(Reading time: 6 - 12 minutes)
Muthu Sippi
Muthu Sippi

அதெல்லாம் ஒன்றுமில்லை. எப்பொழுதாவது வருவாள். நான் என்ன பி.ஏ. வா படித்திருக்கிறேன்? அவளுக்கென்று படித்த சிநேகிதிகள் ஏகப்பட்டவர்கள் இருக்கிறார்கள்" என்றாள் கோமதி அலட்சியமாக,

  

படித்தவர்கள் படித்தவர்களுடன் தான் பழக வேண்டும். படித்தவர்கள் படிக்காதவர்-களுடன் பழகுவதோ பேசுவதோ கூடாது. ஏன் இப்படி எல்லாம் வித்தியாசங்களை நாமே வகுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் பவானிக்குப் புரியவில்லை .

  

சிந்தனை தோய்ந்த மனத்துடன் பவானி கொல்லைத் தாழ்வாரத்தில் போய் உட்கார்ந்தாள். அவள் மனத் திரையை விட்டு மூர்த்தியோ அவனுடைய செயல்களோ மறையவே இல்லை. பட்டண வாசத்தில் சாரி சாரியாக ஒரு அலுவலுமின்றித் திரிந்து வரும் ஆண்களையும் அவர்கள் நடுவில் ராதாவைப்போன்ற இளம்பெண்களின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் பவானி.

  

அப்போது பள்ளிக்கூடத்திலிருந்து பாலு வந்தான். கண்கள் சிவந்து உதடுகள் துடிக்க சோர்ந்த முகத்துடன் வரும் அவனைப் பார்த்துப் பவானி திடுக்கிட்டாள். "என்னடா பாலு! என்ன ஆயிற்று?" என்று கேட்டாள் பதறியவாறு. பாலு தாயின் அருகில் வந்து உட்கார்ந்தான். அழுது கொண்டே பையிலிருந்த புத்தகங்களை வெளியே எடுத்தான். அதில் இருந்த கணக்கு நோட்டுப் புத்தகத்தில் இருந்த ஒரு சித்திரத்தைத் தாயிடம் காண்பித்தான். பூசனிக்காய் போன்ற உடலில் மாங்காயைப் போன்ற தலையும் கொட்டையாக விழிகளுமாக வரையப்பட்டிருந்தது கீழே அந்தச் சித்திரத்திற்கு விளக்கமும் தரப்பட்டிருந்தது . "குரங்கு மூஞ்சிபாலு! உன்னோடே பேச மாட்டேன்!" என்று எழுதியிருந்தது. எழுதியவர் தம் பெயரையும் போட்டிருந்தார். இந்தப் பிரபல ஓவியர் வேறு யாருமில்லை சுமதி தான்.

  

பவானி இதைப்பார்த்ததும் 'பக்' கென்று சிரித்து விட்டாள். அம்மா சிரிப்பதைப் பார்த்ததும் பாலுவுக்கு அழுகை அதிகமாக வந்தது.

  

பாலு, இதெல்லாம் விளையாட்டுக்குப் போட்டிருக்கிற படம் அப்பா. உன் முகம் குரங்கு மாதிரி இல்லை யென்பது உனக்குத் தெரியாதா? சே! சே! சுமதி உன்னை விடசின்னவள். அவள் பேரில் கோபித்துக் கொண்டு அழலாமா? வா, டிபன் சாப்பிட்டுவிட்டு விளையாடப் போகலாம்..."

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.