(Reading time: 8 - 15 minutes)
Muthu Sippi
Muthu Sippi

மூர்த்தி சமாளித்துக் கொண்டு, "நான் பாலுவைத் தேடிக் கொண்டு வந்தேன் மாமி. நான் உள்ளே வரும் போது பவானி கொல்லைப் பக்கமாகவே கோவிலுக்குப் போவதைப் பார்த்தேன்" என்றான்.

  

கோவிலுக்குப் போனாளா? என்னைக் கூப்பிடாமல் போகமாட்டாளே?" என்று ஒரு கணம் தயங்கியபடி யோசித்தாள் பார்வதி. பிறகு என்னவோ நினைத்துக் சொண்டவளாக அவனைப் பார்த்து, "சரி. நானும் இப்படியே கோவிலுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டுக் கோவிலுக்குச் சென்றாள்.

  

மூர்த்தி சிந்தனை நிறைந்த மனத்துடன் வீட்டை அடைந்தான். அவன் மனத்திலே பல போராட்டங்கள் நடந்தன. கோவிலுக்குச் சென்ற பவானி பார்வதி மாமியிடம் தன்னைப் பற்றி ஏதாவது சொல்லி விடுவாளோ என்று அஞ்சினான். அதைத் தெரிந்து கொண்டு மாமா, "ஏண்டா! அந்த வீட்டுக்குள் உனக்கு என்னடா வேலை? மறுபடியும் உன் புத்தியைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டாயே' என்று ஏதாவது சொல்லி விட்டால் என்ன பண்ணுவது என்று மனத்துக்குள் வேதனைப்பட்டான்.

  

ஆனால் பெருந்தன்மையும், நிதான புத்தியுமுடைய பவானி கோவிலுக்குச் சென்றவுடன் முதலில் விநாயகப் பெருமானுடைய சன்னிதிக்குச் சென்று அவனைத் தோத்திரம் செய்து வணங்கினாள். அன்று கிருத்திகை யாதலால் மூலஸ்தானத்தில் அதிகக் கூட்டம். அங்கே நின்று உலகெலாமுணர்ந்து ஓதற்கரிய பரம் பொருளை மன முருகித் துதித்தாள்.

  

வீட்டிலே அரைமணிக்கு முன்னால் நடந்த சம்பவங்களை அவள் அநேகமாக மறந்துவிட்டாள். அவள் உள்ளத் தெளிவுடன் முருகனின் சமூகத்தை அடைந்தவுடன், ”பவானி! என்னைக் கூப்பிடாமல் கோவிலுக்கு வந்துவிட்டாயே! உன்னை வீட்டில் போய்த் தேடிய பிறகுதான் நீ இங்கு வந்திருப்பது தெரிந்தது. மூர்த்தி சொன்னான்" என்றாள் பார்வதி.

  

ஒரு கணம் பவானிக்கு மூர்த்தியின் பேச்சுக்கள் நினைவுக்கு வந்தன. அரையிலே பச்சைப்பட்டு தரித்து நவரத்தினங்களால் ஆன ஆபரணங்களை அணிந்து, கையிலே தாங்கியிருக்கும் சக்தி வேலுடன் கந்தவேல் நிற்கும் கண்கொள்ளாக் காட்சியை அவன் பார்க்காததனால் தான் 'கோவிலிலே என்ன இருக்கிறது?' என்று கேட்டான். கோவிலில் இல்லாத அழகு. இன்பம். வேறு எங்கே இருக்கிறது?

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.