(Reading time: 8 - 15 minutes)
Arumbu ambugal
Arumbu ambugal

கமலா, "அடிக்கடி வந்து கொண்டிருங்கள் அக்கா!" என்றாள்.

  

"வருகிறேன். ஆனால் இங்கே வரலாமா அல்லது ஏலமலைப் பாதையில் பத்தாவது மைல் கல்லில் மொட்டைப் பாறை ஒன்று இருக்கிறதே அங்கே சந்திப்போமா?" என்றாள் பவானி. "அங்கே யென்றால் மனம் விட்டுப் பேசலாம் இல்லையா?"

  

கமலா அதிர்ச்சி அடைந்தவளாக, "நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?" என்றாள்.

  

"அடி கள்ளி! எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைக்கிறாயா? பூனை போலிருந்து கொண்டு புலி போல் பாய்கிறவளாயிற்றே நீ. நானே காரில்கூடத் தனியாகப் போகத் தயங்குகிறேன். அம்மாதிரி ஏகாந்தமான இடங்களுக்கு நீ பஸ்ஸில் ஒருவருக்கும் தெரியாமல் போய் விட்டு வருகிறாய்!"

  

"அக்கா! மெதுவாகப் பேசுங்கள். அம்மா காதில் விழுந்தால் தோலை உரித்து விடுவாள்."

  

குரலைச் சற்றுத் தாழ்த்திக் கொண்ட பவானி, "அடுத்த தடவை இரண்டு பேரும் இந்தக் காரில் சேர்ந்தே போவோம். பொழுதோடு போய்விட்டு இருட்டுவதற்குள் திரும்பி விடுவோம். என்ன சொல்கிறாய்?" என்றாள்.

  

"சொல்ல என்ன இருக்கிறது? நான் எப்போதும் தயார். எனக்கென்ன கோர்ட்டா, ஆபீஸா? வெட்டிப் போது போக்கிக் கொண்டிருக்கிறேன்" என்று சற்றே ஆதங்கம் குரலில் எட்டிப் பார்க்கப் பேசினாள் கமலா. "ஆனால் அப்பா, அம்மா தான் சம்மதிப்பார்களோ என்னவோ?"

  

"நான் அழைத்துப் போகிறேன் என்றால் மறுக்க மாட்டார்கள். வரட்டுமா?" என்ற பவானி ஆயிரமாயிரம் வண்ணக் கனவுகள் காணக் கமலாவுக்கு வழிவகுத்து விட்டுக் காரில் ஏறிச் சென்றாள்.

  

மலை அரசனுடைய ராஜ்யத்தின் தலைநகர் போல விளங்கியது அந்தப் பகுதி. காப்பித் தோட்டங்களின் செயற்கை எழில் பல இடங்களில் மனோரம்மியமாக இருந்தது என்றால் அந்தப் பகுதிகளின் இயற்கை அழகு கொழித்துக் கொஞ்சியது. தலைநகரின் மையமான இடத்தில் ஓங்கி நின்ற அரண்மனையாக ஒரு மொட்டைப் பாறை. அரண்மனையா அது?

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.