(Reading time: 15 - 29 minutes)

  

அந்த அமைச்சர்களைப் பார்க்கப் பார்க்க தானும் ஓர் அமைச்சராக வேண்டும் என்ற ஆசை அந்த முயலின் உள்ளத்தில் கொழுந்து விட்டு எரிந்தது. சிங்க அரசரின் பக்கத்தில் ஓர் அமைச்சராக வீற்றிருந் தால் எவ்வளவு பெருமையாக இருக்கும் என்று அது நினைத்துப் பார்த்தது.

  

சிங்கத்தைக் கண்டாலே முயல்களுக்கு உடம் பெல்லாம் வெடவெட என்று ஆடும். சிங்கம் தன் முன் கையால் ஓர் அறை அறைந்தால் ஒரு முயல் அப்படியே செத்துப்போய் விடும். ஆனால் இந்த முயல் குட்டிக்கோ சிங்கத்தின் பக்கத்தில் போய் அமைச்சராக இருந்து ஆட்சி செய்ய வேண்டும் என்று ஆசை பிறந்து விட்டது.

  

ஒரு நாள் வேட்டையாடி வயிறு புடைக்கத்தின்று விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததுசிங்க மன்னன். அப்போது அதன் எதிரே போய் தொபுக்கென்று குதித்தது சின்ன முயல் . சிங்கம் நிமிர்ந்து பார்த்தது. மாமன்னரே வணக்கம் என்று சிங்கத்தின் பாதத்தைத் தொட்டு வணங்கியது சின்ன முயல்.

  

''அடே, குட்டிப்பயலே உனக்கு என்னால் என்ன ஆக வேண்டியிருக்கிறது. ஏன் கூழைக்கும்பிடு போடுகிறாய்?'' என்று சிங்க மன்னன் கேட்டது.

  

"அரசே. இந்தச் சிறுவனின் விண்ணப்பம் ஒன்று. தாங்கள் செவிசாய்த்துக் கேட்க வேண்டும். ஒரு குட்டிப் பயலால் என்ன முடியும் என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. தாங்கள் என் விருப்பத்தை நிறைவேற்றி வைத்தால், என் வாழ்நாள் முழுவதும் என் உயிரும் உடலும் உங்களுக்கே ஒப்படைப்பேன் என்று பணிவாகக் கூறியது சின்ன முயல்.

  

"உன் உயிரால் எனக்கு எந்தப் பயனும் இல்லை. உன் உடலோ என் ஒரு வேளைச் சாப்பாட்டுக்குக் கூடப் பயனில்லை. நீ எனக்கு என்ன உதவி செய்து விடப்போகிறாய்? ஒன்றுமில்லை. இருந்தாலும் சரி, உன் விருப்பம் என்ன சொல்'' என்று கேட்டது சிங்க மன்னன்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.