Flexi Classics தொடர்கதை - பனித்துளி - 04 - சரோஜா ராமமூர்த்தி
சங்கரனின் சங்கடம்
அன்று ராமபத்திர அய்யர் ராஜம்பேட்டைக்கு ஏதோ அலுவலாகப் போய் இருந்தார். விசாலாட்சி தன் வழக்கம் போல் மத்தியானப் பொழுதைக் கழிக்கப் போய்விட்டாள். கீரைப் பாத்திகளுக்கு தண்ணீர் தெளித்துவிட்டுக் காமு உள்ளே வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து ஆடத் தொடங்கினாள். "இன்பம் வருகுதென்று சொல் சொல் கிளியே!" என்று பாடிக் கொண்டே ஆடினாள். வெறுமனே சாத்தியிருந்த கதவைத் திறந்துகொண்டு சங்கரன் உள்ளே வந்தான். அவன் கையில் சிறிய பெட்டி ஒன்றும், படுக்கை ஒன்றும் இருந்தன.
"அப்பா இல்லைபோல் இருக்கிறது?" என்று காமுவைப் பார்த்துக் கேட்டவன், உரிமையோடு அங்கு இருந்த பெஞ்சியில் உட்கார்ந்து கொண்டான்.
காமுவின் உடல் ஒரு முறை நடுங்கியது. சட்டென்று எழுந்து ஊஞ்சல் சங்கிலியைப் பிடித்துக்கொண்டு நின்றாள். யாருடைய வரவை எதிர்பார்த்து ஏங்கி யிருந்தாளோ, அவனே நேரில் வந்து பேசுகிறான். வெட்கத்தால் முகம் குப்பென்று சிவக்க, தலையைக் குனிந்து கொண்டாள் காமு.
ஆ...மா...ம்" பாழும் வார்த்தைகள் தொண்டை யிலேயே சிக்கிக் கொண்டன.
"நாளைக்கு ஊருக்குப் போகிறேன். இங்கே வந்து இரண்டு நாட்கள் கூட தங்கவில்லை என்று உன் அப்பா கோபித்துக் கொள்ளப் போகிறாரே என்று வந்து விட்டேன்" என்றான் சங்கரன். அவன் மட்டும் நெடு நாள் பழகியவன் போல் அவளுடன் பேசினான்.
"இதோ வந்து விட்டேன். அப்பா இன்னும் அரை மணியில் வந்து விடுவார்"-சமையலறைப் பக்கம் போவ தற்குத் திரும்பினாள் காமு.
"காபி போடுவதற்கு அவசரம் ஒன்றும் இல்லை. உன்னை ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்றே ஓடி வந்திருக்கிறேன்."
சங்கரன் ஆவலுடன் காமுவைப் பார்த்தான். தந்தப் பதுமை போல் நிற்கும் அவளுக்குத் தன்