(Reading time: 60 - 120 minutes)

 

ண்ணனை நோட்டம் பார்த்த வடிவு, தன்ராஜ் உள்ளே சென்றதும் காதை தீட்டி அவர்கள் பேசுவதை அந்த அறைக்கு வெளியே நின்று ஒட்டுக் கேட்டாள். தன்ராஜ் பேசியது அவள் தலையில் இடி விழுந்தது போல இருந்தது. பாண்டியன்  போட்ட  திட்டம் எல்லாம் வீணாகி போய்விடுமே என பயந்து அவர்கள் பேசி முடித்ததும் சத்தம் போடாமல் மெதுவாக பாண்டியன் இருந்த அறைக்கு சென்று  அவனை எழுப்பினாள்.

 

அவனோ லேசாக கண்களை திறந்தவன் “ஆத்தா தூக்கம் வருது” கிறங்கிய குரலில் சொல்லிவிட்டு கண்களை மூடினான். அவள் எவ்வளவு எழுப்பினாலும் அவனிடம் அசையவே இல்லை.

 

“இது என்ன சாப்புடாம அடிச்சு போட்ட மாதிரி தூங்குற ராசா… ஹ்ம்ம்...என் புள்ள ப்ளசர் காரை ஓட்டுற அழகு எந்த எடுபட்ட பயபுள்ளக கண்ணு போட்டு தொலச்சதோ…” என்று எழுந்தவள், அயர்ந்து உறங்கும் தன் மகனை ரசித்த படி,

 

“சீமைத் துரையாட்டம் இருக்கும் என் புள்ளையவா  வேண்டாம்ன்னு  சொல்லுதீ(ரீ)க?  ...பொட்டைச்சிங்களா சேந்து நாடகமாடி எங்க அண்ணனையே மாத்திட்டாளுகளே...ஹூம் ….இனி அண்ணனாவது நொண்ணனாவது. நாளைக்கு மட்டும் ஏதாவது பேசு நாக்கை பிடுங்குற மாதிரி நான்  கேக்கற  கேள்வில நாண்டுக்கிட்டு சாவப் போற…” என்று யாருக்கும் கேக்காத படி முணுமுணுத்துக் கொண்டே படுக்கச் சென்றாள்.

 

மே 20, ஞாயிற்றுக்கிழமை

 

ப்போது விடியும் என காத்துக் கொண்டிருந்த வடிவு, ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து கீழே இறங்கி வந்தாள். அப்போதே தன்ராஜ் நடை பயிற்சிக்கு கிளம்புவதை பார்த்தவள் அவரிடம் வந்து, “அண்ணே, எனக்கு ராத்திரி முழுக்க தூக்கமே வரல. நல்ல விஷயம் பேசலாம்னு நினச்சப்போ என் மருமவ இம்முட்டு சங்கடப்பட்டு போனாளே! “ என ஒரு ஏக்க பெருமூச்சு விட்டவள், “அண்ணே! பேசாம காதும் காதும் வச்ச மாதிரி வெத்தலை பாக்கு தட்டு மட்டும் மாத்திகிட்டு கல்யாண தேதியை உறுதி பண்ணிட்டு ஊருக்கு கிளம்பிடுதோ(றோ)ம். மத்ததெல்லாம் மெல்லமா பாத்துகிடலாம். என்ன சொல்லுதீக?” என மெதுவாக அவரின் எண்ணத்தை அறிய முற்பட்டாள்  வடிவு.

 

அவள் சொன்னவுடன் ஒரு வினாடி யோசித்த தன்ராஜ், தொண்டையை செருமியபடி “எதுன்னாலும் பாண்டியன் முழிக்கவுட்டு  பேசிக்கலாம் வடிவு.” என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டு, அவள் மேலே பேசவதற்கு இடமளிக்காமல் கிளம்பிச் சென்றார்.

 

அப்போது பார்த்து தண்டட்டி பாட்டி என்ற முத்து பேச்சி, “ஏய் தாயி வடிவு... சொம்புல வெந்நி கொண்டாரியாயா?” அருகில் நின்ற வடிவிடம் கெஞ்சலாய் கேட்க, “ஹும்….உன் மருமவளை கூப்பிட வேண்டியது தானே...மவன் வீட்டுக்கு விருந்தாட வந்துட்டு என்னை வேலை ஏவுத(ற)” “ என அழுத்துக் கொண்டு தன் வேலையை பாக்க செல்ல,

 

“ஏ வடிவு உன்னை தேன் கூப்புடுதேன்….” என்று சத்தமாக சொல்லிவிட்டு “நான்  தேன் செவிடுன்னு பாத்தா இவ  என்னை விட செவிடா இருக்கா” என முணுமுணுத்தார் தண்டட்டி பாட்டி. அது வடிவிற்கு கேட்டு விட்டது.

 

“இந்த செவிட்டு சனியன் என்னை செவிடுன்னு சொல்லுதா...“ என மனதிற்குள் அவரை திட்டி கொண்டே,  லக்ஷ்மி இருந்த அறைக்கு சென்று லக்ஷ்மியை அதட்டி அழைத்தாள். அவள் போட்ட அதட்டலில் சந்தியாவும் முழித்து விட, “தவிச்ச வாய்க்கு தண்ணி குடுக்க மாட்டீகளா மதினி...அங்க பெரியாத்தா  காட்டு கத்தல் கத்திகிட்டு கிடக்கா, கிணுங்காம தூங்கிகிட்டு இருக்கீகளே..நல்லா இருக்கு மாமியாரை கவனிக்கிற லட்சணம்” அங்கலாய்ப்புடன் குறை கூற,

 

பதறி பதிலளிக்க வந்த தாயின் கையை பிடித்து அமர்த்திய சந்தியா, “எங்க பாட்டிக்கு தண்ணி கூட எடுத்துக் குடுக்க மாட்டீங்களா? இந்த வள்ளல்ல தான் எங்க பாட்டியை ஊர்ல பாத்துகிடுவீங்களோ?” என பதிலுக்கு விரட்டினாள். லக்ஷ்மியோ,

 

“பெரியவங்ககிட்ட மரியாதையா பேசு சந்து” அவளை அதட்டிய படியே கட்டிலை விட்டு எழுந்து மாமியாருக்கு சேவகம் செய்ய கிளம்பினார். “தாயை போல பிள்ளை நூலைப் போல சேலை. ஹும்...இருந்தாலும் இம்முட்டு வாய் ஆகாதப்பா. எல்லாம் என் புள்ளைக்காக தேன் பொறுத்துக்கிட்டு இருக்க வேண்டி கிடக்கு”  என குத்திக் காட்டி பேசினாள் வடிவு.

 

சந்தியா பதிலளிக்கும் முன் லக்ஷ்மி கண்களால் “பேசாதே!” என அவளிடம் கண்டிப்பு காண்பித்து விட்டு சென்றார்.

 

“ஹாலில் இருந்து  கூப்பிட்டா இந்த ரூம்ல சத்தம் கேக்காது வடிவு.” என்று விளக்கமளித்துக் கொண்டே நடந்த லக்ஷ்மியை பின் தொடர்ந்த வடிவு “என்ன மதினி? இவ  என்ன பால் குடிக்கிற பிள்ளையா? வயசானவளை அம்போன்னு விட்டுட்டு இவளுக்கு துணைக்கு வந்து படுக்குறீங்க? இப்படி கவனிக்க ஆள் இல்லன்னு தேன்  பெரியாத்தா  இங்க வரவே அரளுது” என குற்ற பத்திரிக்கை வாசித்துக் கொண்டே லக்ஷ்மியின் பின் சமையலறைக்குள் புகுந்தாள் வடிவு.

 

உடம்பில் சோர்வு இருந்தாலும், படுக்கையில் சிறிது நேரம் சோம்பல் முறித்து மெதுவாக எழுந்து பல்லை விளக்கி விட்டு வரவேற்பறைக்கு வந்து சோபாவில் சரிந்தாள் சந்தியா. அதே அறையில் ஒரு ஓரத்தில் இருந்த கட்டிலில் அமர்ந்திருந்த தண்டட்டி பாட்டி,

 

“யேய்...அந்த டிவி பெட்டியை செத்த போட்டு விடு” என்று சந்தியாவை பார்த்து சொன்னார்.

 

“எனக்கு பேர் இல்லையா? மொட்டைகட்டையா கூப்பிடுற பாட்டி” என்று  தொலைக்காட்சி பெட்டியை ஆன் செய்து விட்டு டிவி ரிமோட்டால் சில மாற்றங்கள் செய்தாள். பேசன் டிவி எனப்படும் மேற்கத்திய உடைகள் போட்டு அழகிகள்  வலம் வரும் பேஷன் ஷோ அலைவரிசை மட்டும் தெரியும் படி செய்தாள். அதை பார்த்த தண்டட்டி பாட்டி,

 

“இது என்ன கண்றாவி அவுத்து போட்டுக்கிட்டு வர்றாலுக...துணியை போட்டுட்டு  வரலாம்ல….” என்று க,த வகை எழுத்துக்களில் ஆரம்பிக்கும் கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தார்.

 

வேறு அலைவரிசை தெரியவில்லை என சைகையால் செய்து காட்டி விட்டு டிவியை ஆப் செய்ய போனவளை அவள் எதிர்பார்த்த படியே தடுத்தார் பாட்டி. அவருக்கு “அப்செசிவ் கம்பல்சிவ் டிஸ்ஸார்டர்”. அதாவது செய்ததையே திரும்ப திரும்ப செய்வர். பாட்டிக்கு டிவி பார்க்க வேண்டும் அவ்வளவு தான். திரையில் எந்த நேரமும் ஏதாவது ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். அதனால் வேறு வழியில்லாமல் பேசன் டிவியை பார்த்தார். அவர் கிராமிய வாடையில் அந்த அழகிகளுக்கு கொடுத்த  விமர்சனங்கள்,

 

“நல்லா…. சட்டைய  கிழிச்சுவிட்டு வந்தா *கெட்ட வார்த்தை*”  

 

“இந்த *கெட்ட வார்த்தை* இப்படி நொண்டி நொண்டி நடக்கனுமாக்கும்...என்ன தீயா மிதிக்கிராளுக ”

 

“குருட்டு கழுதையாட்டம் எங்கிட்டோ  பாத்துட்டு நடக்கிறாளுக”

 

“என்ன  இப்படி வாரா…கண்ணைக் கொண்டு பாக்க முடியலை. செய்” என்று அருவெருப்பாய்  சொன்னவரிடம்,

 

“ஆப் பண்ணிடவா?” சைகையில் கேட்டாள் சந்தியா.

 

“இருக்கட்டும் விடு. அவ போயிட்டா ….” என்றார் பாட்டி. அதை கேட்டு சிரித்தாள் சந்தியா.

 

நடை பயிற்சி முடித்து உள்ளே வந்த தன்ராஜ், டிவியில் அரைகுறை ஆடை அணிவகுப்பை ஒளிப்பரப்பாகிறதை பார்த்தவர், “இதை உக்காந்து பாத்துக்கிட்டு கிடக்க” கடுப்பாகி போய் அவர் தண்டட்டி பாட்டியை கேட்க,

 

“பாத்தியா  ராசா...அந்த  சிறுக்கி சிலுப்பிகிட்டு என்னம்மா கொக்காட்டம் நடந்து  வர்றா” என்று விவரித்தார். அவருக்கு தன்ராஜ் கோபத்தில் கேட்பது காதில் விழவில்லை.

 

“காலங்காத்தால இது ரொம்ப முக்கியமா? வயசாக ஆக ஆக புத்தியே மழுங்கி போச்சு உனக்கு”, வேகமாக தொலைக்காட்சியை  அணைத்து விட்டு தன் அன்னையிடம் திரும்பி கோபமாக கத்தினார் தன்ராஜ். மகன் திட்டுகிறான் என அவர் பாவனையில் அறிந்து முகம் சிறுத்து போன பாட்டியை பார்த்து குஷியாகி உதட்டோரம் ஏளன சிரிப்பை உதிர்த்தாள் சந்தியா. தன்ராஜ் அவளிடம்,

 

“ஏன் அப்பத்தாவுக்கு வேற சேனல் போட்டு விட வேண்டியது தான?”  எனக் கேட்க,

 

“அப்பா  இந்த சேனல் மட்டும் தான் வருது. நான் ஆப் பண்ண போனப்ப அவங்க ஆப் பண்ண விடலை” சரியான நேரத்தில் பாட்டியை போட்டுக் கொடுத்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.