(Reading time: 12 - 24 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

காமாட்சியம்மாள் புரிந்து கொண்டிருந்தபடி, அந்த வீட்டில் சர்மா, ரவி, பார்வதி, குமார் எல்லாருமே கமலியின் கட்சி. காமாட்சியம்மாள் மட்டும் இதிலே தனியாகக் கமலியை எதிர்த்து வந்தாள் என்றாலும் தன் எதிர்ப்பை அவளால் வெளிகாட்ட முடியாமலிருந்தது. இப்போது இந்தப் பெரியம்மாவுன் வரவு அந்த எதிர்ப்பை வெளிகாட்டப் பயன்பட்டது. பாட்டிகளுக்கே உரிய நச்சரிப்புக் குணத்தோடு ரவியிடம், குமாரிடம், பார்வதியிடம் என்று ஒவ்வொருவரிடமாக இதைக் கிளப்பிப் பார்த்தாள் அந்தப் பாட்டி. அந்த வீட்டில் காமாட்சியம்மாளைத் தவிர வேறு யாரும் கமலி விஷயமாகப் பாட்டியிடம் பிடி கொடுத்துப் பேசவே இல்லை. கடைசியாக சர்மாவிடமே கேட்டாள் பாட்டி. அதையும் வீட்டில் வைத்துக் கேட்காமல் சிவன் கோவில் ரிஷப வாகனப் புறப்பாட்டின் போது கோவில் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் சர்மாவிடம் இதைக் கேட்டாள் பாட்டி.

   

"எல்லா சாஸ்திரமும் தெரிஞ்சவாளே இப்பிடிப் பண்ணினா என்ன செய்யறது? இந்தக் கட்டைலே போற வயசுலே எனக்கு இப்படியெல்லாம் தீட்டுப் படணுமோ?" -

   

"அவளாலே உங்களுக்கு ஒரு தீட்டும் வந்துடாது. இந்த ஆசார அனுஷ்டானங்களைப் பொறுத்தவரை அவ நம்மை எல்லாம் விடப் படுசுத்தம்! கவலைப்படாம நீங்க பாட்டுக்கு இருங்கோ..." என்றார் சர்மா.

   

"அதெப்படி முடியும்? நம்ம மனசறிஞ்சே..." என்று விடாமல் மேலும் ஏதோ தொண தொணத்தாள் பாட்டி.

   

"சௌகரியப் படாட்டா வேறே எங்கே தங்கணுமோ தாராளமா அங்கே போய்த் தங்கிக்கலாம் நீங்க..." - என்று தன் வாயால் முந்திக் கொண்டு சொல்லி விடாமல் பாட்டியே அவள் வாயால் அதை சொல்லட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தார் சர்மா.

   

"நான் சங்கர் சுப்பன் ஆத்துலே போய்த் தங்கிக்கலாம்னு பார்க்கிறேன்."

   

"நீங்களே இப்படிச் சொல்றப்போ நான் உங்களைப் போக விடமாட்டேன்னா தடுக்க முடியும்? அப்புறம் உங்க இஷ்டம்" - என்று அந்த உரையாடலை முடிக்க வேண்டிய இடத்தில் கச்சிதமாக முடித்தார் சர்மா. பாட்டி புறப்பட்டுப் போய் விட்டாள். ஆனால் காமாட்சியம்மாளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.