(Reading time: 12 - 23 minutes)

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் ராசுவுடன் கலந்துரையாடல்

rasu

முகம் சுளிக்காமல் படிக்க கூடிய அழகான காதல் கதைகளை குடும்ப பின்னணியில் கொடுத்து Chillzee.in வாசகர்களின் மனதை கவர்ந்திருப்பவர் ராசு.

Chillzee.inன் 2014-15 சிறுகதை போட்டியில் பங்குப்பெற்ற பாசம் எனும் சிறுகதையின் மூலம் chillzeeயில் எழுத்தாளராக அறிமுகமாகி, மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து மனம் மயக்கும் கதைகள் பல எழுதிக் கொண்டு இருப்பவர்.

இன்றைய விநாயகர் சதுர்த்தி திருநாளில், chillzee டீமுடன் ராசு நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக 


Chillzee.in - வணக்கம் ராசு. Chillzee team & வாசகர்கள் சார்பாக உங்களுக்கு எங்களின் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

 

ராசு - வணக்கம் சில்சீ. சில்சீக்கும், அன்பு தோழமைகளுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். முதலில் சில்சீக்கு எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன். இப்போது நீங்கள் என்னுடைய பேட்டியை படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் அதற்கு முழுமுதல் காரணம் சில்சீ என்று நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்து கொள்ளவும் வேண்டுமா என்ன?

 

Chillzee.in - நன்றி ராசு 🙂

Chillzeeல எழுதுபவர்களிலேயே மிகவும் அமைதியான ரைட்டர் நீங்கன்னு சொல்லலாம்னு நினைக்கிறோம். அது சரின்னு நினைக்குறீங்களா? 🙂

 

ராசு -ஹா… ஹா… ஹா… பயந்துடாதீங்க. சும்மா சிரித்தேன். என்னை நேரில் பார்க்காவிட்டாலும் நான் அமைதின்னு சொல்லிட்டீங்க. மிகவும் நன்றி. (ஒருவேளை நானுண்டு என் கதையுண்டுன்னு இருக்கிறதால் கூட அப்படி சொல்லியிருக்கலாம். அதை நினைத்து எனக்கும் வருத்தம்தான். எழுதுவதில் எத்தனை விருப்பமோ அதே மாதிரிதான் படிப்பதிலும். இருந்தாலும் என்னால் சில்சீயில் வரும் அத்தனை கதைகளையும் படிக்க முடியவில்லை. அம்மாஆஆஆடி எத்த……னை கதைகள். கருத்துக்களை பகிர்வது என்பது எத்தனை சிரமம் என்று நான் உணர்ந்திருக்கிறேன். அப்படியும் சில நண்பர்கள் தங்களது திறமையைக் காட்டிக்கொண்டுதான் இருக்கின்றனர். நான் இந்த கோணத்திலா எழுதியிருக்கிறேன் என்று எழுதுபவர்களையே யோசிக்க வைக்கும் திறமைசாலிகள் அவர்கள். அவர்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.)

விசயத்துக்கு வருவோம். முதலில் என்னைப் பார்க்கிறவர்கள் அமைதின்னுதான் சொல்வார்கள். வீட்டில்தான் நம்ம வண்டவாளம் எல்லாம் தெரியும். நன்றாகப் பழகின பிறகுதான் நான் அமைதியில்லைன்னு என்னுடன் பழகுபவர்களுக்குத் தெரியும். அப்படி அவர்கள் சொல்லவும் செய்வார்கள். படிக்கும்போது ஆய்வகத்தில் இருக்கும்போதெல்லாம் அமைதியாக ஏதாவது நான் சொல்லிவிடுவேன். என்னுடைய தோழிகள் சிரித்து ஆசிரியரிடம் மாட்டிக்கொள்வர். இப்போது வேலை பார்க்கும் இடத்திலும் பேசாமல் மற்றவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். அப்படி நான் பேசினால் மற்றவர்கள் பதில் சொல்ல முடியாமல் போய்விடும் என்று கிண்டல் செய்வர். நான் கூட எழுதும்போது எல்லாம் இந்த மாதிரி ஏன் தோன்ற மாட்டேங்கிறதுன்னு ரொம்ப வருத்தப்படுவேன். இப்ப சொல்லுங்க நான் அமைதியா?

 

Chillzee.in - என்ன சொல்ல 🙂 !!!!

Chillzee உங்களுக்கு அறிமுகமான விதத்தை பற்றி எங்களுடன் பகிருங்களேன்.

 

ராசு -பத்திரிக்கைகளில் ஏதாவது சிறுகதைப் போட்டி வந்திருக்கிறதா? என்றுதான் முதலில் Google-ல் தேடிப்பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் எதார்த்தமாக பொங்கலுக்காக சிறுகதைப் போட்டி ஒன்று சில்சீயில் வந்திருந்தது. உடனே எழுதி அனுப்பினேன். அதிலேயே எழுதுவதற்கு ஆர்வமாக இருக்கிறீர்களா? தங்களது பங்களிப்பைக் கொடுக்கலாம் என்றும் வந்திருந்தது. சந்தேகத்துடன்தான் என் முதல் தொடர் கதை சிந்தை மயங்குதடி உன்னாலேயின் முதல் அத்தியாயத்தை எழுதி அனுப்பினேன். தேர்ந்தெடுத்துவிட்டோம் என்று எனக்கான நேரம் ஒதுக்கியதையும், எனது முதல் அத்தியாயம் வந்த போது அதைப் படித்த போது வந்த சந்தோசத்தையும் என்னால் மறக்கவே முடியாது. அதை வார்த்தைகளால் வடிக்கவும் முடியாது. அதற்காக நமது தோழமைகள் கொடுத்திருந்த கருத்துப் பகிர்வுகள் நன்றாக எழுத வேண்டும் என்ற உந்துதலைத் தந்தது. அவர்களின் ஊக்கம்தான் இன்று வரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.

 

Chillzee.in - இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள் ராசு.

2015ல் மௌனம் எதற்கு கதையிலேயே 12 வருடங்களுக்கு முன் யோசித்து பாதி எழுதிய கதைன்னு குறிப்பிட்டு இருந்தீங்க. அப்போ கட்டாயம் எழுதும் ஆர்வம் உங்களுக்கு பல வருடங்களாகவே இருந்திருப்பது புரியுது. அதை பற்றி சொல்லுங்களேன்.

 

ராசு -ஆமாம். எந்த வயதில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் தோன்றியது என்று தெரியவில்லை. ஆனால் காரணம் தெரியும். நான் வாசிக்க ஆரம்பித்த சிறுவர் இதழ்கள்தாம் அது. பள்ளிப்பருவத்திலேயே சிறுகதைகளை எழுதி புத்தகங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறேன். ஆனால் அவைகள் பிரசுரமானதில்லை. தேர்வு பெறவில்லை என்ற செய்தியைத் தாங்கிய அஞ்சல் அட்டைதான் வீடு தேடி வரும். இருந்தும் மனம் தளராமல் வேறொரு கதையை வேறொரு பெயரில் எழுதி அனுப்புவேன். அப்போதும் வராது. நான் பெயரை மாற்றிக்கொண்டே இருந்தேன். இப்போது நினைத்தால் பெயரில் என்ன இருக்கிறது? நமது படைப்பில்தான் இருக்கிறது விசயம்னு புரியுது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.