(Reading time: 22 - 43 minutes)

”தாரா அருகம்புல் பத்தி உனக்கு என்ன தெரியும்”

”அது ஒரு புல்லு, எல்லா இடத்திலயும் விளையும் அவ்ளோதான் அப்புறம் பிள்ளையாருக்கு அதை மாலையா கட்டி போடுவாங்க” என சொல்ல தாத்தாவோ தாராவிடம்

”அருகம்புல் பத்தி உனக்கு நிறைய தெரியலை. சரி அதைப்பத்தி நான் சொல்றேன் கேளு.  அந்தக்காலத்தில அனலாசுரன்னு ஒரு அசுரன் மக்களை மிகவும் துன்புறுத்திக்கிட்டு வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை நெருப்பால எரிச்சிடுவான். அப்போ கடவுள் விநாயகர் என்ன செஞ்சார் தெரியுமா, மக்கள் படும் கஷ்டங்களை சரி செஞ்சி அவங்களை காப்பாத்த அந்த அனலாசுரனோட போர் செஞ்சாரு. ஆனா அவரால அதுல வெற்றி பெற முடியலை. அந்த கோபத்தில் அந்த அசுரனை விழுங்கிட்டாரு. வயிற்றுக்குள்ள இருந்த அசுரனோ சாகாம உள்ளயே நெருப்பைக் கக்கி பிள்ளையாரை உஷ்ணமாக்கினான் அதனால அவர் கஷ்டப்பட்டாரு. அப்ப அவரை குளிர்விக்க நினைச்சி மக்கள் குடம் குடமாக கங்கை நீரால அபிஷேகம் செஞ்சாங்க, அப்படி செஞ்சும் அவரோட வயிற்றெரிச்சல் அடங்கவேயில்லை. அதுக்கப்புறம் முனிவர் ஒருவர் ஒரு அருகம்புல்லை கொண்டு வந்து பிள்ளையாரோட தலையில் வைச்சி வழிபடவும்  எரிச்சல் அடங்கிச்சாம். அப்போதிலிருந்து பிள்ளையார் வழிபாட்டில் அருகம்புல் அவசியமாயிடுச்சிம்மா. இதான் அருகம்புல்லுக்கான வரலாறு. அதனால அதை குறைச்சி எடைபோடாத”

”ஓ அப்படின்னா பிள்ளையாருக்கு அருகம்புல்தான் பிடிக்குமா, கொழுக்கட்டை பிடிக்காதா” என தாரா சந்தேகமாகக் கேட்க அதற்கு பாட்டியோ சிரித்தார்

”உனக்கு கொழுக்கட்டை வேணும்னு கேளு செஞ்சித்தரேன், எதுக்காக பிள்ளையாரை உனக்கு துணையா இழுக்கற” என பாட்டி வள்ளி சொல்ல

”அதுக்கு இல்லை பாட்டி, பெரும்பாலும் பிள்ளையார் தன் கையில கொழுக்கட்டையை வைச்சிருப்பாரே அதனாலதான் அவருக்கு அது ரொம்ப பிடிக்கும்னு நான் நினைச்சேன் அவ்ளோதான்.” என்றாள் தாரா அதற்கு அவளது தாய் சிவகாமி

”முதல்ல கொழுக்கட்டையை பத்தி நீ தெரிஞ்சிக்க அது வெறும் சாப்பிடற பொருள் மட்டுமில்லை கொழுக்கட்டையில பல அர்த்தங்கள் இருக்கு”

“என்ன அர்த்தம்?” என சுந்தரி கேட்க அதற்கு சிவகாமியோ

”என்னோட அம்மா சொன்னதை சொல்றேன் நல்லா கேட்டுக்க தாரா, கொழுக்கட்டையை மோதகம்னு கூட சொல்வாங்க. தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்துச் செய்யப்படுவதாலயே எல்லாருக்கும் மிகவும் பிடித்தமான நைவேத்தியமா அது ஆயிடுச்சி. கொழுக்கட்டைக்கு மேல இருக்கற மாவுப் பொருள்தான் இந்த பரந்து விரிந்த அண்டம்,  உள்ளே இருக்கும் பூரணம் பிரம்மம், மக்களுக்குள் இருக்கின்ற நல்ல பண்புகளான பூரணத்தை மாவான மாயை மறைத்துக் கொண்டுள்ளது.  மாயையை அகற்றினால் நல்ல பண்புகள் வெளியில் வரும் என்பதை சொல்லத்தான் இந்த கொழுக்கட்டையை படைக்கறாங்க.” என சொல்ல செந்தாமரையோ

”அது மட்டுமா கொழுக்கட்டையோட வெளிப்பகுதி வெள்ளையாகவும், உள்ளே மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் இருக்கிறது. மனதை வெள்ளையாக வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத கடவுளை அடையலாம்னு ஒரு தத்துவம் இருக்கு”

என சொல்ல தாராவோ

”அப்படின்னா கொழுக்கட்டைதான் பிள்ளையாருக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள் சந்தோசமாக

”இன்னும் முடியலை தாரா என் தரப்பு இருக்கு” என ஆரம்பித்தான் சேது.

”தாத்தா கரும்பு கூட நிவேதனப் பொருட்கள்ல ஒண்ணுதானே, என்னவோ சொல்வாங்களே கரும்பு வந்து கடிப்பதற்கு கடினமானாலும் இனிப்பு பண்டம், அதே போலதான் இந்த வாழ்க்கையும்   கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம்னு கரும்புக்கு கூட ஒரு தத்துவம் இருக்கே அதனாலதானே பொங்கலுக்கும் சரி இப்படி பிள்ளையார் பண்டிகைக்கும் சரி கரும்பை வைச்சி வழிபடறாங்க அப்ப பிள்ளையாருக்கு அதுதானே பிடிக்கும்” என சொல்ல அதற்கு விசுவோ

”அப்படிப்பார்த்தா அவல், பொரி கூட பூஜையில வைக்கறாங்க. அவலும் பொரிக்கும் கூட ஒரு தத்துவம் இருக்கு, அதை சும்மா ஊதினாலே பறக்கக்கூடியவை, மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் தினமும் சந்திக்கின்ற துன்பங்களை ஊதித்தள்ளி விட வேண்டும்னுதான் அதை சாமிக்கு படைக்கறாங்க. அப்போ பிள்ளையாருக்கு அதுகூட ரொம்ப பிடிக்குமே” என சொல்லவே அதற்கு பாட்டி வள்ளியோ

”விரதம் இருக்கறதுதான் பிள்ளையாருக்கு ரொம்ப பிடிக்கும், எத்தனை விரதங்கள் இருக்கு தெரியுமா, வெள்ளிக்கிழமை விரதம், செவ்வாய்க்கிழமை விரதம், சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயகர் விரதம், துர்வாஷ்டமி விரதம், நவராத்திரி விரதம், வெள்ளிப்பிள்ளையார் விரதம், செவ்வாய்ப்பிள்ளையார் விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் இப்படியே சொல்லிக்கிட்டே போகலாம். விரத நாளில் மக்கள் அனைவரும் பயபக்தியுடன் இருப்பார்கள் சிறப்பான முறையில் விரதத்தை கடைப்பிடித்து சாமியோட  அருளை பெறுவாங்க.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.