(Reading time: 12 - 24 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

   

சிறிது காலம் பொறுத்துத் தன் தந்தையின் மனம் அதை ஏற்கிற பக்குவம் பார்த்து மீண்டும் இதை அவரிடம் தெரிவிப்பதாக ரவி அப்போது அவளுக்கு வாக்களித்தான். அவனது பதில் கமலிக்குத் திருப்தியளித்தது.

   

வசந்தி பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்ற பின் கமலிக்கு மனம் விட்டுப் பழகுகிற சிநேகிதி என்று வேறு யாரும் சங்கரமங்கலத்தில் கிடைக்கவில்லை. காமாட்சியம்மாளின் வெறுப்புக்கும் சம்மதமின்மைக்கும் எதிர்ப்புக்கும் இடையே அவளிடமிருந்தே - அவளை மானஸீக குருவாகக் கொண்டே பலவற்றைக் கற்றுக் கொண்டாள் கமலி. நடுநடுவே அந்த வீட்டில் சில வேதனைக்குரிய சம்பவங்கள் நடந்தாலும் அது கமலி வரையில் தெரிந்து அவள் மனம் வருந்தாமல் சர்மாவும் ரவியும் பார்த்துக் கொண்டார்கள்.

   

இதற்கிடையில் காமாட்சியம்மாளின் பிறந்தகம் இருந்த கிராமத்திலிருந்து அவளுக்குப் பெரியம்மா முறை ஆகவேண்டிய ஒரு வயதான விதவைப் பாட்டி கோவில் திருவிழாவுக்காகச் சங்கரமங்கலம் வந்து சேர்ந்திருந்தாள். சிவன் கோயில் திருவிழாவுக்காக ஒரு வாரமோ, பத்து நாளோ தங்கி விட்டுப் போவது பாட்டியின் உத்தேசமாக இருந்தது. பாட்டி பரம வைதீகம். துணி மணிகள் ஜெபமாலை அடங்கிய கம்பளி மடிசஞ்சியோடு தன் கையாலேயே கிணற்றில் தண்ணீர் தூக்கிக் கொள்வதற்குத் தேங்காய்க் கமண்டலமும் கயிறும் கூடக் கையோடு கொண்டு வந்திருந்தாள் அந்தப் பாட்டி.

   

ஓர் இளம் வயசு வெள்ளைக்காரியை அந்த வீட்டில் பார்த்ததும் பாட்டி ஒரு சிறு கலகத்தையே மூட்டிவிட முயன்றாள்.

   

"இதென்னடீ காமு! யாரோ வெள்ளைக்காரியை வீட்டிலே தங்க வச்சிண்டிருக்கே? இதெல்லாம் நம்ம குலம் கோத்திரத்துக்கு அடுக்குமோடீ? நான் எப்படி மனசு துணிஞ்சு இனிமே இங்கே தங்கறது அம்மா?" - என்று பாட்டி காமாட்சியம்மாளைக் கேட்டாள்.

   

"என்ன பண்றது பெரியம்மா? எனக்கும் சுத்தமாப் பூண்டோடு இதெல்லாம் பிடிக்கலே. நீங்களே இந்தப் பிராமணரைக் கேளுங்கோளேன்... அப்பவாவது இவருக்கு உறைக்கறதான்னு பார்க்கலாம்" - என்று காமாட்சியம்மாளிடமிருந்து பாட்டிக்குப் பதில் கிடைத்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.