(Reading time: 8 - 15 minutes)
Irulum oliyum
Irulum oliyum

Flexi Classics தொடர்கதை - இருளும் ஒளியும் - 25 - ஸரோஜா ராமமூர்த்தி

இருளும் ஒளியும் : 25. மங்களத்தின் நம்பிக்கை

சாவித்திரியின் பிறந்தகத்தில் முன்னைப்போல உற்சாகமும், மகிழ்ச்சியும் பொங்கவில்லை. சிந்தனையும் கவலையும் உருவாக மங்களம் அவ்வீட்டுக் கூடத்தில் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் அவள் உள்ளம் சோர்ந்து நைந்து போய்விட்டது. தளிர்த்துச் செழித்து வளரும் மரத்தைக் கோடறி கொண்டு வெட்டுவதுபோல் தழைத்துப் பெருக வேண்டிய குடும்பத்திற்குத் தடங்கலாகப் புக்ககத்தில் வாழாமல் பிறந்தகம் வந்திருக்கும் சாவித்திரியைப் பற்றியும், அவள் வருங்காலத்தைப் பற்றியும் - எல்லோரும் கவலை அடைந்தார்கள். வழக்கமாகக் காணப்படும் இரைச்சலோ, உற்சாகமோ அந்த வீட்டில் அப்பொழுது நிலவவில்லை. குடும்பத்துக்கு வேண்டியவற்றைக் கவனித்துச் செய்வதற்கு அக்கறை உள்ளவர்கள் யார் இருக்கிறார்கள்? சீதாவுக்கு அவ்வளவு அநுபவம் போதாது. விளையாட்டுச் சுபாவம் படைத்த அவள் தான் தற்சமயம் குடும்பப் பொறுப்பை நிர்வகித்து வந்தாள். வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரும் தன் பேரில் பழி சொல்வதாக நினைத்து சாவித்திரி, அதை அந்நிய இடமாகவே பாவித்தாள். இஷ்டமிருந்தால் யாருடனாவது பேசுவாள், இல்லாவிடில் அதுவும் இல்லாமல் தன் அறையிலேயே அடைபட்டுக் கிடப்பாள் அவள்.

தேக வலிமையும், சலியாமல் உழைக்கும் திறனுமுடைய தன் தாயார் உடல் மெலிந்து படுத்த படுக்கையில் கிடப்பதைப் பார்த்த சந்துரு. தன் சகோதரியை மனத்துக்குள் வெறுத்தான். மனைவியின் தேக நிலையைக் கண்ணுற்ற ராஜமையருக்கு மாப் பிள்ளை ரகுபதியின் மீதே கோபம் அதிகமாயிற்று.

மங்களம் தன் பெண்ணின் பிடிவாத குணத்தைக் கண்டு ஆறாத் துயரத்தை அடைந்தாள். சிறு வயதிலிருந்தே பரம சாதுவாகவும், யார் எதைச் சொன்னாலும் சகித்துக்கொள்ளும் சாமர்த்தியமும் பெற்றிருந்த அவளுக்கு சாவித்திரியின் மனப்போக்கு ஒரு புதிராகவே இருந்தது. சீதாவுக்கும் கல்யாண வயது நெருங்கிக் கொண்டிருந்தது. அடுத்தாற்போல் சந்துரு வுக்கும் கல்யாணம் பண்ண வேண்டியதுதான். ஆனால், புக்ககத்தில் வாழவேண்டிய பெண் கோபித்துக்கொண்டு. பிறந்தகத்தில் இருக்கிறாள் என்பதை நினைக்கையில், சீதாவுக்கு வரன் தேடவோ, சந்துருவுக்குப் பெண் கொள்ளவோ யாருக்கும் தைரியம் ஏற்படவில்லை.

படுக்கையில் கவலையே உருவமாகப் படுத்திருக்கும் தாயிடம் சந்துரு வந்து உட்கார்ந்தான். அன்புடன் அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்து விட்டு, ”அம்மா! உனக்கு வியாதியே ஒன்றுமில்லையாம். மன நிம்மதி இல்லாமல் உடம்பு கெட்டுப் போயிருப்பதாக டாக்டர் சொல்லுகிறார். உற்சாகமான மனம், அதற்கேற்ற சூழ்நிலை அமையவேண்டும் என்று அவர் கருதுகிறார். நீயோ கொஞ்சமாவது மனசுக்கு ஆறுதலைத் தேடிக்கொள்ள மாட்டேன் என்கிறாய்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.