Flexi Classics தொடர்கதை - பனித்துளி - 03 - சரோஜா ராமமூர்த்தி
நீலா போட்டியிட்டாள்...
மீனாட்சியின் மத்தியானத் தூக்கம், கலைந்ததும் முதன் முதலில் அவசரமாக சங்கரனின் ஜாதகத்தைப் பெட்டி யிலிருந்து எடுத்து வைத்துக்கொண்டாள். அன்று சாயங்காலம் டாக்டர் மகாதேவன் வந்தால் சாக்குப்போக்கு ஒன்றும் சொல்லாமல் ஜாதகத்தைக் கொடுத்து வேண்டும் என்றும் தீர்மானித்துக் கொண்டாள். ஜாதகத்தை எடுத்துச் சமையலறையில் இருக்கும் சுவாமி படத்தின் அருகில் வைத்து விட்டுச் சமையலறையை ஒரு கண்ணோட்டம் பார்த்தாள் மீனாட்சி.
இரண்டாந்தரம் சிற்றுண்டிக்காக அங்கே யாதொரு ஏற்பாடும் நடக்கவில்லை. மணி இரண்டுக்கு மேல் ஆகியும் வீட்டில் எல்லோரும் பேசாமல் இருப்பதைப் பார்த்ததும் அவளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பரபர வென்று ஆட்டுக் கல்லை அலம்பி உளுத்தம் பருப்பை உரலில் இட்டு அரைக்க ஆரம்பித்தாள்.
சமையல் கட்டுக்கு அடுத்தாற் போல் தையல் மிஷினில் ஏதோ தைத்துக் கொண்டிருந்த சம்பகம் திடுக்கிட்டு எழுந்தாள். காலைச் சமையலுக்கு அப்புறம் சமையல்கார அம்மாமி யாரோ உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லிக் கொண்டு போய்விட்டது அவள் நி னைவுக்கு வந்தது. பயத்துடன் சமையலறை நிலைப்படி அருகில் வந்து நின்று, "அம்மா! நான் அரைக்கிறேன். நீங்கள் எழுந்திருங்கள்” என்றாள் சம்பகம். மீனாட்சி கோபத்தால் குழவியை வேகமாகச் சுற்றத் தொடங்கினாள். சம்பகம் மேடை அருகில் சென்று கும்மட்டியைப் பற்ற வைத்து தண்ணீர் வைத்து விட்டு மறுபடியும்,"அம்மா! எழுந்திருக்கிறீர்களா?" என்று விநயமாகக் கேட்டாள்.
"எழுந்திருக்க வேண்டுமா? இவ்வளவு நாழி வேலை இருக்கிறது என்று உனக்குத் தெரியவில்லையே? இப்போ தான் தெரிஞ்சுதாக்கும்!” என்று படபடவென்று கூறிக் கொண்டே உரலை விட்டு எழுந்தாள் மீனாட்சி.
சம்பகம் பதில் பேசாமல் உரல் அடியில் உட்கார்ந்து அரைக்க ஆரம்பித்தாள்.
"ஒரு நாளைக்குச் செய்ய இப்படி மூக்கால் அழுகிறாயே, உன் புருஷன் சம்பாத்தியம் பாழாகவா போகிறது இங்கே? அவன் சம்பாதிக்க ஆரம்பித்துக் காலணா காசு கூட நாங்கள் கண்ணால் பார்க்க வில்லை. உன்னுடைய அதிர்ஷ்டம் சரியாக இருந்தால் அவன் ஏன் இப்படிக் கண் காணாத இடத்தில் இருக்கிறான்?" என்றாள் மீனாட்சி.