(Reading time: 14 - 27 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

உட்காருவதும், பிறகு துணைவனைக் காணாமல் தேடி அலைவதுமாக இருந்த அந்தக் குருவியையே சற்று நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பார்வதி, அந்தக் குருவி முதன்முதல் தனியாக அங்கு வந்து கூடு - கட்டிக் குடியேறியபோது பார்வதி அதைக் கவனித்திருக்கிறாள். இப்போது சில நாட்களாக அது வேறொரு குருவியுடன் சிநேகம் பூண்டு சுற்றிக் கொண்டிருப்பதையும் கவனித்திருக்கிறாள். இன்று அந்த ஆண் குருவியைக் காணாமல், பெண் சிட்டுக்கு ஆண் சிட்டு எங்கே போயிற்றே! எப்போது போயிற்றோ ! பெண் சிட்டிடம் சொல்லிக்கொண்டு போயிற்றோ! சொல்லிக் கொள்ளாமலேயே போய், அலைய வைத்துக் கொண்டிருக்கிறதோ? பார்வதிக்கு அந்தக் குருவி மின் நிலை மிகுந்த வேதனையைத் தந்தது. பார்வதிக்கு மீண்டும் சேதுபதியின் நினைவு தோன்றவே அதை மறக்க விரும்பினாள்.

மீனாவின் தந்தை தனக்கு எழுதிய கடிதமும் அவருக்குத் தான் எழுதிப்போட்ட பதில் கடிதமும் ஞாபகத்துக்கு வந்தது.

நேராக மாடி அறைக்குச் சென்றாள். போகும்போது அந்த விசிறி வாழை அவளைப் பார்த்துச் சலசலப்பதுபோல் தோன்றியது. கீழே கிளைத்திருந்த முதிர்ந்த இலை ஒன்று மெளனமாக அவளை விசாரிப்பது போலவும் தோன்றியது. 'சே! இதெல்லாம் வீண் பிரமை!' என்று எண்ணிக்கொண்ட வளாய், படிகளைக் கடந்து அறைக்குள் பிரவேசித்தாள். மேஜை டிராயரைத் திறந்து மீனாவின் தந்தைக்குத் தான் எழுதிய கடிதத்தின் பிரதியை எடுத்துப் படித்தாள்....

ஐயா, தங்கள் கடிதம் கிடைத்தது. மீனா மிக நல்ல பெண். படிப்பிலும், விளையாட்டிலும் முதன்மையாக இருந்து இந்தக் கல்லூரிக்கே நல்ல பெயர் வாங்கித் தந்திருக்கிறாள்....... தாங்கள் எழுதியுள்ளபடி வேறொரு கல்லூரி மாணவனுடன் அவள் நட்பு பூண்டிருக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் அந்த நட்பில் குற்றம் எதுவும் இல்லை. மீனாவைத் தனியில் அழைத்து விசாரித்தேன். அவள் எதையும் மறைக்காமல், என்னிடம் உண்மையைக் கூறிவிட்டாள். கார்னேஷன் கல்லூரி மாணவனாகிய கோபாலன் என்பவனை டென்னிஸ் விளையாட்டின்போது அடிக்கடி சந்தித்திருக்கிறாள். ஒருவருக்கொருவர் நட்புப் பூண்டிருக்கின்றனர். இது விஷயமாக அந்தக் கல்லூரி பிரின்ஸிபால் திருவாளர் வேதாந்தத்தையும் நேரில் சந்தித்துப் பேசினேன். நான் அறிந்த வரையில் கோபாலன் மீனாவுக்கு ஏற்ற ஜோடியாக இருக்கிறான். கண்டிக்கத் தக்க முறையில் ஏதும் நடந்துவிடவில்லை. அவர்கள், இருவரையும் சந்தோஷமாக வாழவைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. கோபாலனுடைய தந்தைக்குக் கடிதம் எழுதி அவர் சம்மதத்தைப் பெற்றுத் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இதற்கு என்னுடைய மனப்பூர்வமான ஆசிகள். மீனாவின் எதிர்காலம் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.