(Reading time: 28 - 56 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

  

ஒரு நாள் காலையில் நான் படுக்கையை விட்டு எழுந்தவுடன் வெளியே மாணவர்கள் இங்கும் அங்கும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்ததைக் கண்டேன். என் அறைப்பக்கம் ஒருவன் தலைநீட்டி "இன்று கல்லூரிக்கு யாரும் போகக்கூடாது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்" என்று சொல்லிவிட்டு விரைந்து பக்கத்து அறைக்குச் சென்று அங்கும் அவ்வாறே சொல்லிவிட்டு விரைந்தான். என் மனம் அமைதி இழந்தது. "எவ்வளவு துன்பம்! காலம் எல்லாம் இப்படிச் சிறைக்குப் போய்க்கொண்டே இருந்தால், அவருடைய வாழ்க்கை என்ன ஆவது?" என்று அவருடைய வாழ்வுக்காக இரக்கப்படுவது போல் கலங்கினேன். என்னுடைய அனுபவமும் காந்தியடிகளைப் பற்றி அறிந்த அறிவும் அந்தக் காலத்தில் அவ்வளவுதான் இருந்தது. அடுத்த ஆண்டில் திரு.வி.க. எழுதிய "காந்தியடிகளும் மனிதவாழ்க்கையும்" என்ற புத்தகத்தைப் படித்த பிறகுதான், அவருடைய உண்மையான பெருமையையும் உயரிய குறிக்கோளையும் உணர்ந்தேன்.

  

அறையைப் பூட்டிவிட்டு வெளியே சுற்றி வந்து பார்த்தேன். சில மாணவர்கள் கண்கலங்கி உட்கார்ந்திருந்தார்கள். வேறு சிலர், "படிப்பும் வேண்டா, மண்ணாங்கட்டியும் வேண்டா. ஆங்கிலேயனைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை" என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சில மாணவர்கள், "இன்றைக்கு ஒரு விடுமுறை; நம்பாடு கொண்டாட்டம் தான். நல்ல சினிமாவுக்குப் போகலாம்" என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர், "நம் தலைமுறையில் ஒரு பெரிய உத்தமரைப் பெற்றிருக்கிறோம். திருவள்ளுவர், புத்தர், ஏசு, திருநாவுக்கரசர் காலத்தில் நாம் இருந்திருந்தால் அவருடைய அடியாராகி அவர் வழியில் நடக்கமாட்டோமா? காந்தியடிகள் காலத்தில் நாம் பிறந்து வாழ்ந்தும், இப்படிப் பயன் இல்லாத கல்லூரிப் பட்டத்துக்காக நல்ல வாய்ப்பை நெகிழவிடலாமா?" என்று வருந்திக் கொண்டிருந்தார்கள். மாணவர் இருவர், பெட்டி படுக்கை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஊர்க்குச் செல்ல ஆயத்தம் ஆனார்கள். "எங்கள் ஊருக்குப் போய் அங்கே சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர்ந்து சிறைக்குப் போகப்போகிறோம்" என்று சொன்னார்கள். ஒரு மாணவன் புத்தகம் முதலியவற்றைத் தன் நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னையில் உள்ள சத்தியாக்கிரகக் குழுவை நாடிப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன். அந்த நிலையில் மாலன் வந்து என்னோடு கலந்து கொண்டான். அவனிடம் நான் சில செய்தி சொல்லுமுன்பே அவன் பல செய்திகளைச் சொல்லத் தொடங்கினான். "பெரும்பாலும், தேர்வுக்கு நன்றாகப் படிக்காத மாணவர்கள் தான் இதில் மிகுதியாக ஈடுபடுவார்கள். நீ பார். தேர்வுக்குப் போய்த் தவறிவிட்டுப்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.