந்தது. அனைவரும் இரவு உணவை முடித்து பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் உறவுப் பெண் ஒருத்தி தன்ராஜிடம் “என்ன சித்தப்பூ? அத்தை சொல்லுதாகளேன்னு தேன் வீட்டுல அம்முட்டையும் போட்டுட்டு ஓடியாந்தேன். நாளைக்கு பாப்பாக்கு பெண் பேசுறோமா இல்லையா? அவளுக்கு காச்சல் இன்னும் கொதிக்குது.  அத்தை என்னடான்னா இருந்து பேசி முடிச்சிட்டு போலாம்றாக. நீங்க என்ன சொல்லுதீ(றீ)க? பெண் பேசாட்டி இவுக வாராகளோ இல்லையோ விடிஞ்சதும் நான்  மொத பஸ்சை பிடிச்சு ஊரு போயி சேந்துடுவேன்.” என்றாள்.

 

தன்ராஜ் அதற்கு “கலா.. இவ சீக்கில இருக்கிறப்போ நிச்சயம் பண்ண மனசு வரலை. தலைக் கல்யாணம் வேற. (கடைசி கல்யாணம் என்று சொன்னால் நல்லதில்லை என்று தலைக் கல்யாணம் என்று விளிக்கிறார் தன்ராஜ்) நிதானமாக செய்யலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். எல்லாருக்கும் ஆயிரம் பாடு சோலி இருக்கும். இவ தேறுற வரைக்கும் உங்களை காக்க வைக்க முடியாது.” என்று தெளிவு படுத்தினார் தன்ராஜ்.  அதைக் கேட்டு அதிர்ந்த வடிவிடம் இதை பற்றி ஏற்கனவே பாண்டியனிடம் பேசிவிட்டதாக சமாளித்தார். அண்ணனின் பேச்சில்  சந்தேகம் வந்தது வடிவுக்கு.

 

ரவு உணவிற்கு லக்ஷ்மி கொடுத்த கஞ்சியை குடித்த சந்தியா  மாத்திரையை போட்டு  பெற்றோர் அறையிலே உறங்கிப் போனாள். சந்தியாவிற்கு துணையாக லக்ஷ்மியும் அவளருகில் படுத்தார். திருமணத்தை பற்றி லக்ஷ்மியுடன் பேச எண்ணி அவரை தேடி அங்கு வந்த தன்ராஜ் கதவை உட்புறம் தாழிட்டு அவரை அழைத்தார். கணவரின் ஒரு சத்தத்தில் விழித்த லக்ஷ்மி என்னவென்று கேட்க, தொண்டையை செருமிய படி கட்டிலின் ஓரத்தில் வந்து அமர்ந்து கொண்டு,

 

“லக்ஷ்மி. நீ நேத்து சொன்னது தான் கரக்ட். பிள்ளை வாழ்க்கை. யோசிச்சு தான் முடிவெடுக்கணும். நான் அவசரப்பட்டுடேனோன்னு தோணுது..” என்றார்  குற்ற உணர்ச்சியில் தாழ்ந்த குரலில்… பின், சில நொடி தாமதத்திற்கு பின் “இந்த சம்மந்தமே வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்  லக்ஷ்மி” என்று உறுதியாக சொல்லவும் அதிர்ச்சியான லக்ஷ்மி,

 

“நீங்க ஏன் அப்படி எல்லாம் நினைக்கிறீங்க? சந்தியாக்கு உடம்புக்கு ஏதோ செய்திருக்க போய் தான் நேத்து யார்கிட்டயும் பேசல. மத்தபடி அவ உங்க முடிவை எப்போதும் மீற மாட்டா. வடிவுகிட்ட வாக்கு குடுத்து இவ்வளோ தூரம் வந்த பிறகு வேண்டாம்ன்னு சொன்னா உங்களுக்கு தான் தேவையில்லாத தலைகுனிவு. வாக்கு சுத்தம்  இல்லைன்னு உங்களை நம்ம கிராமத்துல எல்லாரும் தப்பா பேசுவாங்க.“ என்றார்.

 

மனைவி சொன்னதை ஏற்காமல் மறுப்பாக தலையாட்டியவர், “லக்ஷ்மி, நேத்து பூமா சொன்னப்போ கூட நான் பெரிசா எடுத்துக்கலை. ஆனா இவ காலையில் கட்டில்ல  சீவன் இல்லாம கிடந்ததை பாத்தப்போ என் குழையே நடுங்கிடுச்சு. ஒரு தும்மல் வந்தாலே உன்னை என்னம்மா நச்சரிப்பா? அவ்வளவு காச்சலையும் தாங்கிகிட்டு பேசாம இருந்திருக்கான்னா என்னால நம்ப முடியல. இதே மாதிரி தான மெடிக்கல் காலேஜ்க்கு போக மாட்டேன்னு யாருகிட்டயும் பேசாம வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்தா? உனக்கு நியாபகம் இருக்கா?“ என கேட்டார் தன்ராஜ்.

 

ணக்கு என்றாலே சந்தியாவிற்கு உயிர். பள்ளி பருவத்திலே விந்தியாவின் கல்லாரி புத்தகத்தில் உள்ள  புள்ளியியல் கணக்குகளை ஆர்வமாக செய்வாள். கணக்கில் அதிகம் நாட்டம் என்றாலும், அவளுக்கு இயல்பாகவே கல்வி கற்கும் திறன் சிறப்பாக இருந்ததால், அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரி கவுன்சலிங்கிற்கு அழைப்பு வந்தது. எந்த அப்பாவுக்கு தான் மகளை டாக்டராக்கி பாக்க ஆசையிருக்காது? தன்ராஜும் ஆசைப்பட்டார். அதனால் சந்தியாவின் புள்ளியியல் படிக்கும் ஆர்வத்திற்கு தடை விதித்தார். கனவு கோட்டைகள் இடிந்து விட்டதென யாரிடமும் பேசாமல் இறுகிப் போனாள், சந்தியா. கிட்ட தட்ட ஒரு வாரம், அவளை அப்படி பார்க்க சகிக்காத தன்ராஜ் பின்னர் மகளை அவளது ஆசைப்படி படிக்க விட்டு விட்டார். தன்ராஜ் சொன்னதும் பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார் லக்ஷ்மி. “ஆமாங்க...பூமாகிட்ட கூட ஒரு வார்த்தை பேசலையே..அப்ப கூட நியாபகம் இருக்கா  பூமா அவளுக்காக உங்ககிட்ட வந்து சண்டை போட்டு அறை வாங்கினாளே?” எனக் கேட்டார் லக்ஷ்மி.

 

அவர் சொன்னதும் சிரித்தார் தன்ராஜ். “இப்பவும் பூமா தான் அவளுக்காக என்கூட சண்டை போட்டு திட்டு வாங்குனா. பாப்பாக்கு பாண்டியன் மேல ஒரு தப்பான எண்ணம் சின்ன வயசுலே பதிஞ்சிருக்கு. அதான் பிள்ளை வெளிய சொல்லாம உள்ளுக்குள்ளே புழுங்கி கஷ்டப்பட்டிருக்கா. அவ நல்லாயிருக்க தான இந்த பாடுபட்டு வளத்து ஆளாக்கியிருக்கு, அவளுக்கு இஷ்டமில்லாத வாழ்க்கையை என் சொல்லுக்காக வற்புறுத்தினா நான் ஒரு நல்ல அப்பனே இல்ல. பின்னாடி என் பொண்ணு கண்ணை கசக்கிட்டு வந்து நிக்கிறதுக்கு இப்போ நான் தலைகுனிந்து நிக்கிறதுல தப்பே இல்ல. இப்போ என்ன மூணாது ஆள்கிட்டயா அசிங்கப் படப் போறேன்? என் தங்கச்சி, அவ மகன்கிட்டையும் தான. நம்ம பாண்டியன் நல்ல பையன் தான. என் சொல்லுக்கு மறு சொல் பேச மாட்டான். விவரம் தெரியாத வயசுல  பூமாக்கு லவ் லட்டர் குடுத்தான்னு   தகப்பன் இல்லாத பையனை ஆத்திரத்தில அத்தனை பேரு முன்னாடியும் அடிச்சிட்டேன். அதுக்காக தான்  வடிவு பெண் கேட்டப்போ அவனை மருமகனாக்கி மரியாதை செய்யணும்ன்னு நினைச்சேன். “ என்று பெருமூச்சு விட்டவர், “ஹும்...எதுவும் நம்ம கைலயா இருக்கு. நாளைக்கு விடிஞ்சதும் பாண்டியன்ட்ட பக்குவமா பேசுறேன். பொண்ணு குடுக்கிறேன்னு அவன் மனசுல ஆசை வளத்துட்டுமேன்னு நினைக்கிறப்போ சங்கடமா இருக்கு. “ என்று வருத்தப்பட்டார்.

 

கணவருக்கு பாக்கவா மகளுக்கு பாக்கவா என்று தெரியாமல் குழம்பிய லக்ஷ்மி “சந்தியாவுக்கு உறுதி பண்ணலைன்னு ஏற்கனவே சொல்லிட்டீங்களே. கொஞ்ச நாள் கழித்து பாண்டியனை நேர்ல பாத்து விவரத்தை எடுத்து சொல்லுங்க” என்றார்  லக்ஷ்மி.

 

“அது வரைக்கும் அந்த பையன் இவளை மனசுல நினச்சு கிட்டு இருந்தா?” என கேட்டார் தன்ராஜ்.

 

“அதுக்கு நாம என்ன செய்ய முடியும்? அவனா ஆசைய வளத்தா அதுக்கு நாம பொறுப்பில்லை.” என்றார்  லக்ஷ்மி வேகமாக.  அதை கேட்டு வெறுமையாக சிரித்த தன்ராஜ். “அது வேண்டாம் லக்ஷ்மி. சரி நீ தூங்கு. நான் பாத்துக்கிறேன்” என்று சொல்லி விட்டு, லுங்கியை சரி செய்தவாறு எழுந்து அவர்கள் கட்டிலை விட்டு சற்று தள்ளி  பாயை விரித்து படுத்தார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.