இங்கே இருப்பதால் உன் மஞ்சக் காணி சொத்தா குறைந்து போகிறது? பாவம்! புருஷனைப் பிரிந்து இருக்கும் துக்கம் போதாதென்று நீ ஏன் அதை வாட்டி எடுக்கிறாய்?" என்று ஒரு அதட்டல் போடுவார், பதிலுக்கு முணு முணுத்துக் கொண்டே போய் விடுவாள் மீனாட்சி. அன்றையப் பொழுதுக்கெல்லாம் சம்பகத்துக்குத் திட்டுகளும் இடிச் சொற்களும் பலமாகக் கிடைக்கும்.
மாமனாருக்காக அவர் மேஜை மீது காபியையும், சிற்றுண்டியையும் வைத்து விட்டு சம்பகம் உள்ளே திரும்பும் போது, வாயிற் கதவைத் திறந்து கொண்டு டாக்டர் மகாதேவன் வந்து சேர்ந்தார். வந்தவரை வரவேற்று உட்காரச் சொல்லி விட்டு சர்மா, "அம்மா சம்பகம்! டாக்டர் வந்திருப்பதாக உன் மாமியாரிடம் சொல்" என்று கூறினார்.
சம்பகம் சமையலறைக்குச் சென்று விஷயத்தை அறிவித்தவுடன் சுவாமி படத்து அருகில் சுருட்டி வைக்கப் பட்டிருந்த ஜாதகத்தை அவசரமாக எடுத்தாள் மீனாட்சி. பெரிய அளவில் மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்பாளி படம் அது. மீனாட்சி ஜாதகத்தைச் சரேலென்று எடுத்த வேகத்தில், சுவரிலிருந்து கயிறு அறுபட்டு படம் கீழே விழுந்து, கண்ணாடி சுக்கு நூறாக உடைந்து பூஜை அறை முழுவதும் சிதறியது
'ஏண்டி! படத்தின் கயிறு சரியாக இருக்கிறதா என்று பாக்கமாட்டாயா என்று கூறிக் கொண்டே கீழே சிதறி இருந்த கண்ணாடித் துண்டுகளையும், ஜாதகம் எடுக்கும் போது நேர்ந்த சகுனத் தடையையும் பொருட்படுத்தாமல் மீனாட்சி முன் கட்டுக்கு விரைந்தாள்.
உடைந்த படத்துள், கருணையே வடிவான அம்பிகை யின் வண்ணப் படம் சிறிதும் சேதமடையாமல் இருந்தது.
"தாயே! இந்த குடும்பத்துக்கு யாதொரு கஷ்டமும் வராமல் காப்பது உன்னுடைய கருணை அம்மா!” என்று வாய் விட்டு வேண்டிக் கொண்டே சிதறிக் கிடந்த கண்ணாடித் துண்டுகளைப் பெருக்கிச் சுத்தம் செய்வதில் முனைந்தாள் சம்பகம். "மைத்துனர் சங்கரனின் குணத்துக்கு அவர் நன்றாக இருக்க வேண்டும்" என்று அவள் மன அந்தரங்கத்தில் ஒரு வேண்டுகோள் எழுந்தது.
"அவருக்குக் கல்யாண விஷயம் பேச ஆரம்பிப்பதற்கு முன்பு படம் உடைந்ததே! எதன் ஆரம்பமோ இது” என்று வேறு அவள் மனம் குழம்பிக் கொண்டிருந்தது.