டாக்டர் மகாதேவன் சங்கரனின் ஜாதகத்தை வாங்கிக் கொண்டு அவருடைய பெண் நீலாவின் ஜாதகத்தை மீனாட்சி அம்மாளிடம் கொடுத்தார். 'சங்கரனைத்தான் நேரில் பல இடங்களில் பார்த்திருப்பதால் பிள்ளையைப் பார்க்க வேண்டும் என்கிற அபிப்பிராயம் தனக்கு இல்லை என்பதாகவும், நீலாவும் சங்கரனை அநேக இடங்களில் பார்த்து தன் சம்மதத்தை அறிவித்ததன் பேரில்தான் இந்த விவாகத்துக்குத் தான் முயற்சி எடுத்துக்கொண்டிருப்பதாக வும் தெரிவித்தார். பெண்ணைப் பார்ப்பதற்கு மீனாட்சி அம்மாளையும், சங்கரனின் தமக்கை ருக்மிணியையும் வரச் சொல்லி அழைத்தார். மரியாதைக்காக மேஜைமீது வைக்கப் பட்ட சிற்றுண்டியைச் சிறிது ருசிபார்த்து விட்டு, ஒரு பெரிய கும்பிடோடு விடை பெற்றுக் கொண்டார் அவர். அந்த ஹாலை விட்டு அவர் வெளியேறி ஐந்து நிமிஷங்கள் வரையில் புகை போல் சூழ்ந்திருந்தது அவர் குடித்த சுருட்டின் புகை!
"வருகிற இடத்திலுமா ஊத வேண்டும் சுருட்டை!" என்று தன் அருவருப்பை முகத்தைச் சுளித்து அறிவித்துக் கொண்டாள் மீனர்ட்சி.
"நாற்றம் சகிக்கவில்லை!" என்று உதட்டை மடக்கித் தன் அபிப்பிராயத்தைக் கூறிவிட்டு ருக்மிணி, அன்று மாலை பெண் பார்ப்பதற்காகத் தன்னை அலங்காரம் செய்து கொள்வதில் முனைந்தாள்.
'ஏன்னா! நீங்களும் வருகிறீர்களா எங்களோடு?” என்று சர்மாவைக் கொஞ்சியவாறு கேட்டாள் மீனாட்சி. நாணிக் குழைந்து அவள் கேட்ட மாதிரியிலிருந்து அவளே ஒரு கல்யாணப் பெண்ணைப் போல் இருந்தாள் என்று சொல்லலாம்.
சர்மா சாய்வு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார். பிறகு தொண்டையைக் கனைத்துக் கொண்டு, 'மீனு! எந்தக் காரியத்தையும் செய்வதற்கு முன்பு நன்றாக யோசனை செய்ய வேண்டும். டாக்டரின் பெண்ணை நான் இரண்டு மூன்று தடவைகள் பார்த்திருக்கிறேன். பெண் 'ரொம்பவும் நாகரிகமாக இருப்பாள். மாமியார், மாமனார் எதிரில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. காபி அவள் இருக்கும் இடத்துக்குத்தான் அனுப்ப வேண்டும் சம்பகம் மாதிரி நீ சொல்வதை யெல்லாம் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க மாட்டாள். நாளைக்குக் கல்யாணம் நடந்த பிறகு எந்தவித மனஸ்தாபங்களுக்கும்