அவள் வாயிற்படி இறங்குவதற்கு முன்பு, அங்கு வந்து நின்ற ரிக்ஷா வண்டியிலிருந்து கமலா அவசரமாகக் கீழே இறங்கினாள். பெருமூச்சு வாங்க, "இதோ பார் காமு! அன்றே உன்னிடம் கூறவேண்டும் என்றிருந்தேன். நீலாவும், சங்கரனும் நாளன்றைக்கு எங்கள் வீட்டிற்கு டீ சாப்பிட வருகிறார்கள். அதுவும் கல்யாணம் ஆன பிறகு முதல் முறை இப்போதுதான் எங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். விருந்து சாப்பிடுகிறார்கள். வெறுங்கையுடன் அனுப்பினால் நன்றாக இராது. இந்தப்பட்டுத் துணியை வாங்கி வந்தேன். நீலாவிடம் போய் ரவிக்கைக்காக அளவும் வாங்கி வந்திருக் கிறேன். அழகாகத் தைத்துவிடு. என்ன தெரிந்ததா?" என்று மருதாணிச் சிவப்பில் கண்ணைப் பறிக்குப் பட்டு ஒன்றைக் காமுவிடம் கொடுத்தாள் கமலா.
காமுவின் மனத்தில் க்ஷண காலத்தில் ஆயிரமாயிரம் எண்ணங்கள் தோன்றின. வாழ்க்கையில் முதன் முதலாகக் காலடி வைக்கும்போதே அவளுக்குப் போட்டியாக வந்த நீலாவுக்கா அவள் ரவிக்கை தைத்துக் கொடுக்க வேண்டும்? அந்த அழகிய சிவப்பு வர்ணப் பட்டு ரவிக்கையை அணிந்து கொண்டு சங்கரனின் மனத்தை அவள் மகிழ்விக்கப் போகிறாள். அவர்கள் மகிழ்ந்தால் என்ன? மகிழாமல் இருந்தால் காமுவுக்கு என்ன? பணமில்லாத ஏழைப் பெண் என்று ஒதுக்கி வைத்த பணக்கார வீட்டுப் பெண்ணுக்கு, பணக்கார வீட்டு மருமகளுக்கு அவள் ரவிக்கை தைத்துக் கொடுக்க வேண்டுமா? கையில் வைத்திருந்த பட்டை லேசாகத் தடவியபடியே காமு யோசிப்பதைப் பார்த்து, "என்ன காமு! ஒரே யோசனையில் ஆழ்ந்து விட்டாய்? முடியுமா இல்லையா? உனக்கு முக்கியமான வேலை இருந்தால் நானே தைத்து விடுகிறேன்!" என்றாள் கமலா.
வருவாய் போதாமல் கஷ்டப்பட்ட காமுவுக்குத் தையல் இயந்திரமும், அதற்குத் தேவையான துணிகளும், புஸ்தகங் களும் கொடுத்து உதவிய கமலாவின் வார்த்தையைத் தட்ட முடியவில்லை."இதென்ன பிரமாதம்! தைத்து விடுகிறேன்' என்று கூறி. துணியை உள்ளே எடுத்துப்போய் வைத்தாள்.
ஊரில் எத்தனையோ பேர்களுக்குத் துணி தைக்கும் காமுவுக்கு அந்தப் பட்டை மட்டும் பிரத்தியேகமான முறை யில் அழகாக வெட்டித் தைக்க வேண்டும் என்கிற ஆவல் தோன்றியது. மிக உயர்ந்த மாதிரியான். மோஸ்தரில் அதை வெட்டி அழகான ரவிக்கையாக ஒரு மணி நேரத்துக்குள் தைத்து முடித்து விட்டாள். ரவிக்கையை மடித்துக் கையில் எடுத்துக் கொண்டு சமையல் அறையில் ஏதோ வேலையாக இருந்த தாயிடம் சென்றாள் காமு.