Flexi Classics தொடர்கதை - துளசி மாடம் - 18 - நா. பார்த்தசாரதி
வைக்கோற் படைப்பும், பசுமாடுகளும் எரிந்து போனது பற்றி அப்பாவும் உள்ளூற வருந்தியிருக்கலாம்! ஆனால் அது தண்ணீரில் அம்பெய்த மாதிரிச் சுவடு தெரியாமல் உடனே மறைந்து போயிருந்தது. அது பற்றிய ஊர் வம்பும் அவர் காதில் விழுந்தது. அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த வில்லை.
கறக்கிற நிலையிலுள்ள வேறு பசு ஒன்றை அனுப்பி வைக்கும்படி பூமிநாதபுரத்திலுள்ள தெரிந்த மனிதர் ஒருவருக்கு உடனே தகவல் மட்டும் சொல்லி அனுப்பினார்.
அம்மா அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டாள். ஊர் வம்பு அவள் காதிலும் விழுந்தது.
"மடத்து மனையைத் தெய்வ நம்பிக்கை இல்லாதவனுக்கு வாடகை பேசிவிட்டார். இங்கே வீட்டிலேயும் தீட்டுக் கலக்க விட்டார். தெய்வத்துக்கே பொறுக்கலைன்னு ஊர்லே பேசிக்கறாடீ காமு என்று பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லிய பின் பார்வதியை விசாரித்துக் கமலி தான் ஊரில் இல்லாத போது கோபூஜை, துளசி பூஜை எல்லாம் செய்த விவரம் உட்பட அனைத்தும் காமாட்சியம்மாள் தெரிந்து கொண்டு விட்டாள்.
"இவளை யாரு இதெல்லாம் பண்ணச் சொன்னா இப்போ? பல் தேய்க்காமே பெட்காப்பி சாப்பிடற தேசத்திலிருந்து வந்தவள். ஆசார அனுஷ்டானம் தெரியாமே இதெல்லாம் இவள் ஏன் பண்ணணும்? அதனாலே தான் ஆத்துலே இப்படி அசம்பாவிதமெல்லாம் நடக்கிறது. வரவர இந்தாத்துலே கேள்வி முறையே இல்லாமே யார் எதை வேணும்னாப் பண்ணலாம்னு ஆயிடுத்து. தலைமுறை தலைமுறையா இந்தாத்துப் புருஷாளுக்குச் சமமாப் பெண்டுகளும் வைதீகமா இருந்து கோபூஜை, துளசிபூஜை எல்லாம் பண்ணிண்டு வாரோம். வீடு சிரேயஸ்ஸா இருக்குன்னா அந்தப் பூஜா பலனாலேதான் அப்பிடி இருக்கு. இதெல்லாம் பண்ண வெள்ளைக்காரி இவளுக்கு என்ன யோக்கியதை இருக்கு? வரட்டும்... இதை நான் வெறுமனே விட்டுடப் போறதில்லே. இந்தப் பிராமணன்கிட்டேயே நேருக்கு நேர் கேட்டுடப் போறேன். அவ யாரா இருந்தா நேக்கு என்ன? நேக்கொண்ணும் பயமில்லே..." என்று பார்வதியிடம் இரைந்து கூப்பாடு போட்டாள் காமாட்சி அம்மாள்.
"கமலி காலங்கார்த்தாலே ஸ்நானம் பண்ணிட்டுப் பக்தி சிரத்தையோட மடிசார் வச்சு நீ புடவை கட்டிப்பியே அது மாதிரி கட்டிண்டு அக்கறையோடு தான் எல்லாம் பண்ணினாம்மா" என்று