(Reading time: 60 - 120 minutes)

 

விடிந்து இவ்வளவு நேரமாகியும் பாண்டியன் எழுந்து வராததால் அவனுக்கு காபி கலந்து கொண்டு  போனாள் வடிவு. சந்தியா படுத்திருந்த சோபா எதிரில் இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து  தினசரியை திருப்பினார்  தன்ராஜ். தொலைக்காட்சியை அணைக்கப்பட்டதால் என்ன செய்வதென்று தெரியாத பாட்டி,

 

“தனராசு, இவளுக்கு எப்போ பெண் பேசப் போற? நானும் வந்து ரெண்டு நாளாகுது. சீக்குல கிடக்கான்னா  சொல்லுதாக.  நல்லாதேன்  இருக்கா? இன்னும் என்னத்துக்கு காத்துகிட்டு இருக்கீக?”,  கேட்டார் தன்ராஜிடம்.

 

“அது இப்பதைக்கு வேண்டாம்ன்னு பாக்கிறேன் ஆத்தா” என்றார் தன்ராஜ்.

 

“என்னது இப்பவே பெண் பேசப் போறீகளா? பின்ன இவ மூளியாட்டம்  இங்கன்ன உட்காந்துட்டு கிடக்கா?” என சந்தியாவை காட்டி கேட்டார் தண்டட்டி பாட்டி.

 

“அய்யோ..இப்போதைக்கு கிடையாது ஆத்தா” சத்தமாக குரலை உயர்த்தி சொன்னார்.

 

“ஓ... இப்போ கெளம்பிடுவாளா? அதை எதுக்கு பத்து ஊருக்கு கேக்குற மாதிரி கத்தி சொல்லுத (ற)?” என அரையும் குறையுமாக கேட்டதை சொன்னார் பாட்டி.

 

“அய்யோ” என தலையிலடித்த தன்ராஜ் “இதுக்கு மேல உனக்கு விளங்க வைக்க முடியாது. தெரிஞ்சும் நீ எதுவும் செய்யப் போறது கிடையாது” என அவருக்கு விளக்கும் முயற்சியை கைவிட்டு பார்வையை நாளிதழில் திருப்பினார்  தன்ராஜ்.

 

அது புரியாமல் முழித்த பாட்டியிடம் சோபாவில் அனந்த சயனத்தில் படுத்திருந்த சந்தியா தந்தை அறியாவண்ணம், சத்தம் எழுப்பாமல் “வெவ்வே வெவ்வே” வாயை மட்டும் அசைத்து அழகு காட்டினாள்.

 

அந்த நேரம் பாலை குடிக்க சொல்லி சந்தியா முன் கோப்பையை நீட்டினார் லக்ஷ்மி. “சீ..பாலா...ஒமட்டும். ” முகத்தை சுளித்தாள்.

 

“பாலை குடி” என்றார் தன்ராஜ் கண்டிப்புடன் பார்வையை இன்னும் செய்திதாளில் வைத்தவாறு.

 

“அப்பா வந்து...பால் வாடை எனக்கு…” தயங்கி தயங்கி சொல்ல விளைந்த சந்தியாவை நாளிதழை மடியில் போட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தவர், “இது கூட கிடைக்காம எத்தனை பேரு இருக்காங்க?ஒரு மடக்கு கூட மீதம் வைக்காம குடிச்சிருக்கணும்” என ஆள் காட்டி விரலை ஆட்டி கண்டிப்பு காட்ட, முகம் சுருங்கி போய் லக்ஷ்மியை பார்த்த சந்தியாவிடம், “வேலைக்கு சேந்து ஒரு வாரம் கூட ஆகலை,  அந்த கார்த்திக் தம்பியே சொல்லுதே, சந்தியாவுக்கு பெலனே இல்ல, உடம்பை தேத்திவுடுங்கன்னு. உன் உடம்பை நீயே  ஒழுங்கா  கவனிச்சா இன்னொரு ஆளு இப்படி பேசுவாங்களா?” கேட்டுக் கொண்டே பாலை அவள் கைகளில் திணித்தார் அவர். “சகுனி...என்னல்லாம் போட்டுக் கொடுத்தானோ” என்று எண்ணிக் கொண்டே பாலை குடித்தாள்.

 

அப்போது அங்கே வந்த ஸ்ரீமாவிடம், “ஸ்ரீ என்னோட அண்டாகாகசப் பெட்டியையும் என் ஹேன்ட் பேக், போன் எல்லாம் எடுத்துக் கொடுடி” என சந்தியா கெஞ்ச, “அண்டாகாகசப் பெட்டியா? மாட்டப் போறது யாரு? கண்களால் ஸ்ரீ வினவ, “பீப்பா” சத்தமில்லாத  அவள் உதட்டசைவே காட்டிக் கொடுக்க, உற்சாகமான ஸ்ரீமா  அவள் கேட்டதை எடுத்துக் கொடுத்தாள். அண்டாகாச பெட்டியில் தான் எதிரிகளை விதம் விதமாக துன்புறுத்தும் ஆயுதங்களை வைத்திருப்பாள் சந்தியா. அதை ஆராய்ந்து ஒன்றை தேர்ந்தெடுத்தாள்.

 

கனை வெகு நேரமாக எழுப்ப முயன்று ஒரு வழியாக கண் விழித்த பாண்டியனிடம் காபியை கொடுத்த வடிவு,

 

“ராசா நாம மோசம் போயிட்டோம்யா….உன் மாமன் கரிய பூசிட்டாரு. சீக்கிரம் காப்பிய குடிச்சிட்டு வா. வந்து அந்த ஆளுக்கிட்ட இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடுவோம். கூட்டியாந்த நம்ம சொந்தக்காரங்க எல்லாம் நிச்சயம் நடக்கலைன்னு  ஊருக்கு போற வழிய பாக்கணும்ன்னு நச்சரிக்கிறாங்க”

 

என்று அவசரப்படுத்த அவனிடமிருந்து பதில் வரவில்லை. என்னவென்று அருகில் சென்று பார்த்தால் காபி கோப்பையை குடிப்பது போல வாயில் வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தான்.

 

“டேய் பாண்டியா” என அவன் தோளைத் தட்ட கோப்பையை வாயில் வைத்தவாறு தூங்கிக் கொண்டிருந்தவன் அப்படியே பின்னோக்கி படுக்கையில் சரிந்தான். வெற்று கோப்பை கீழே உருண்டோடியது.

 

காபியை குடித்தும் தூங்குகிறானே என குழம்பினாள் வடிவு. அவளுக்கு பாண்டியன் எழும் வரை தன்ராஜிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. “அயித்தை ...சீக்கரம் ஊருக்கு போவணும். சென  மாட்டை விட்டுபுட்டு வந்திருக்கேன்.” என அவசரப்படுத்தினாள் உறவுக்கார பெண்.

 

“நீங்க முன்னால வேனுல போங்க. நான் பண்டியனோட வாரேன்” என்று வடிவு இருந்து வர முடிவெடுத்தாள்.

 

காலையில் எட்டு மணியிலிருந்து பத்து மணி வரை மின்வெட்டு. குளியலறை ஹீட்டர் வேலை பார்க்கவில்லை. சிற்றுண்டிக்கு தயார் செய்து கொண்டிருந்த லக்ஷ்மியிடம் வந்த வடிவு   “மயினி கரண்டு இல்லை போலயே. சுச்சு போட்டா  வெந்நி வராது போலிருக்கே. அடுப்புல வெந்நி போடு(றீ)தீகளா?”

 

“போடுறேன் வடிவு. மே மாச வெயிலுக்கு இந்த நேரமே டேங்கு தண்ணி  வெது வெதுன்னு இருக்கும்.” என்று தெரியாமல் வாயை விட்டார் லக்ஷ்மி. முகத்தை தொங்கப் போட்டபடி நேராக தன்ராஜிடம் வந்த வடிவு,

 

“மயினி வெந்நீ   கூட வைச்சு தர மாட்டேங்கறாக அண்ணன்” வத்தி வைத்தாள்.

 

“ஏன் என்னாச்சு?”, கேட்டார் தன்ராஜ்.

 

“ நானே நீர் உடம்பு. சளி பிடுக்கும்ன்னு குளிக்க வெந்நீ போட சொன்னா டேங்கு தண்ணில குளிக்க சொல்லுதாக.  என்னை விடுங்க. இவுங்க கையால  காலையிலே பெரியாத்தா ஒரு வாய் வெந்நீ வாங்கி குடிக்கங்குள்ளாற   பட்ட பாடு இருக்கே அய்யோ…” என அலுத்துக் கொள்வது போல அங்கலாய்த்தாள்.

 

“சரி விடு.” என்று வடிவிடம் சொல்லி விட்டு, சற்று குரலை உயர்த்தி, “லக்ஷ்மி வடிவுக்கு வெந்நீ விலாவி கொடுத்திடு.” என்று ஆணையிட்டார் தன்ராஜ். “அண்ணே அப்புறம் இந்த பய இன்னும் எந்திரிக்கவே இல்ல. எல்லாரும் கிளம்புதாக. நான் சொன்ன மாதிரி தட்டு மட்டும் மாத்திட்டோம்னா நல்லது” என்றாள்  பவ்யமாக.

 

அதைக் கேட்டு எரிச்சலடைந்த தன்ராஜ், “இப்போ என்ன அவசரம் உனக்கு? நடக்கிற வேலையைப் பாரு” என்று சிடுசிடுவென சொல்லிக்  கொண்டிருக்கும் போதே,

 

“வடிவு அத்தைக்கு வச்ச வெந்நீயை உனக்கு விளாவிட்டேன். சூடு பாத்து சொல்லு.” என லக்ஷ்மி அழைக்க அவளால் அதற்கு மேல் அந்த பேச்சை தொடர முடியவில்லை. சண்டையைப் போட அவள் போராட, பிடி கொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தார்  தன்ராஜ். வடிவு வம்பு வளர்ப்பாள். பாண்டியனோ தான் சொல்வதை புரிந்து ஒதுங்கிக் கொள்வான் என அவன் மீது அசட்டு நம்பிக்கை வைத்தார் தன்ராஜ்.

 

“இத்துனூண்டு தண்ணி யாருக்கு பத்தும்?  இன்னொரு சட்டி வைச்சு வெளில வெச்சுடுங்க“ என வடிவு கட்டளையிட, வீம்புக்கென சொல்கிறாள் என தெரிந்தும் வேறு வழியின்றி சரியென தலையாட்டினார்  லக்ஷ்மி.

 

ந்தியாவின் வீட்டில் கீழ் பகுதி பழைய கட்டிடம் தான். மாடி மட்டும் சில ஆண்டுகளுக்கு முன் எடுத்துக் கட்டினார் தன்ராஜ். அதனால் அந்த காலத்து அமைப்பு படி குளிக்கும் அறை  கொல்லைப்பக்கம் இருந்தது. லக்ஷ்மி சென்ற சில நொடிகளில் அங்கே வந்தனர்  ஸ்ரீமாவும், சந்தியாவும்.

 

“ஏன்டி பீப்பா தாப்பாவை உடைச்சிட்டு ஓடி வரும்னு நினைக்கிற?” இரகசியமாக கேட்டாள் ஸ்ரீமா.

 

“ஆமா. ஆனா அது வெளிய வந்ததும் பாத்ரூம்ல வச்ச என் ஆயுதத்தை யார் கண்ணுலையும் படாம எடுத்திட்டு வந்துடு. தப்பு செய்தா தடயம் இல்லாம செய்யணும்  “ என அக்காவிற்கு ஆணையும் ஆலோசனையும் இரகசியமாக வழங்கினாள்.  

 

குளியலறைக்குள் புகுந்த வடிவு, தலைக்கு ஷாம்பூவை போட்டிருந்ததால் கண்களை திறக்க முடியவில்லை. கண்களை  மூடிக் கொண்டே சோப்பை தேட, அதே நேரம் வெளியிலிருந்து “வடிவு வெந்நீ..கதவை தள்ளு, உள்ளே எட்டி  வைச்சிடுறேன்” என லக்ஷ்மி கைகளில் கைப்பிடி துணியால் வெந்நீர் பானையை தூக்கியவாறு சொல்ல,  “ம்ம்க்கும்…” என தொண்டை கனைப்பிலே அலட்சியம் காட்டியவள்,

 

“எப்பயும் மூணு பேரு படம் போட்ட ஊதா கலர் சாம்பூ தான் போடுவேன். இங்க ஏதோ கண்றாவி சாம்பூவை வைச்சிருக்கீக. சை...அதை போட்டு  ஒரே கண்ணு எரிச்சல். இதுல வெந்நீ வைக்க அக்கறையா கேக்குறது எதுக்கு? நான் கண்ணு தெரியாம கொதிக்கிற தண்ணில கைய கால விட்டு புண்ணாகுறதை   வேடிக்கை பாக்கவா? சும்ம்மா வெளில வைங்க. நாங்களே எடுத்துக்குவோம்.” என இளக்காரமாக வடிவு நீட்டி முழக்கி சொல்ல,

 

அவள் பேசியது மனதை நோகடிக்க வருந்திய லக்ஷ்மி “வெளியே வச்சிட்டேன். ” என்று கூறும் போதே குரல் மங்கியது. அதை கவனித்த வடிவு “வக்கத்த குடும்பத்தில இருந்து வந்தாலும் ரோசத்துக்கு மட்டும் கொறச்சல் இல்ல” அவள் சொல்வது என்ன தான் லக்ஷ்மி வேகமாக அந்த இடத்தை விட்டு அகன்றாலும் அவர் காதில் விழுந்தது. சற்று தொலைவில் நின்று பேசிக் கொண்டிருந்த ஸ்ரீமாவும்  சந்தியாவும் அவர்களை  கடந்து சென்ற   லக்ஷ்மியின் முகத்தில் கவலை படிந்திருப்பதை  கவனித்து அவரிடம் விசாரித்தனர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.