வித்தியாசம் ஏற்பட்டிருக்கிறது?" என்றார் அவர், உணர்ச்சியுடன். அவர் தொண்டை கரகரத்தது.
"அதனால் என்ன, மாமா? ஸ்ரீபரமாத்மா மனது வைத்ததும் சுதாமனை குபேரனுக்குச் சமமாகச் செய்துவிட வில்லையா? எங்களிடம் தான் பணம் இருக்கிறதே! இன்னொருவர் கொடுத்து எங்களுக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லையே?" என்றான் சங்கரன்.
"உனக்கு உலகம் தெரியவில்லை அப்பா. பணம் பணத்துடன் தான் சேரும். காமுவுக்கு ஏதாவது சுமாரான இடமாகப் பார்த்துச் சொன்னாயானால் போதும் அப்பா!" என்றார் அவர்.
"காமுவைக் கல்யாணம் செய்து கொள்ள எனக்கு இஷ்டமிருக்கிறது. அவள் சம்மதத்தைக் கேட்டுச் சொல்லி விடுங்கள், மாமா! மற்ற ஏற்பாடுகளை நான் அப்பா மூலமாய்ச் செய்து கொள்ளுகிறேன்" என்றான் சங்கரன்.
கொல்லையில் மாட்டுக்குத் தீனி வைத்து முடித்து விட்டுக் காமு உள்ளே வந்தாள். சங்கரன் கூறிய வார்த்தைகள் கணீரென்று அவள் காதுகளில் விழுந்தன.
"இது உண்மையா? கனவா?" என்று பல தடவைகள் தன்னையே கேட்டுக் கொண்டு, சமையலறைக்குள் சென்றாள் காமு. அவள் முகம் நாலைந்து தினங்களாக இழந்திருந்த பழைய சாந்தியை மீண்டும் பெற்றது போல் புன்னகையுடன் காணப்பட்டது.
---
மீனாட்சியும், ருக்மிணியும் டாக்டர் மகாதேவனின் வீட்டினுள் நுழைந்தவுடனேயே சோபாவில் ஒய்யாரமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து இருவரும் திடுக்கிட்டனர். ஊதா நிற 'ஸாடின்' பைஜாமாவும், தங்கநிற 'ஸில்க் ஜிப்பாவும்' அணிந்து, அதன் மேல் மெல்லிய மஸ்லின் மேலாக்கைப் பறக்க விட்டிருந்தாள் நீலா. காதளவு தீட்டி விடப்பட்ட மையும், இரட்டைப் பின்னலும், காதுகளில் ஒளிரும் முத்து லோலாக்கும், உதடுகளில் பூசப்பட்டிருந்த சிவப்புச் சாயமும் அவளை நாகரிகப் பெண்களில் முதன்மையானவள் என்பதைச் சொல்லாமல் விளங்க வைத்தன.