(Reading time: 22 - 43 minutes)

விநாயகர் விரதத்தை ஸ்ரீகற்பக விநாயகர் வீற்றிருக்கும் பிள்ளையார்பட்டியிலும் மற்றும் திருவலஞ்சுழி (கும்பகோணம்), உப்பூர் (ராமநாதபுரம்), ஈச்சனாரி (கோயம்புத்தூர்) ஆகிய இடங்களில் செய்யலாம். சிலர் இந்த இடங்களில் விரதத்தை தொடங்கியும் அதே இடங்களில் நிறைவு செய்வாங்க. அப்படி செய்ய முடியாதவங்க அவங்கவங்க ஊர்கள்லயும் சரி  வீடுகள்லயும் சரி இந்த விரதத்தை கடைபிடிக்கலாம். எங்கு விரதம் இருந்தாலும் அதற்கேற்ற பலன் உண்டு. அதனால விரதம்தான் பிள்ளையாருக்கு பிடிக்கும்” என்றார் பாட்டி பெருமையாக அதற்கு சங்கரனோ

”இந்த விரதம் நிவேதனம் இல்லைன்னாலும் எளிமையான முறையில பிள்ளையார் மனதை கவர தோப்புக்கரணம்தான் பெஸ்ட் சாய்ஸ்” என சொல்ல அதைக் கேட்ட தாத்தாவோ சிரித்தார்

”தோப்புக்கரணம் போடறது பத்தி என்ன தெரியும் உனக்கு”

“தோப்புக்கரணம் போட்டா நல்லது நடக்கும் தாத்தா, அப்படி தோப்புக்கரணம் போட்டா பிள்ளையாரோட மனசுக்கும் பிடிக்கும், தோப்புக்கரணம் போடறவங்களுக்கு மூட்டு மற்றும் கால்களுக்கு வலிமை உண்டாகும் தாத்தா”

“அவ்ளோதானா உனக்குத் தெரிஞ்சது”

“இல்லை எனக்கு நிறைய தெரியும் சொல்றேன் கேளுங்க தாத்தா, பிள்ளையாரை ஒவ்வொரு முறை கும்பிடறப்பவும் மக்கள் தங்கள் இருகைகளையும் முட்டியாகப் பிடித்து வலது கையால் வலது நெற்றி ஓரத்திலும், இடது கையால் இடது நெற்றி ஓரத்திலும் (இரு கைகளாலும் ஒரே தடவையாக) 3 முறை குட்டி அதன் பின் இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்து மூன்று முறை தோப்புக்கரணம் செய்ய வேண்டும். இன்னும் சிலர்  வலது கையால் இடது நெற்றியிலும், இடது கையால் வலது நெற்றியிலும் குட்டுதல் வேண்டும்) குறுக்காக கைகள் வைத்து காதுகளைப் பிடிக்கும் போது வலதுகை வெளிப்பக்கமாக அமைதல் வேண்டும். இடது கை நெஞ்சோடு இருத்தல் வேண்டும். கைகளால் நெற்றியில் குட்டும் போதும் தோப்புகரணம் செய்யும் போதும் “ஒம் கணேசாய நமஹ” என்ற மந்திரத்தை உச்சரித்தல் வேண்டும். அப்படி ஒவ்வொரு முறை செய்யும் போதும் நாம் சாமியை நெருங்கலாம்.” என சொல்ல தாத்தாவோ

”ம் நல்லது ஆனா உண்மையிலயே தோப்புக்கரணத்துக்கு ஒரு கதை இருக்கு, ஒரு காலத்தில அகத்தியர் முனிவர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த பிள்ளையார் அதை கொட்டிவிட்டு சாதாரண சிறுவன் வடிவில் அகத்தியர் முன்னாடி நின்னப்ப அவருக்கு பயங்கர கோபம் வந்துச்சி, கோபத்தில வந்தது சாமின்னு கூட புரிஞ்சிக்காம அவர் தலையில குட்டிட்டாரு. குட்டின பின்னாடி பார்த்தா பிள்ளையார் தன் சுயரூபத்தில வந்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததா சொல்லவும் அகத்தியர் தன் தவறுக்காக வருத்தப்பட்டு தன் தலையிலேயே குட்டிக் கொண்டாராம். அன்னியில இருந்துதான் இந்த தலையில குட்டி வழிபடும் வழக்கம் வந்ததாம். ”

அதைக்கேட்ட சங்கரனோ தாத்தாவிடம்

”அதுமட்டுமில்லை தாத்தா நெற்றியின் இரு முனைகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்குமாம், இப்பதான் நான் கூகுள்ல பார்த்தேன் இப்ப சொல்லுங்க தாத்தா எல்லாத்தையும் விட நான் சொன்ன தோப்புக்கரணம்தானே பிள்ளையாருக்கு பிடிக்கும்” என சொல்ல உடனே பட்டாபியின் மனைவி மகாலட்சுமியோ தாத்தாவிடம்

”மாமா என் வீட்ல ஒரு விசயம் சொன்னாங்க, தேங்காய்தான் ரொம்ப சிறப்பானதாம், அந்த தேங்காய்க்கு கூட ஒரு கதை இருக்காம் என் பாட்டி ஒரு கதை சொன்னாங்க அது என்ன கதைன்னா ஒருமுறை பிள்ளையார் மகோற்கடர்ங்கற முனிவரா அவதாரம் எடுத்து காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தாராம், அப்ப ஒரு யாகத்திற்கு எல்லாரும் போனப்ப திடீர்ன்னு ஒரு அசுரன் அவங்களைத் தடுத்து நிறுத்தினானாம். யாகத்திற்காகக் கொண்டு போன கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அந்த அசுரன் மேல வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார் பிள்ளையார். எந்த வேலையை செய்ய கிளம்பினாலும் தடைகள் ஏற்படாமல் இருக்க பிள்ளையாரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. பிள்ளையாரே தடையைத் தேங்காயை வீசி எறிஞ்சி தகர்த்ததால அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர்ன்னு பிள்ளையாரை சொல்வாங்க. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் அப்பவே உருவாச்சாம் மாமா. அப்படின்னா தேங்காயத்தானே பிள்ளையாருக்கு ரொம்பப் பிடிக்கும்” என அவள் சொல்ல அதற்கு கைலாசமோ

”என்ன இருந்தாலும் பிள்ளையாருக்கு பிடிச்சதுன்னா அது மூஷிஹம் வாகனம்தான், மாகத முனிவருக்கும் வீபூதி என்ற அசுரப்பெண்ணிற்கும் பிறந்த அசுரன் கஜமுகன். இவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து எந்த ஆயுதங்களாலும் தான் அழியாத வரம் பெற்றான். வரம் பெற்ற மமதையில் அனைவருக்கும் துன்பம் விளைவிக்க, அவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவ-சக்தியின் வேண்டுதலினால் பிள்ளையார் சிவகண படைகள் சூழ கஜமுகனின் மதங்கபுரத்தை முற்றுகையிட்டார். போர் மூண்டது. அசுரன் விட்ட பாணங்களை எல்லாம் பிள்ளையார் தன் கையில் உள்ள உலக்கையினால் தடுத்து, அதனைக்கொண்டே அசுரனை அடித்தாராம். அதில் அசுரன் மயங்கிட்டான். ஆனாலும் அந்த அசுரன் சாகலை. அசுரன் பெற்றவரம் நினைவுக்கு வரவும் பிள்ளையார் தன்னோட கொம்புகளில் ஒன்றை ஒடித்து அசுரன் மேல ஏவினாராம். அப்ப அந்த அசுரன் பெருச்சாளியாக (மூஷிஹம்) உருமாறி பிள்ளையாரை தாக்கினப்ப அவனை அடக்கி தன்னுடைய வாகனமாக்கிக் கொண்டாராம் இன்னிக்கு வரைக்கும் பிள்ளயார் கூடவே அந்த மூக்ஷிகமும் இருக்கும் அப்படின்னா பிள்ளையாருக்கு அதுதானே பிடிக்கும்” என சொல்ல சிவகாமியோ

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.